Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

புறக்கணிக்கப்பட்ட இடைப்பாடி 13வது வார்டு மலை போல் தேங்கியுள்ள குப்பைகள்

Print PDF

தினமலர்    25.05.2010

புறக்கணிக்கப்பட்ட இடைப்பாடி 13வது வார்டு மலை போல் தேங்கியுள்ள குப்பைகள்

இடைப்பாடி: இடைப்பாடி நகராட்சி 13வது வார்டு பகுதியில் குப்பைகள் மலைபோல தேங்கியுள்ளன. ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் நகராட்சி நிர்வாகத்தால் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ள வார்டாக இந்த பகுதி உள்ளதால் மக்கள் கொதிப்பில் உள்ளனர். இடைப்பாடி நகராட்சி 13வது வார்டு பகுதியில் பவானி ரோடு, மேட்டுத்தெரு, தாவாந்தெரு காட்டுவளவின் ஒரு பகுதி போன்ற பகுதிகள் உள்ளன. 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கவுன்சிலராக இருப்பவர் அ.தி.மு..,வை சேர்ந்த நெடுஞ்சேரலாதன். தாவாந்தெரு காட்டுவளவு பகுதியில் எந்த இடத்திலும் ரோடு வசதி இல்லை. மண் ரோடு சேறும், சகதியுமாக பொதுமக்களை பதம் பார்த்து வருகிறது. பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகளும், வார்டு கவுன்சிலரும், சேர்மனும் கண்டு கொள்ளவில்லை. வழியில் குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் காணப்படுகிறது. சாக்கடை அடைத்துக் கொண்டு கழிவுநீர் மண் ரோட்டிலேயே செல்கிறது. இப்பகுதி மின்கம்பங்களில் ஒன்றில் கூட பல்பு இல்லை. இரவு நேரங்களில் மக்கள் நடமாடவே முடியாத நிலை உள்ளது. பவானி ரோடு சந்தில் 30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட கான்கிரிட் காரை சந்து உள்ளது. காரை தற்போது உடைந்து சின்னபின்னமாகி உள்ளது. கண்ணாரத்தெரு மாரியம்மன் கோவில் எதிரில் நாள்தோறும் குப்பைகள் கொட்டப்படுகிறது. பவானிரோடு சந்திப்பில் உள்ள சாக்கடை கற்கள் உடைந்ததால் அந்த வழியே வாகனத்தில் செல்வோர் அடிக்கடி சாக்கடைக்குள் விழ நேரிடுகிறது.

தாவாந்தெரு காட்டுவளவு பகுதி முத்துமாணிக்கம் கூறுகையில், ""கவுன்சிலர் ஓட்டுக் கேட்கும்போது இங்கு வந்தார். இந்த பகுதியில் ரோடும் இல்லை. சாக்கடையும் இல்லை. யாரிடம் சொல்வதோ தெரியவில்லை,'' என்றார். கலையரங்கம் தியேட்டர் பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்த மாரிமுத்து கூறுகையில், ""முன்பெல்லாம் மினி ஆட்டோ எங்கள் பகுதிக்கு வரும். ரோட்டில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அதுவும் வருவதில்லை. சரிசெய்யத்தான் ஆட்கள் இல்லை,'' என்றார். காட்டுவளவு பகுதியை சேர்ந்த சாந்தி கூறுகையில், "" மின்விளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் தெருவில் நடமாடவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெருவுக்கு எப்போதுதான் விடிவுகாலம் வருமோ தெரியவில்லை,'' என்றார்.

அதே பகுதியை சேர்ந்த கார்த்திகா கூறுகையில், ""எங்கள் பகுதியில் சாக்கடை தூர் எடுக்கவே ஆட்கள் வருவதில்லை. 10 வீட்டுக்காரர்கள் சேர்ந்து வேலைக்கு லீவ் போட்டு சாக்கடையை அள்ளுகிறோம்,'' என்றார். பழனிசாமி கூறுகையில், ""எந்த அடிப்படை வசதியும் செய்து தராததால் நகராட்சியினர் வீட்டுவரி வசூல் செய்யவே வருவதில்லை. அப்படி யாராவது வந்தால் கூட நாங்கள் ரோடு, லைட், சாக்கடை வசதி கேட்போம். கவுன்சிலர், நகராட்சி அதிகாரிகள் என யாரும் இங்கே வருவதே இல்லை'' என்றார.

 

கார்பைட்'கல் வைத்து பழுத்த 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்

Print PDF

தினமலர்   25.05.2010

கார்பைட்'கல் வைத்து பழுத்த 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்

தர்மபுரி: தர்மபுரியில் ரசாயன கல் வைத்து பழுத்த இரண்டு டன் மாம்பழங்களை நகராட்சி சுகாதார பிரிவினர் பறிமுதல் செய்தனர். தர்மபுரி நகரில் உள்ள மாங்காய் மண்டிகளில் "கார்பைட்' எனப்படும் ரசாயன கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்வதாக நகராட்சி சுகாதார பிரிவுக்கு புகார்கள் வந்தன. "கார்பைட்' கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடுவோருக்கு வயிற்று போக்கு, வயிற்று வலி உள்ளிட்ட நோய்கள் வரும் வாய்ப்புள்ளது.

புகாரை தொடர்ந்து நகராட்சி கமிஷனர் அண்ணாதுரை, துப்புரவு அலுவலர் தங்கராஜ், சுகாதார ஆய்வாளர் முனிராஜ் ஆகியோர் தலைமையில் நகராட்சி சுகாதார பிரிவினர் தர்மபுரி டேக்கிஷ்பேட்டை பகுதியில் உள்ள மாங்காய் மண்டிகளில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நான்கு மாங்காய் மண்டிகளில் ரசாயன கல் வைத்து மாங்காய் பழுக்க வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. நான்கு கடைகளில் இருந்து இரண்டு டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. "ரசாயன கல் வைத்து பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என நகராட்சி சுகாதார பிரிவினர் மாங்காய் மண்டிகளில் எச்சரிக்கை செய்தனர்..

 

காலரா பரவாமல் தடுக்க நகராட்சி முன்னெச்சரிக்கை

Print PDF

தினமலர்   25.05.2010

காலரா பரவாமல் தடுக்க நகராட்சி முன்னெச்சரிக்கை

தேவகோட்டை: தேவகோட்டையில், குடிநீர் மூலம் காலரா பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக, நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். அவர் கூறுகையில்,""இங்கு உள்ள ஏழு மேல்நிலை குடிநீர் தொட்டிகளில், "குளோரினேஷன்' செய்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வுக்காக குடிநீர் எடுத்து அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்கள், காய்ச்சி வடிகட்டிய குடிநீரை தான் குடிக்கவேண்டும். ஊழியர்கள் வீடு, தெருக்களில் உள்ள குடிநீர் குழாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் தேங்காமல் இருக்க, பணிகளைசெய்கின்றனர்,'' என்றார்.

 


Page 248 of 519