Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நெல்பேட்டையில் இருந்து அனுப்பானடிக்கு மாறுகிறது ஜப்பான் தொழில்நுட்பத்தில் நவீன ஆடு அறுக்கும் நிலையம் தயார்

Print PDF

தினகரன் 23.07.2010

நெல்பேட்டையில் இருந்து அனுப்பானடிக்கு மாறுகிறது ஜப்பான் தொழில்நுட்பத்தில் நவீன ஆடு அறுக்கும் நிலையம் தயார்

மதுரை, ஜூலை 23: மதுரை அனுப்பானடியில் ஜப்பான் தொழில்நுட்பத்துடன் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன ஆடு அறுக்கும் நிலையத்தில் நேற்று சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டது. விரைவில் நெல்பேட்டையிலுள்ள மாநகராட்சி ஆடு அறுக்கும் நிலையம் அனுப்பானடிக்கு மாற்றப்படுகிறது.

மதுரை நெல்பேட்டையில் மாநகராட்சி ஆடு அறுக்கும் நிலையம் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இங்கு ஆடு அறுக்கப்பட்டு, மாநகராட்சி முத்திரை பெற்று தான் நகர் முழுவதுமுள்ள இறைச்சி கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். எனவே ஆடுவதை மையம் சுகாதாரமான முறையில் அனுப்பானடியில் ரூ.3.50 கோடியில் மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஜப்பான் தொழில்நுட்பத்தில் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் இயக்கம் குறித்து நேற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. உயிருள்ள ஒரு ஆட்டை இறைச்சியாக பிரித்தெடுக்க 3 நிமிடம் ஆகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின் கூறியதாவது: நவீன அறுக்கும் நிலையம் தயார் நிலையில் உள்ளது. இங்கு கொண்டு வரப்படும் ஆடுகள் டாக்டர் பரிசோதித்து சான்றிதழ் அளித்த பிறகே அறுக்க அனுமதிக்கப்படும். இதன்மூலம் நோய்வாய்பட்ட ஆடுகளை அறுப்பதை தடுக்க முடியும். சுகாதாரமான இறைச்சி கடைகளில் பொதுமக்களுக்கு கிடைக்கும். தினமும் சுமார் 600 ஆடுகள் அறுக்கப்படும் என்பதால், இதனை சுத்தம் செய்யும் போது 30 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் வெளியேறும். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ரூ.25 லட்சத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

நவீன ஆடு அறுக்கும் மையம் விரைவில் திறக்கப்படும். நெல்பேட்டையிலுள்ள மாநகராட்சி ஆடு வதை நிலையம் அனுப்பானடிக்கு மாற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைமை பொறியாளர் சக்திவேல், சுகாதார அதிகாரி சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

3 நிமிடத்தில் தோல், இறைச்சி உறுப்புகள் தனியாக பிரிப்பு

 

நாகர்கோவிலில் தெப்பக்குளத்தில் குப்பை: ஆட்சியர் நடவடிக்கைக்கு உத்தரவு

Print PDF

தினமணி 23.07.2010

நாகர்கோவிலில் தெப்பக்குளத்தில் குப்பை: ஆட்சியர் நடவடிக்கைக்கு உத்தரவு

மதுரை, ஜூலை 22: நாகர்கோவில் பெருமாள் தெப்பக்குளத்தில் நகராட்சி குப்பைக் கழிவுகள் கொட்டத் தடை கோரிய மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதி மன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடர்பாக, மனித உரிமை மீறலுக்கான இலவச சட்ட உதவி மையச் செயலர் கிரினிவாச பிரசாத் தாக்கல் செய்த மனு:

நாகர்கோவில் பெருமாள் குளத்தில் தண்ணீர் 13 ஏக்கர் பரப்பளவில் தேங்கியிருந்ததால், அப்பகுதியின் நிலத்தடி நீர்வளம் சிறப்பாக இருந்தது. ஆனால், நகராட்சி நிர்வாகம் குப்பைக் கழிவுகளை குளத்தில் கொட்டத் தொடங்கியதால், நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுகாதாரக் கேடுகளும் ஏற்படுகின்றன.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, குளத்தில் குப்பைகளைக் கொட்டத் தடை விதித்து, நீரைத் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம். சொக்கலிங்கம், எம். துரைச்சாமி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், மனுதாரர் அளித்துள்ள மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

 

குப்பைக்குள் சிக்கித் தவிக்கும் கோயம்பேடு மார்க்கெட்

Print PDF

தினமலர் 23.07.2010

குப்பைக்குள் சிக்கித் தவிக்கும் கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு : குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயலற்று போனதாலும், தனியார் நிறுவன வேலையாட்களின் மெத்தன போக்காலும், கோயம்பேடு மார்க்கெட்டில் குப்பைகள் மலைபோல் குவிகின்றன. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட், 295 ஏக்கர் பரப்பளவில் காய்கறி, பழம் மற்றும் பூக்கள் விற்பனையில் 3,194 கடைகள் செயல்படுகின்றன. இங்கு சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்தும் சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் என, ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

மார்க்கெட் வளாக பராமரிப்பு, பாதுகாப்பு, வியாபாரிகளுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தல் போன்ற பணிகளை எம்.எம்.சி., என்றழைக்கப் படும் அங்காடி நிர்வாக குழு(மார்க்கெட் மெயின்டனன்ஸ் கமிட்டி) கவனிக்கிறது.மார்க்கெட்டில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகளில் இருந்து, தினமும் சராசரியாக 30 டன்னுக்கும் மேற்பட்ட காய்கறி கழிவுகள், மார்க்கெட் வளாக பகுதியில் உள்ள சாலைகளில் கொட்டப்படுகின்றன.இதில் மக்காத குப்பைகளில் காய்கறி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கும், மக்கும் குப்பைகள், கொடுங்கையூருக்கும் கொண்டு செல்லப் படுகின்றன. தற்போது குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் மார்க்கெட்டில் மலைபோல் குப்பைகள் தேங்குகின்றன.

குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு, "கான்ட்ராக்ட்' விடப்பட்டுள்ளது. அவர்கள், வாரத்தின் அனைத்து நாட்களிலும் குப்பைகளை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், குப்பை அகற்றும் தனியார் நிறுவனத்தை அழைத்து பேசிய அங்காடி நிர்வாக குழு, குப்பை முறையாக எடுக்கப்படவில்லை என்றால், "கான்ட்ராக்ட்' ரத்து செய்யப்படும் என, சமீபத்தில் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.எச்சரிக்கை விடப்பட்டு நான்கு வாரங்களாகியும் குப்பைகள் அகற்றுவதில் அவர்கள் படுமெத்தனம் காட்டுவதாகவும், அவர்களை மேற்பார்வையிடும் அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் இதை கண்டு கொள்ளவில்லை எனவும் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.தற்போது அடிக்கடி மழை பெய்வதால், மார்க்கெட்டில் குப்பையுடன் மழைநீரும் தேங்கி அங்கு தொற்றுநோய்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மார்க்கெட் சுகாதாரமற்ற சூழ்நிலையில் இயங்குவதால், சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையினர் அங்காடி நிர்வாக குழுவினரிடம் மார்க்கெட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மாறி மாறி எச்சரிக்கை விடப்பட்டும் குப்பைகள் சேர்ந்துக் கொண்டே தான் போகிறது. இந்த விஷயத்தில் அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

 


Page 211 of 519