Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

வீடுகள், பள்ளிகளில் சுகாதாரத்துறை ஆய்வு

Print PDF

தினகரன் 29.07.2010

வீடுகள், பள்ளிகளில் சுகாதாரத்துறை ஆய்வு

மார்த்தாண்டம், ஜூலை 29: குமரி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் மதுசூதனன் தலைமையில் நேற்று குமரி மாவட்ட எல்லையோர பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குட்டக்குழி, இடைக்கோடு, ஏழுதேசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் சிகிச்சைகளை அவர் பார்வையிட்டார்.

கடலோர பகுதிகளிலும் சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து வீடு, வீடாக ஆய்வு மேற்கொண்டார். எல்லையோர பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவிலான மருந்து களை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று துணை இயக்குனர் மதுசூதனன் பணியாளர்களை கேட்டுக் கொண்டார். மேலும் குமரி & கேரள எல்லை பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் தங்கியுள்ள கேரள மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து பள்ளிகளில் விசாரணை மேற்கொண்டார்.

குழித்துறை நகராட்சியில் கொசு மருந்து ஒழிப்பு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. சுகாதாரத்துறை துணை இயக்குனர் மதுசூதனன் முன்னிலையில், நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி கொசு ஒழிப்பு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் மோகனசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே மாவட்டம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் பற்றிய விவரம் கேட்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்த மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ரத்த பரிசோதனை செய்யப்பட்டதா, அதன் முடிவு என்ன? என்பன போன்ற விவரங்களை சுகாதாரத்துறை கள ஆய்வு பணியாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

 

குழித்துறை நகராட்சியில் கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கும் பணியை நகராட்சி தலைவர் பொன்.ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார்.

 

பாதாள சாக்கடைக் கழிவுகளை உப்பனாற்றில் கலக்கும் திட்டம்

Print PDF

தினமணி 29.07.2010

பாதாள சாக்கடைக் கழிவுகளை உப்பனாற்றில் கலக்கும் திட்டம்

கடலூர், ஜூலை 28: கடலூர் நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டத்தில் கழிவுகளை உப்பனாற்றில் கலக்க திட்டமிட்டு இருப்பதற்கு, பொதுநல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

கடலூர் நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இவற்றில் 32 வார்டுகளுக்கு மட்டும் பாதாளச் சாக்கடைத் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ரூ.44 கோடியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்துக்கு மேலும் ரூ.25 கோடி அண்மையில் ஒதுக்கப்பட்டு உள்ளது. 18 மாதங்களில் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட திட்டம் 3 ஆண்டுகளைக் கடந்துவிட்டது.

பாதாள சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒப்பந்ததாரர்களின் பொறுப்பற்ற செயல்களாலும், குடிநீர் வாரியத்தின் முறையான கண்காணிப்பு இல்லாததாலும் பாதாள சாக்கடைத் திட்டம் கடலூர் மக்களைப் பெரிதும் வாட்டி வதைத்துக் கொணடு இருக்கிறது. உள்ளாட்சித் துறையின் திட்டம் என்பதால், நகராட்சி சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறது. இதில் பாதிக்கப்படுவோர் கடலூர் நகர மக்கள்தான்.

இத்திட்டம் 2011 மார்ச் மாதத்தில் முடியும் என்று அறிவிக்கப்பட்டாலும் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு மேலும் காலதாமதம் ஆகும் என்பதும், குறைந்தது ரூ.6 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்துவதுடன் மாதந்தோறும் ஒரு தொகையை கட்டணமாகச் செலுத்த வேண்டி இருப்பதும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.

தற்போது பாதாள சாக்கடைக் கழிவுகளை எங்கே கலப்பது என்ற பிரச்னையும் அத்துடன் சேர்ந்து உருவாகி இருப்பது மக்களை பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை சுமார் 60 ஏக்கரில் அமையும் புல் பண்ணையில் பயன்படுத்தலாம் என்று திட்டமிடப்பட்டது. பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டு, உப்பனாற்றிலோ, ஆண்டில் ஒரு சில நாள்களில் மட்டும் தண்ணீர் ஓடும் கெடிலம் ஆற்றிலோ கலந்து விடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் உப்பனாற்றில் கலப்பதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளிக்கவில்லை. எனினும் தொடர்ந்து அதற்கான முயற்சியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது.

இந்த நிலையில் கடலூர் சிப்காட் தொழிற்சாலைக் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு கடலில் கலக்கப்பட்டு வருகின்றன. எனினும் அனைத்து தொழிற்சாலைகளும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வெளிவராதவாறு சுத்திகரித்துப் பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையை மாசுக் கட்டுப்பாடு வாரிம் தொழிற்சாலைகளுக்கு அமுல்படுத்தி வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் கடலூர் நகராட்சிப் பகுதி மனிதக் கழிவுகளை உப்பனாற்றிலோ, கடலிலோ, கெடிலம் ஆற்றிலோ கலக்க, மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதிக்குமா என்பது கேள்விக்குறிதான்.

பாதாள சாக்கடைத் திட்டக் கழிவுகளை கெடிலம் ஆற்றிலோ உப்பனாற்றிலோ கலக்கும் திட்டத்துக்கு, கடலூர் பொதுநல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கடலூர் அனைத்து பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் எம்.நிஜாமுதீன் தலைமை தாங்கினார். பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் மு.மருதவாணன், திருமார்பன், வெண்புறா குமார், துரைவேலு, கவிஞர் பால்கி, அருள்செல்வன், பண்டரிநாதன், ரவி, மன்றவாணன், ரமேஷ், ராமநாதன், மோகனாம்பாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

 

சென்னையில் கொசு ஒழிப்புப்பணியில் 1050 தொழிலாளர்கள்

Print PDF

மாலை மலர் 28.07.2010

சென்னையில் கொசு ஒழிப்புப்பணியில் 1050 தொழிலாளர்கள்

சென்னையில்
 
 கொசு ஒழிப்புப்பணியில் 
 
 1050 தொழிலாளர்கள்
சென்னை, ஜூலை. 28- சென்னை மாநகரில் கொசுத்தொல்லை மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களை தடுப்பதற்காக சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

110 கி.மீ. நீளம் உள்ள நீர்வழிப்பாதைகளில் 9 கட்டு மரங்கள், 6 பைபர் படகுகள் மூலம் கொசுப்புழுக் கொல்லை மருந்து நாள் தோறும் தெளிக்கப்பட்டு, கொசு உற்பத்தி தடுக்கப்பட்டு வருகிறது. 800 கி.மீ. மழைநீர் வடிகால் வாய்களில் மூடிகளை திறந்து, கொசுப்புழுக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

பகல் நேரங்களில் மழை நீர் வடிகால்வாய்களில் உள்ள கொசுக்களை அழிக்க சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மூலம் கொசுக்களை அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடுகள்தோறும் மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் சென்று மேல்நிலைத்தொட்டி, கீழ் நிலைத்தொட்டி, கிணறு ஆகியவற்றில் கொசுப் புழுக்கொல்லி மருந்து போடப்படுகிறது.

மேலும், கொசு உற்பத்தியை தடுக்க மழைநீர் தேங்கியுள்ள உபயோகமற்ற பொருட்களான பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பூந்தொட்டிகள் ஆகியவை அகற்றப்பட்டு வருகின்றன.

கொசுக்களை ஒழிக்க மாலை நேரங்களில் வாகனங்களில் பொருத்தப்பட்ட 20 பெரிய புகைபரப்பும் இயந்திரங்களும், ஆட்டோவில் பொருத்தப்பட்ட 10 புகைபரப்பும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு கொசுக்கள் கட்டுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொசு ஒழிக்கும் பணியில் 1050 மாநகராட்சி தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொசுப்புழு மற்றும் கொசு தடுக்கும் பணிகளுக்காக 350 கைத்தெளிப்பான்கள், 75 இயந்திர தெளிப்பான்கள், 20 கால் அழுத்த தெளிப்பான்கள், 236 சிறிய புகைபரப்பும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு நாள்தோறும் கொசு ஒழிப்பு பணியினை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றியுள்ள மழைநீர் தேங்கும் உபயோக மற்ற பொருட்களை உடனடியாக அகற்றி, ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 


Page 208 of 519