Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

வீடுகளை சுற்றி சாக்கடை நீர் நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு

Print PDF

தினகரன்    24.05.2010

வீடுகளை சுற்றி சாக்கடை நீர் நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு

புதுச்சேரி, மே 24: புதுவை அடுத்துள்ள அபிஷேகப்பாக்கத்தில் வீடுகளை சுற்றி சாக்கடை கழிவு நீர் தேங்குவது குறித்தும், வடிகால் வசதி இல்லாத போத்தியம்மன் கோயில் தெரு, காமராஜர் வீதி உள்ளிட்ட பல தெருக்களில் சாக்கடை நீர் சூழ்ந்து தூர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள் ளது குறித்து தினகரனில் கடந்த 19ம் தேதி செய்தி வெளியானது.

இதையடுத்து பொது சுகாதாரத்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கந்தசாமி, உள்ளாட்சித்துறை இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு, காங்., மாநில செய்தி தொடர்பாளர் வீரராகவன், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மனு அளித்திருந்தார்.

இது குறித்து பொதுசுகாதார அமைச்சர் நமச்சிவாயம் உள்ளாட்சித்துறை இயக்குநர் பாலசுப்பிரமணியனிடம் உரிய நடவடிக் கையை உடனே எடுக்க உத்தரவிட்டார். அபிஷேகப்பாக்கத்தில் சாக்கடை நீர் சூழ்ந்துள்ள பகுதியில் போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையருக்கு உள்ளாட்சி துறை இயக்குநர் உத்தரவிட்டார்.

Last Updated on Tuesday, 25 May 2010 04:17
 

நீராதாரங்களில் கலக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் அபாயம்

Print PDF

தினமணி         24.05.2010

நீராதாரங்களில் கலக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் அபாயம்

தேனி, மே 23: தேனி மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் நீராதாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலப்பதால், குடிநீர்த் திட்டங்கள் பாழாவதோடு, பொதுமக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், கால்நடைகள், விவசாயம் பாதிக்கப்படும் எனவும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு, மூல வைகை, வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு, வராகநதி ஆகிய பகுதிகளில் குடிநீர் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் தனித்திட்டங்களின் கீழ் 60-க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இவற்றில், லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் பழனிசெட்டிபட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றில் மட்டும் சுத்திகரிப்பு நிலையம் மூலம், ஆற்றில் இருந்து பம்பிங் செய்யப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

மற்ற இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால், நீருந்து நிலையங்களிலும், நீர்தேக்கத் தொட்டிகளிலும் தண்ணீர் குளோரினேசன் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள குடிநீர்த் திட்டங்கள் மூலம் மாவட்டத்தின் குடிநீர் தேவை சமாளிக்கப்பட்டு வந்தாலும், வறட்சிக் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது.

கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வருவதால், ஆற்றில் நீர்வரத்து இல்லாமலும், பெரியாறு அணையில் நீர்மட்டம் சரிவினாலும் உறைகிணறுகள் வற்றிப் போய் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக அளவில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது.

இக்காலங்களில் ஆற்றில் கலக்கும் கழிவுநீர், குடிநீர்த் திட்ட உறைகிணறுகளைச் சூழ்ந்து நின்று, பம்பிங் செய்யப்படும் தண்ணீரில் கலந்து பொதுமக்களுக்கு நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகள், தொழிற்சாலைகள், பட்டறைகள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஓடைகள் மூலமும், பல இடங்களில் நேரடியாகவும் ஆற்றில் கலக்கிறது. இதுதவிர, பல்வேறு இடங்களில் கண்மாய்களிலும் கழிவுநீர் கலக்கிறது. மழைக் காலங்களில் ஆற்றில் நீர்வரத்து உள்ளதால், கழிவுநீர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விடுகிறது.

நீர்வரத்து இல்லாதபோது, கழிவுநீர் ஆற்றுப் படுகையில் தேங்கி, குடிநீரில் கலந்து பொதுமக்களுக்கும், கால்நடைகள் மற்றும் விவசாயத்திற்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுதவிர, சில இடங்களில் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கழிப்பறை செப்டிக் டேங்குகளிலிருந்து உறிஞ்சப்படும் கழிவுகள் ஆற்றிலும், நீர்நிலைப் பகுதிகளிலும் கொட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆற்றில் குடிநீர் திட்டங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளை ஒட்டியுள்ள பகுதி வரை, மணல் அதிக அளவில் அள்ளப்படுவதால், உறைகிணறுகளைச் சூழ்ந்து நிற்கும் கழிவுநீர், தண்ணீர் பம்பிங் செய்யும் போது அதில் எளிதில் கலக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த தண்ணீரை முறையாக குளோரினேசன் செய்து விநியோகம் செய்யாவிட்டால், இதனைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படுகிறது.

இதனால் சுகாதார நலன் கருதியும், எதிர்கால சந்ததியினர் பயன்படுத்தும் வகையிலும் ஆறு மற்றும் நீராதாரப் பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை தடைசெய்யவும், பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகள், தொழிற்சாலைகள், பட்டறைகள் ஆகியவற்றில் இருந்து கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றவும், நீராதாரப் பகுதிகளை கண்காணித்து பாதுகாக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Last Updated on Tuesday, 25 May 2010 04:17
 

மதுரை மாவட்டம் முழுவதும் நாளை தூய்மைப் பணி தொடக்கம்

Print PDF

தினமணி    24.05.2010

மதுரை மாவட்டம் முழுவதும் நாளை தூய்மைப் பணி தொடக்கம்

மதுரை, மே 23: மதுரை மாவட்டம் முழுவதும் மே 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் குப்பைகள் குவிந்து கிடந்தன. இதையடுத்து மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதற்கான ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மே 25 முதல் 28-ம் தேதி வரை கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி ஆகிய இடங்களில் குப்பைகளை அகற்றி மாவட்டம் முழுவதும் தூய்மையாக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மே 25-ம் தேதி மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலமும், மே 26-ல் கிழக்கு மண்டலமும், மே 27-ல் மேற்கு மண்டலமும், மே 28-ல் தெற்கு மண்டலத்திலும் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

அதே நேரத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களிலும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும்.

இதே போன்று தூய்மைப்படுத்தும் பணி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டவுடன் மாணவ, மாணவியர் ஒத்துழைப்புடன் பள்ளி, கல்லூரி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Last Updated on Tuesday, 25 May 2010 04:18
 


Page 250 of 519