Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

உணவு பொருள் விற்பனை அனுமதி பெற 10 நாட்கள் அவகாசம்:

Print PDF

தினமலர் 03.08.2010

உணவு பொருள் விற்பனை அனுமதி பெற 10 நாட்கள் அவகாசம்:

செஞ்சி:செஞ்சியில் உரிய அனுமதி இல்லாமல் உணவு பொருள் விற்பனை செய்பவர்கள் 10 நாட்களுக்குள் அனுமதியை பெற வேண் டும் என சுகாதாரத்துறை உதவி இயக்குனர் கிருஷ் ணராஜ் தெரிவித்துள்ளார்.செஞ்சியில் குளிர்பான கடை மற்றும் உணவு பொருள் விற்பனை செய் யும் கடைகளில் சுகாதாரத்துறை உதவி இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் நேற்று அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத் தினர். டாக்டர் மலர்விழி, உணவு ஆய்வாளர் நல்லதம்பி, செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்ச் செல்வன், சுகாதார ஆய்வா ளர் ஏழுமலை ஆகியோர் அடங்கிய குழுவினர் கடைகளில் இருந்து உணவு பொருட்களின் மாதிரியை சீல் வைத்து எடுத்து சென்றனர்.ஆய்விற்கு பின்னர் சுகாதாரத்துறை உதவி இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ் நிருபர்களிடம் கூறியதாவது.உணவு பொருள் விற் பனை செய்யும் கடைகள், உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகள் அனைத்தும் கட்டாயம் சுகாதாரத்துறையிடமும், உள்ளூர் நிர்வாகத்திடமும் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.வீடுகளில் இது போன்று கடை நடத்துபவர்கள் புளு பிரிண்ட் கொடுத்து உரிய அனுமதி வாங்க வேண் டும். செஞ்சியில் ஓட்டல், உணவு பொருள் விற்பனை செய்பவர்களும் அதிகளவில் இதற்கான உரிமம் இல்லாமல் கடை நடத்துகின்றனர். இவர்கள் 10 நாட் களுக்குள் உணவு ஆய்வா ளர் மற்றும் பேரூராட்சி செயல்அலுவலர் மூலம் உரிமம் வாங்க வேண்டும். தவறினால் அதிகாரிகள் சோதனையின் போது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் கடைகளுக்கு சீல் வைப்பது, உரிமையா ளர் கைது, வழக்கு பதிவு என எந்தவகையான நடவடிக்கையும் இருக்கலாம்.பால் பொருட்கள் விற் பனை செய்பவர்கள் அதில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யக்கூடாது. மழைக்காலத்தில் ஓட்டல்களில் சுடுதண்ணீர் வழங்க வேண் டும். சுகாதாரமில்லாமல் தயாரிக்கப்படும் உள்ளூர் குளிர்பானங்களை பொது மக்கள் சாப்பிடக்கூடாது. இவ்வாறு கிருஷ்ணராஜ் தெரிவித்தார்.

 

செயலிழக்கும் கொசு ஒழிப்புத் திட்டம்

Print PDF

தினமணி 02.08.2010

செயலிழக்கும் கொசு ஒழிப்புத் திட்டம்

தஞ்சாவூர், ஆக. 1: கொசுவால் உருவாகும் நோய்கள் ஒவ்வொரு நாளும் பெருகிக் கொண்டே இருக்கும் சூழலில், தமிழகத்தில் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுவரும் ஒரே அமைப்பான தேசிய யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்டமும் படிப்படியாக செயலிழக்கச் செய்யப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்திலேயே இந்த அமைப்பில் 16 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில் தற்போது 2 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இணை அமைப்பாக சுய அதிகாரத்தோடு செயல்பட்டு வந்த இந்த அமைப்பு ஏற்கெனவே பொது சுகாதாரத் துறையுடன் இணைக்கப்பட்டுவிட்ட நிலையில், விரைவில் பெயர் அளவிலான அமைப்பாக அது மாற்றப்படலாம் என்ற சூழல் தற்போது நிலவுகிறது.

கொசு 0.025 மி.கி. எடையை மட்டுமே கொண்ட ஓர் உயிரினம். ஆனால், உலகின் மிக ஆபத்தான- அதிக அளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடியது. நவீன உலகின் பொது சுகாதாரத்துக்குப் பெரும் சவால் கொசுவே. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 500 மில்லியன் பேர் கொசுவால் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால், ஒவ்வொரு நாடும் கொசு ஒழிப்புக்கென புதுப்புது உத்திகளை வகுத்து வருகின்றன.

இந்நிலையில், ஓர் ஆண்டுக்கு ரூ. 1,600 கோடி அளவுக்கு கொசு விரட்டி சந்தைக்குச் செலவிடும் சூழலில் உள்ள- இந்தியாவோ இந்த விஷயத்தைப் பெரிதாகக் கருதுவதில்லை.

கொசு ஒழிப்புக்காக நம்முடைய அரசு இங்கு செயல்படுத்திவரும் ஒரே ஆக்கபூர்வமான திட்டம் யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்டம்தான். அதுவும்கூட நாட்டின் 18 மாநிலங்களில் 454 மில்லியன் மக்கள் யானைக்கால் நோயின் அபாய வளையத்துக்குள் சிக்கியுள்ளதால் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

ஒரு கொசு தனது 45 நாள் வாழ்வில் 3 ஆயிரம் முட்டைகள் வரை இடுகிறது. இந்த 3 ஆயிரம் முட்டைகளும் கொசுக்களாகி அவை அடுத்த 45 நாள் வாழ்வில் தலா 3 ஆயிரம் முட்டைகளை இடுகின்றன. கொசுவின் வளர்ச்சி எவ்வளவு வேகமானது என்பதையும், இந்தப் பிரச்னை எவ்வளவு தீவிரமானது என்பதையும் இந்தக் கணக்கு எளிதாகச் சொல்லிவிடும்.

இந்த நிலையில், ஒரு வளர்ந்த கொசுவை அழிப்பதைவிட, அது புழுவாக (லார்வா) உள்ள நிலையிலேயே அழிப்பதுதான் பாதுகாப்பானது. இந்தப் பணியைத்தான் தேசிய யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்டப் பணியாளர்கள் கடந்த 40 ஆண்டுகளாக மேற்கொண்டுவந்தனர். வீடுகள்தோறும் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பது, இரவில் ஒவ்வொரு பகுதியாகச் சென்று பொதுமக்களின் ரத்த மாதிரிகளைச் சேகரிப்பது, மறுநாள் அவற்றை ஆய்வகப் பரிசோதனை செய்வது, அதிகாலையில் ஆபத்தான நோய் பரப்பும் கொசுக்களைப் பிடித்து பரிசோதனை செய்வது, பின்னர் அந்தப் பரிசோதனையின் முடிவு அடிப்படையில் கொசு ஒழிப்பில் புதுப்புது நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று இவர்களுடைய பணி இருக்கும்.

தமிழகத்தில் யானைக்கால் நோயால் அதிகம் பாதிப்புக்குள்ளான கும்பகோணத்தை மையமாகக் கொண்டு முதல்முதலாக 1956-ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. பின்னர் சிதம்பரம், வேலூர், செங்கல்பட்டு, நாகர்கோவில் என ஐந்து திட்ட அலுவலகங்களின் மேற்பார்வையில் 21 மாவட்டங்களில் நோய்த் தடுப்புத் துணை நிலையங்கள், நாட்டிலேயே அதிகமாக 42 சிகிச்சை மையங்கள் என்று பலமான - பரவலான வலைப்பின்னலை இந்த அமைப்பு கொண்டிருந்தது.

ஆனால், காலப்போக்கில் மக்கள்தொகை மற்றும் கொசுக்கள் பெருக்கத்துக்கேற்ப இந்த அமைப்பு மேம்படுத்தப்படாததுடன் ஏற்கெனவே உள்ள காலிப் பணியிடங்களும்கூட நிரப்பப்படாததால், அமைப்பின் வளர்ச்சி முடங்கியது.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்புவரை தன்னாட்சியாகச் செயல்பட்டுவந்த இந்த அமைப்பு பொது சுகாதாரத் துறையுடன் இணைக்கப்பட்டது. தொடர்ந்து, இப்போது இந்த அமைப்புக்கான தேவைகள் எதுவும் நிறைவு செய்யப்படாத நிலையில், காலப்போக்கில் இந்த அமைப்பு சுகாதாரத் துறையினர் மேற்கொள்ளும் ஏனையப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாக மாற்றப்படலாம் என்ற அச்சம் அந்த அமைப்பில் பணியாற்றுவோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இந்த அமைப்பை நீட்டிக்கவிடுவதோ அல்லது ஊழியர்கள் அஞ்சும் வகையில் பொது சுகாதாரத் துறையுடன் செயல்பாட்டு ரீதியாக கலக்க நேர்வதோ தமிழகத்தின் பொது சுகாதாரத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, ஆற்றுப் படுகைப் பகுதி வாழ் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் சூழலுக்குத் தள்ளப்படுவர்.

இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை உயர் அலுவலர் ஒருவரைத் தொடர்பு கொண்ட போது, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே மாநிலத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று முடித்துக்கொண்டார்.

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த சூழலியலாளரான ஆசை கூறியது:

புவி வெப்பமயமாதலின் மோசமான விளைவுகளில் ஒன்றாக அறிவியலாளர்கள் குறிப்பிடுவது வெப்ப மண்டலப் பகுதிகளில் நோய்ப் பெருக்கம். ஆக, இந்தியா போன்ற- குறிப்பாக தமிழகம் போன்ற- வெப்ப மண்டலப் பகுதிகளில் கொசுக்கள் பெருக்கமும், அவற்றால் பெருகும் நோய்கள் பெருக்கமும் எதிர் காலத்தில் பெரும் சவாலாகக் கூடும்.

இதை எதிர்கொள்ள வலுவான கட்டமைப்பு நமக்குத் தேவை. ஆனால், நாம் ஏற்கெனவே உள்ள அமைப்புகளையும் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறோம். கொள்ளைநோய் போன்ற பெரிய அளவிலான உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும். இது சாதாரண விஷயமல்ல என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

அவர் மட்டுமல்ல, பொதுமக்கள் அரசுக்கு சொல்ல விரும்பும் செய்தியும்கூட இதுதான்: கொசுப் பிரச்னை சாதாரணமானதல்ல.

 

காலாவதி உணவுப்பொருள் விற்பனையா? கடைகள், ஓட்டல்களில் சுகாதாரத்துறையினர் ஆய்வு சிவகாசியில் அதிரடி

Print PDF

தினகரன் 02.08.2010

காலாவதி உணவுப்பொருள் விற்பனையா? கடைகள், ஓட்டல்களில் சுகாதாரத்துறையினர் ஆய்வு சிவகாசியில் அதிரடி

சிவகாசி ஆக 2: சிவகாசி நகரில் கடைகள், ஓட்டல்களில் சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, உணவு மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிவகாசி நகரில் காலாவதி, கலப்பட உணவு பொருட்கள் பரவலாக விற்பனை செய்யப்படுவதாக நகராட்சிக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, நகராட்சி உணவு ஆய்வாளர் முத்துமாரியப்பன் தலைமையில் சுகாதாரத்துறையினர் சேர்மன் சண்முகம் ரோடு, பிஎஸ்ஆர் ரோடு, புதுரோடு, போலீஸ் ஸ்டேசன் ரோடு உட்பட பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.

மளிகை கடைகள், டீக்கடைகள், ஓட்டல்களில் நடத்தி ஆய்வில், சந்தேகத்திற்கிடமான பிஸ்கட்டுகள், டீத்தூள், உப்புபாக்கெட், கோதுமை மாவு, எண்ணெய் பாக்கெட்டுகள் முதலியவற்றின் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, சென்னையில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கலப்பட பொருள்கள் என தெரிய வந்தால் உணவு கலப்பட தடுப்பு சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்த னர்.

இரு மாதங்களுக்கு முன்பு, சிவகாசி வடக்குரத வீதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த கோதுமை மாவு பாக்கெட் மாதிரிகள் எடுத்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில், கலப்படமானது என தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கோதுமை மாவு தயாரித்தவர், விற்பனை செய்த ஏஜென்ட், விற்பனையாளர் ஆகியோர் மீது, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) முருகன், சுகாதார அலுவலர் பாலசுப்பிரமணியன், பரிந்துரையின் பேரில் சிவகாசி குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் நகராட்சி உணவு ஆய்வாளர் முத்துமாரியப்பன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 


Page 205 of 519