Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மாநகராட்சி துப்புரவு பணிகளை மேற்கொள்ள 152 சுய உதவி குழு உறுப்பினர்கள் நியமனம்

Print PDF

தினமலர் 22.07.2010

மாநகராட்சி துப்புரவு பணிகளை மேற்கொள்ள 152 சுய உதவி குழு உறுப்பினர்கள் நியமனம்

திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள விரைவில 152 சுய உதவி குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

நெல்லை மாநகராட்சியில் அனுமதிக்கப்பட்ட 885 துப்புரவு பணியாளர்களில் தற்போது 586 பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 299 இடங்கள் காலியாக உள்ளது. துப்புரவு பணியாளர்களின் வயது முதிர்வு ஓய்வு, பணியின் போது காலமாதல் ஆகியவற்றினால் காலி பணியிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த மாதத்திலும் பலர் ஓய்வு பெற உள்ளனர். குறைந்த எண்ணிக்கையிலான துப்புரவு பணியாளர்களை கொண்டு மாநகராட்சி முழுவதும் துப்புரவு பணியை தடையின்றி மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது. மழைக் காலத்தில் ஏற்படும் சுகாதார கேடுகளால் பொதுமக்களுக்கு பரவும் நோய்களை தவிர்த்திட சுகாதார பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாக உள்ளது.

நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநகராட்சியில் சுகாதாரத்தை பராமரிக்கும் வகையில் துப்புரவு பணியை தொய்வின்றி மேற்கொள்ள போதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

துப்புரவு பணியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே 130 சுய உதவி குழு உறுப்பினர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 152 சுய உதவி குழு உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

துப்புரவு பணியின் அவசியம் கருதி ஒவ்வொரு துப்புரவு அலகிற்கு தேவைப்படும் துப்புரவு பணியாளர்களை காலி பணியிடங்களுக்கு மிகாமல் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் அந்தந்த மண்டல பகுதிகளில் உள்ள சுய உதவி குழுக்களை துப்புரவு பணியில் ஈடுபடுத்தி கொள்ளவும், அவ்வாறு ஈடுபடுத்தப்படும் குழுக்களுக்கு கலெக்டரால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தினக் கூலியை அடிப்படையாக கொண்டு தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

மதுரையில் செயல்பட்ட கலப்பட டீத்தூள் ஆலை கண்டுபிடிப்பு

Print PDF

தினமலர் 21.07.2010

மதுரையில் செயல்பட்ட கலப்பட டீத்தூள் ஆலை கண்டுபிடிப்பு

மதுரை, ஜூலை 21: மதுரை பொன்மேனி பகுதியில் போலி டீத்தூள் ஆலை செயல்படுவதாக கலெக்டர் காமராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பொருள் வழங்கல் அலுவலர் முருகையா தலைமையிலான அதிகாரிகள், பொன்மேனி ஈ.எம்.எஸ். நகரில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்டனர்.

அங்கு மூட்டை, மூட்டையாக போலி டீத்தூள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த ஊழியர் பிரேம் என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், இந்த ஆலையை மதுரையை சேர்ந்த ராமானுஜம் மற்றும் ஊட்டியை சேர்ந்த குமார் ஆகியோர் சேர்ந்து நடத்துவது தெரிந்தது.

இவர்கள் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் இருந்து மிகவும் மட்டமான டீத்தூளை வாங்கி வந்து, கெமிக்கலை கலந்து, மதுரை நகர் முழுவதும் உள்ள டீக்கடைகளில் அஸாம் டீத்தூள்என்ற பெயரில் விற்பனை செய்தது தெரிந்தது.

டீத்தூள்களை ஆய்வு செய்த மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி சுப்பிரமணியம் கூறுகையில், "மட்டரகமான டீத்தூளில், மரத்தூள் மற்றும் தடை செய்யப்பட்ட சன்ரெட் யெல்லோ என்ற கெமிக்கல் கலக்கப்பட்டுள்ளது. இந்த கெமிக்கலை உணவுப் பொருளில் கலக்க அரசு தடை விதித்துள்ளது. இதைக் கொண்டு டீ தயாரித்தால், அதிகமான கலர் கிடைக்கும். இந்த டீயை குடித்தால் புற்றுநோய், சுவாசக் கோளாறு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படும்" என்றார்.

அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 8 மூட்டை டீத்தூள், இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த டீத்தூள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவு கிடைத்தபின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை அருகே செயல்பட்டு வந்த போலி டீத்தூள் ஆலையில் பறிமுதல் செய்யப்பட்ட டீத்தூள் பாக்கெட்டுகள்.

Last Updated on Wednesday, 21 July 2010 10:54
 

மதுரையில் ரூ.1 லட்சம் போலி டீ தூள் பறிமுதல்

Print PDF

தினமணி 21.07.2010

மதுரையில் ரூ.1 லட்சம் போலி டீ தூள் பறிமுதல்

மதுரை, ஜூலை 20: மதுரையில் 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த போலி டீ தூள் தொழிற்சாலை செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள போலி டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி இஎம்எஸ் நகர் பகுதியில் போலி டீ தூள் தொழிற்சாலை செயல்பட்டு வருவதாக மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ். முருகையாவுக்குத் தகவல் கிடைத்தது. இத்தகவல் ஆட்சியர் சி.காமராஜின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

ஆட்சியர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் அங்கு நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்:

மதுரையைச் சேர்ந்த ராமானுஜம், ஊட்டியைச் சேர்ந்த ஆர்.குமார் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஊட்டியில் இருந்து 3-ம் தரமான டீ தூளை மிகவும் குறைந்த விலைக்கு வாங்கி, மதுரைக்கு கொண்டு வந்து டை, மரத்தூள், "சன்செட் யெல்லோ' என்ற வேதிப்பொருள் ஆகியவற்றைக் கலந்து நகரில் உள்ள பல்வேறு டீக்கடைகளுக்கு விநியோகித்து வந்துள்ளனர்.

இந்தப் போலி டீ தூளை சிறிது பயன்படுத்தினாலே அதிக எண்ணிக்கையில் டீ போடலாம். தூளின் கலரும் மங்காது. இவை அசாம் மற்றும் உதயா கோல்டு என்ற பெயர்களில் அரை கிலோ பாக்கெட் ரூ.105-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சில டீ கடைகளுக்கு இந்த பாக்கெட் ரூ.60 முதல் 80 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சுமார் 200 கிலோ போலி டீ தூளை பறிமுதல் செய்த பின்னர் மாநகராட்சி சுகாதார அலுவலர் வி.சுப்பிரமணியன் கூறியதாவது:

டீ கலர் கிடைக்கவும், ஸ்ட்ராங்காக இருக்கவும் இதுபோன்ற கலப்படப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அரசால் தடை செய்யப்பட்ட பொருள்களும் டீ தூளில் சேர்க்கப்பட்டுள்ளது. இது புற்றுநோய், வயிற்றுக் கோளாறு போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.

ரூ.1 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ போலி டீ தூள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றி வந்த பிரேம் என்பரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த டீ தூள் குறித்து சோதனை செய்ய சென்னைக்கு மாதிரி அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவைப்பொருத்து உணவுப் பொருள் கலப்படத் தடைச் சட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்டோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

 


Page 213 of 519