Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

லால்குடியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்

Print PDF

தினகரன்          21.11.2013  

லால்குடியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்

லால்குடி,: திருச்சி மாவட்டம் லால்குடி பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் சுதாராணி விஜயமூர்த்தி தலைமை வகித்தார். செயல் அலுவலர் முத்துகுமார் முன்னிலை வகித்தார்.முகாமில் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை 15 மற்றும் 16,18 வார்டுகளில் குப்பை அகற்றுதல், சாக்கடை சுத்தம் செய்தல், பொதுக் கழிவறை சுத்தம் செய்தல் உள்பட பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. முகாமில் வார்டு கவுன்சிலர்கள் நிஜாமுதின், மஞ்சுளா செல்வம், நித்தியா கிருஷ்ணமூர்த்தி, ராஜம் காத்தான், கதிரேசன் பேரூராட்சி பணியாளார்கள் கலந்து கொண்டனர்.

 

சாலையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு கொசுவலை திட்டத்தை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா

Print PDF

தினகரன்          21.11.2013  

சாலையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு கொசுவலை திட்டத்தை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா

சென்னை, : சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு கொசுவலை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.

அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் போன்ற நீர்வழித்தடங்களின் கரைகளையொட்டி வாழும் ஏழை மக்கள் கொசு தொல்லையால் அவதிபட்டு வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு இலவச கொசுவலை வழங்கும் திட்டத்தை கொண்டு வர சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

இந்த திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக 78,184 கொசு வலைகள் ரூ.1 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 96 செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதை தொடர்ந்து, சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் உலக வெப்பமயமாதலை தடுப்பதற்காக பள்ளி குழந்தைகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் வகையில் வைட்டமின் ஏ சத்து கொண்ட 6.5 லட்சம் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கும் திட்டம், கொசுக்களை கட்டுப்படுத்துவதற்காக 5.5லட்சம் மூலிகை குணம் கொண்ட நொச்சிச் செடி கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கும் திட்டம் ஆகியவற்றையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று வேலைவாய்ப்பினை பெறும் வகையில் சென்னை மாகநராட்சியால் முதல்கட்டமாக 710 ஏழை பட்டதாரி இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கும் பயிற்சி மையங்களையும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். 

 

‘தட்டான் பூச்சிகளின் அழிவே டெங்கு காய்ச்சல் பரவ காரணம்’ மாணவிகளின் ஆய்வு அறிக்கையில் தகவல்

Print PDF

தினத்தந்தி           21.11.2013

‘தட்டான் பூச்சிகளின் அழிவே டெங்கு காய்ச்சல் பரவ காரணம்’ மாணவிகளின் ஆய்வு அறிக்கையில் தகவல்

‘‘தட்டான் பூச்சிகளின் அழிவே மனிதர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணம்’’ என்று மாணவிகள் தங்கள் ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.

மாணவிகள் ஆய்வு

மதுரை மாவட்டம் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 9–ம் வகுப்பு மாணவிகள் கவுசல்யா, சாருமதி, மதுமிதா, பிரவீணா, பிரியதர்ஷினி, ருத்ரா, பிரியா, பாண்டிமாதேவி, ஆதித்யா, ஆர்த்தி ஆகியோர், ஆசிரியர் சூர்யகுமார் தலைமையில் கடந்த மாதம் கொசுப்பெருக்கம் தொடர்பாக, ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

அதன்படி, கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் உயிர் பலிகள் அதிகம் நிகழ்ந்த மேலூரிலும், அதன் சுற்றுப்புற கிராமங்களான வல்லாளப்பட்டி, முனியாண்டிபட்டி, மங்களநகர், மல்லிகைநகர், நடுப்பட்டி, தாமரைப்பட்டி, பதினெட்டாங்குடி ஆகிய கிராமங்களிலும் கள ஆய்வு நடத்தினர். அப்போது, டாக்டர்கள், பொறியாளர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், கிராமமக்கள், கல்லூரி மாணவர்கள் என்று பலதரப்பினரிடம் அவர்கள் கருத்தாய்வு நடத்தினர்.

‘தட்டானின் அழிவு, கொசுக்களின் பெருக்கம்’

பின்பு, தங்களது ஆய்வறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கும், மேலூர் தாசில்தாருக்கும் அளித்தனர். அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

‘‘தட்டான் பூச்சி இனங்கள் கொசுக்களை உணவாக உட்கொள்பவை. ஊசித்தட்டான் போன்ற சிலவகை தட்டான்கள், கொசு முட்டைகளை உணவாக உட்கொண்டு வாழ்பவை.

விவசாய நிலங்களில் சேதி உரங்கள் பயன்படுத்தப்படுவதாலும், செல்போன் டவர்களின் கதிர்வீச்சு, வறட்சி நிலை ஆகியவற்றின் காரணமாகவும் இந்த தட்டான் இனங்கள் அழிந்து வருகின்றன.

இதனால் இயற்கை சமநிலையும், உயிரிப் பல்வகைமையும் (பயோ டைவர்சிட்டி) பாதிக்கப்பட்டு தட்டான் பூச்சி இனங்கள் அழிந்து வருகின்றன. இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி டெங்கு கொசுக்கள் ஊருக்குள் பரவுகின்றன.

டெங்கு கொசுக்கள்

மேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் தோண்டப்பட்ட கிரானைட் பள்ளங்களில் தேங்கும் நீரில் இருந்து ‘ ‘ஏடிஸ், எஜிப்டி‘ எனப்படும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த பாறைக்குழிகள் டெங்குவை பரப்பும் கொசு உற்பத்தி மையங்களாக திகழ்கின்றன. இதனால் தான் மேலூர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது.

இவற்றை தடுக்க தட்டான்பூச்சி இனங்கள் பெருகிட, அதற்கான வழி வகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விவசாயத்திற்கு ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரத்தை பயன்படுத்தலாம். மேலும் அறுவடை முடிந்த வயல்களில் உள்ள தோகைகளை தீயிட்டுக் கொளுத்துவது, குப்பைக்கூளங்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது, போன்ற வெப்ப நிலைகளை உருவாக்குவதால் தட்டான் பூச்சி இனங்கள் இனப்பெருக்கம் குறைந்து அழிகின்றன.

கிரானைட் கற்கள் தோண்டப்பட்ட பள்ளங்களில் மீன்களை வளர்த்தால் கொசுப்பெருக்கம் குறையும்.’’

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆய்வில் ஈடுபட்ட மாணவிகளையும், ஆசிரியரையும் தலைமை ஆசிரியை டெய்சி நிர்மலா ராணி, மேலூர் தாசில்தார் ஆகியோர் பாராட்டினர்.

 


Page 24 of 519