Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

விழுப்புரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி தீவிரம்

Print PDF

தினகரன்          25.05.2010

விழுப்புரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி தீவிரம்

விழுப்புரம், மே 25: விழுப்புரம் நகராட்சியில் உள்ள 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் குடிநீர் குழாய்கள் சுத்தம் பணி தீவி ரமாக நடந்து வருகிறது.

காலரா போன்ற தொற்று நோய்களால் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க தமிழகம் முழுவதும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களை சுத்தம் செய்ய தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து அரசாணையும் வெளியிட்டுள்ளது. அதன்படி விழுப்புரத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், குடிநீர் குழாய் கள் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

விழுப்புரம் மருதூர், கே.கே.ரோடு, காமராஜர் வீதி, திருவிக வீதி, பூந்தோட்டம், வடக்கு தெரு, எம்ஜி ரோடு, பெரியகாலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு விழுப்புரம் நகராட்சி பயணியர் விடுதி வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. 9 லட்சம் லிட்டர் கொள்ளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்யும் பணி கடந்த 3 நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோன்று வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு அவை சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

சண்முகபுரம் காலனி, மகாராஜபுரம், மின்வாரிய குடியிருப்பு, கீழ்ப்பெரும்பாக்கம், பொன்முடி நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பீமநாயக்கன் தோப்பு போன்ற பகுதிகளுக்கு குடிநீர் வழங்கி வரும் 7 லட்சம் லிட்டர் கொள்ளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ளது) சுத்தம் செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. மேலும் இப்பகுதிகளுக்கு உட்பட்ட வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாயும் சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இப்பணிகளை நகர்மன்ற தலைவர் ஜனகராஜ், ஆணையாளர் சிவக்குமார், பொறியாளர் பார்த்திபன், ஓவர்சியர் ஜெயபிரகாஷ்நாராயணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்

 

காலாவதி உணவு பொருட்கள் உள்ளதா? ரேஷன் கடைகளில் திடீர் சோதனை

Print PDF

தினகரன்    25.05.2010

காலாவதி உணவு பொருட்கள் உள்ளதா? ரேஷன் கடைகளில் திடீர் சோதனை

சென்னை, மே 25: ரேஷன் கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் உள்ளதா என்று அதிகாரிகள் தமிழகம் முழுக்க தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக சுகாதாரத் துறை, உணவு வழங்கல் மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒரு மாதமாக கடைகளில் சோதனை நடத்தி காலாவதி மற்றும் தரமற்ற உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர்.

‘காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு இல்லை என்று போர்டு வைக்க வேண்டும்’ என்று கடைகாரர்களுக்கு சுகாதாரத் துறை எச்சரித்தது.

இந்நிலையில், ரேஷன் கடைகளிலும் அரிசி, மைதா, ரவை, கோதுமை மற்றும் சமையல் எண்ணெய், மிளகாய், தனியா, மிளகு, சீரகம், புளி போன்ற மளிகைப் பொருட்கள் விற்காமல் பல நாட்கள் தேங்கும் நிலை உள்ளது. அதனால் ரேஷன் கடைகளிலும் சோதனை செய்து காலாவதியான பொருட்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரி கூறியதாவது:

ரேஷன் கடைகளிலும் ஆட்டா மற்றும் மளிகை பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்த பொருட்கள் விரைவில் கெட்டுப் போக கூடியவை. தமிழகத்தில் உள்ள 29,140 கூட்டுறவு அங்காடி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் நடத்தப்படும் 1273 அமுதம் பல்பொருள் அங்காடி, சுயஉதவிக் குழுக்கள் மற்ற நிறுவனங்கள் நடத்தும் 766 கடை என 31,179 ரேஷன் கடைகளில் காலாவதியான பொருட்கள் உள்ளனவா என்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் உள்பட தென் மாவட்டங்களில் உள்ள சில கடைகளில் காலாவதியான பொருட்கள் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சென்னையில் ராயபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் காலாவதியான பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனையின் போது கடையில் காலாவதியான உணவு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரி தெரிவித்தார். தமிழகம் முழுக்க அதிரடி

 

கரூரில் காலாவதி பொருள்கள்: தீவிர ஆய்வு நடத்த வேண்டுகோள்

Print PDF

தினமணி             25.05.2010

கரூரில் காலாவதி பொருள்கள்: தீவிர ஆய்வு நடத்த வேண்டுகோள்

கரூர், மே 24: கரூர் மளிகைக் கடைகளில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று சுகாதாரத் துறையினர் தீவிர ஆய்வு நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

காலாவதியான, போலி மருந்துப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களையடுத்து, தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஏராளமான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனால், கரூர் மாவட்டத்தைப் பொருத்தவரை மருந்துப் பொருள்கள் மீது தீவிர சோதனைகள் நடத்தப்படவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்தது. அதேபோல, பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள கடைகளில் மட்டுமே நகராட்சி சுகாதாரத் துறையினர் உணவுப் பொருள்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். மற்ற பகுதி கடைகளில் சோதனை நடத்தப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனால், கரூரிலுள்ள மளிகைக் கடைகளில் உற்பத்தித் தேதி, காலாவதி தேதி, விலை, உற்பத்தியான இடம் போன்ற விவரங்கள் இல்லாத எண்ணெய்ப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்கிறது.

இதேபோல, கடுகு, பருப்பு வகைகள், மஞ்சள், வெந்தயம் பாக்கெட்டுகளிலும் எந்தவித விவரமும் இல்லை. தரமான பொருள்களைவிட குறைந்த விலையில் கிடைக்கும் இதுபோன்ற பொருள்களைத்தான் பெரும்பாலான சிறிய கடை வியாபாரிகள், சிற்றுண்டிகள், உணவுப் பொருள்கள் தயாரிக்கும் சிறிய கடைகள் வாங்கி உபயோகித்து வருகின்றன.

எனவே, பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் உணவுப் பொருள்கள் விற்பனை மீது நகராட்சி சுகாதாரத் துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

 


Page 247 of 519