Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சாக்கடையில் வளர்க்கப்பட்ட கீரை பறிமுதல்

Print PDF

தினமலர் 03.06.2010

சாக்கடையில் வளர்க்கப்பட்ட கீரை பறிமுதல்

திருப்பூர் : சாக்கடை கால்வாயில் விளைந்த கீரைகளை பறித்து, விற்பனைக்கு தயார் செய்த போது, மாநகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் வெள்ளியங்காடு அருகே உள்ள முத்தையன் கோவில் ஓடையில் வற்றாத கழிவு நீர் பாய்கிறது. இந்த ஓடையின் ஓரத்தில் செடிகள் அதிகம் முளைத்து, பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. ஒவ்வொரு பருவமழை காலத்திலும், அதிகப்படியான செடிகள் முளைத்து புதர்மண்டி காணப்படும். ஓடையின் பல பகுதிகளில், பொன்னாங்கண்ணி கீரை அதிகம் விளைந்துள்ளது. இந்நிலையில், முத்தையன் கோவில் எதிரே உள்ள ஓடையில் இறங்கி, சிலர் கீரையை பறித்தனர். அவற்றை கட்டுகளாக பிரித்து கட்டி, விற்பனைக்காக மார்க்கெட் கொண்டு செல்ல ஆயத்தமாகினர். அதைப்பார்த்த பொதுமக்கள், சாக்கடையில் விளைந்த கீரைகளை விற்பனைக்கு தயார் செய்தவர்களை மடக்கி, வாக்குவாதம் செய்தனர். கீரையை பறித்தவர்கள், அவற்றை போட்டுவிட்டு ஓடிவிட்டனர். பொதுமக்கள் கொடுத்த தகவலை தொடர்ந்து, மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வந்து கீரைகளை கைப்பற்றி குப்பையில் கொட்டினர். "மார்க்கெட்டில் விற்கப்படும் கீரை, வேருடன் இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில், விவசாயிகள்தான் விற்கிறார்களா என்பதை உறுதிசெய்து வாங்கி, பயன்படுத்த வேண்டும்' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

குடிநீரை காய்ச்சி குடியுங்கள்: நகராட்சி வேண்டுகோள்

Print PDF

தினமலர் 03.06.2010

குடிநீரை காய்ச்சி குடியுங்கள்: நகராட்சி வேண்டுகோள்

திருவள்ளூர் : திருவள்ளூர் நகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், குடிநீரை காய்ச்சி பருகவேண்டும் என, நகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.திருவள்ளூர் நகராட்சி பகுதியில், பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக மொத் தம் 13 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு செயல் பாட்டில் உள்ளது. இதன் மூலம், திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு, இவற்றின் மூலம் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.திருவள்ளூர் நகராட்சியில் குடிநீர் உப விதிகளின்படி, நகராட்சியில் உள்ள மேல் நிலை குடிநீர் தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், குடிநீர் பகிர்மான முறையில் குளோரினேசன் முறையில் பராமரிக்கப் பட்டு வருகிறது.நகரில் வீரராகவசுவாமி திருக்கோவில் உள்ளதால், திரளான வெளியூர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் பாதுகாப்பு நலன் கருதி, பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி பருகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

கூடுதல் விலையில் உணவுப்பொருட்கள் விற்பனை: சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் அத்துமீறல்

Print PDF

தினமலர் 03.06.2010

கூடுதல் விலையில் உணவுப்பொருட்கள் விற்பனை: சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் அத்துமீறல்

சேலம்: சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள வியாபாரக் கடைகளில் கூடுதல் விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால், வெளியூர் பயணிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். தரமற்ற மற்றும் கலப்படப் பொருட்கள் விற்பனையும் ஜோராக நடக்கிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களுள் சேலம் மாவட்டத்துக்கு தனி இடம் உண்டு. குஜராத், பீகார், உத்திரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்தோர் அதிகம் வசித்து வருகின்றனர். பிற மாவட்டங்களைச் சார்ந்தவர்களும் பிழைப்புக்காக சேலத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, பெங்களுரு, மதுரை, கடலூர், பாண்டிச்சேரி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளியூர் பயணிகள் கூட்டத்தால் புதிய பஸ் ஸ்டாண்ட் எப்போதும் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழியும். மக்களின் பயன்பாட்டுக்காக பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் மாநகராட்சி மூலம் ஏலத்துக்கு விடப்படுகிறது. அதுவும் அரசியல் கட்சியினர் ஆதிக்கத்தால் குறிப்பட்ட நபர்களே கடைகளை ஏலம் எடுத்து விடுகின்றனர். தற்போது 35க்கும் மேற்பட்ட வியாபார கடைகள் உள்ளன. பஸ் பிடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் சாப்பிடாமல் வரும் வெளியூர் பயணிகள் இங்குள்ள கடைகளில் பிஸ்கட், சிப்ஸ், வாட்டர் பாட்டில், கூல்டிரிங்க்ஸ் போன்றவை வாங்கி செல்கின்றனர். பயணிகளின் அவசரத்தையும், லாபத்தையும் கணக்கு வைத்து, ஏலம் எடுத்தவர்கள் உணவுப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். கடை உரிமையாளர்களிடம் விலை குறித்து கேட்டால் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டும் போக்கும் உள்ளது.

மேலும், பஸ்களில் ஏறி விற்பனை செய்வோர் தரமற்ற மற்றும் கலப்படப் பொருட்களை விற்பனை செய்வதால் பயணிகள் பலர் உடல் பாதிப்புக்கு ஆளாகின்றனர். மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் அவற்றை கண்டுகொள்ளாததால் நாளுக்கு நாள் கூடுதல் விலையில் உணவுப் பொருள் விற்பது வாடிக்கையாகி விட்டது. வெளியூர் பயணிகள் சிலர் கூறியதாவது: புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளில் 12 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டை 15 ரூபாய்க்கு விற்கின்றனர். விலை குறித்து கேட்டால் இஷ்டம் இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என மிரட்டல் தோரணையில் பேசுகின்றனர். அதேபோன்று, வாட்டர் பாட்டில், கூல்டிரிங்க்ஸ் போன்றவற்றின் விலையும் இரண்டு, மூன்று ரூபாய் அதிகம் உள்ளது. இரவு நேர பயணத்தின்போது வயிறு பசிக்குமே என்பதால் மன உளைச்சலுடன் வாங்கிச் செல்ல வேண்டியது உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி கூறியதாவது: சேலம் புது பஸ் ஸ்டாண்டில் கூடுதல் விலையில் பொருட்கள் விற்பனை செய்ய கடைகளுக்கு அனுமதி கிடையாது. அவ்வாறு பொருள் விற்பனை செய்தால் சுகாதார ஆய்வாளருக்கு புகார் தெரிவிக்கலாம். கலப்படப் பொருட்கள் விற்பனை குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. கூடுதல் விலையில் விற்பது குறித்து உடனடியாக சோதனை நடத்தப்படும், என்றார்.

 


Page 233 of 519