Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மேற்கு மண்டலத்தில் தூய்மையாக்கும் திட்டம்

Print PDF

தினமணி   28.05.2010

மேற்கு மண்டலத்தில் தூய்மையாக்கும் திட்டம்

மதுரை, மே 27: மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் உள்ள ஆரப்பாளையம் காமராஜர் பாலத்தில், தூய்மையாக்கும் திட்ட முகாமை துணை ஆணையர் க.தர்ப்பகராஜ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். மண்டலத் தலைவர் கே.நாகராஜன் முன்னிலை வகித்தார்.

இது குறித்து துணை ஆணையர் க.தர்ப்பகராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:

மதுரை நகரை தூய்மையாக்கும் வகையில் இந்தத் திட்டம் பொதுமக்கள் ஆதரவுடன் மாநகராட்சிப் பகுதிகளில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வார்டுகளிலும் செயல்படுத்தப்படுகிறது. மேற்கு மண்டலத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், 58 லாரிகள் மற்றும் பொக்லைன் வண்டிகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து இதேபோல் மற்ற மண்டலங்களிலும் இந்தச் சிறப்பு முகாம்களை நடத்தி குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே நகரை சுத்தப்படுத்தும் பணியில் பொதுமக்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக குப்பைகளை கழவுநீர்க் கால்வாய்களில் கொட்டாமல் குப்பைத் தொட்டியில் கொட்ட வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் சிலுவை, அருண்குமார், நகர்நல அலுவலர் மருத்துவர் சுப்பிரமணியன், உதவி ஆணையர்கள் ரவீந்திரன், ராஜகாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டுகோள்

Print PDF

தினமணி    28.05.2010

குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டுகோள்

சேலம், மே 27: நோய் பரவும் வாய்ப்புள்ளதால் குடிநீரை காய்ச்சிப் பருக வேண்டும் என்று, மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம் மாநகராட்சியில் மழைக் காலத்தில் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம், ஆணையர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி செயற் பொறியாளர்கள், மாநகர நல அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆணையர் பேசும்போது, குடிநீர் விநியோகத்தின்போது பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடர் ஐ.எஸ்.. தரம் உள்ளதாகவும் அதில் 32 சதவீதம் குளோரினும் இருக்க வேண்டும்.

ஒரு வாரம் அல்லது அதிகபட்சம் 10 நாள்களுக்கு மட்டும் இருப்பு இருக்கும் வகையில் பிளீச்சிங் பவுடரை வாங்கி, காற்றுப் புகாதபடி சரியான முறையில் பாதுகாத்து வைக்க வேண்டும்.

குடிநீர் விநியோகத்தின் கடைசிப் பகுதிகளிலும் குறைந்தபட்சம் தேவையான குளோரின் அளவு இருக்குமாறு குளோரினேற்றம் செய்யப்பட வேண்டும். பொதுமக்கள், குடிநீரை காய்ச்சிய பிறகே குடிக்கப் பயன்படுத்த வேண்டும் என்று பழனிசாமி தெரிவித்தார்.

 

ஹோட்டல்கள், உணவு விடுதிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

Print PDF

தினமணி      28.05.2010

ஹோட்டல்கள், உணவு விடுதிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

அரியலூர், மே 27: அரியலூரில் இயங்கி வரும் ஹோட்டல்கள், உணவு விடுதிகள், தேநீர் கடைகளுக்கு ஆட்சியர் த. ஆபிரகாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள், உணவு விடுதிகள், தேநீர் கடைகள் ஆகிய அனைத்தும் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பயன்படுத்திய டம்ளர்களை 20 நிமிஷங்கள் கொதி நீரில் கொதிக்க வைத்த பிறமே மறுபடியும் உபயோகிக்க வேண்டும். உணவுப் பொருள்களை தூசி படாமலும், ஈ மொய்க்காமலும் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

சாப்பிட்ட பின் இலைகளை வெளியில் வீசாமல், மூடியிட்ட கூடையில் சேகரித்து முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும். கழிவுநீரை தெருக்களில் விடாமல், உறிஞ்சு குழி மூலம் வெளியேற்ற வேண்டும். உணவுப் பொருள்களை கையாள்பவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் பெற வேண்டும்.

உணவு தயாரிப்புக் கூடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், கழிவுநீர், குப்பைகள் தேங்காமல் பராமரிக்கப்பட வேண்டும். உணவு பரிமாறுவோர் கையுறை அணிந்திருக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார் ஆட்சியர்.

 


Page 242 of 519