Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நீராதாரங்களில் கலக்கும் கழிவு நீர்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

Print PDF

தினமணி         18.05.2010

நீராதாரங்களில் கலக்கும் கழிவு நீர்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

தேனி, மே 18: குடிநீராதாரங்களில் கழிவு நீர் கலக்கும் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பூ.முத்துவீரன் கூறினார்.

தேனியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வயிற்றுப் போக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் அதிக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

உத்தமபாளையம் குடிநீரேற்றும் நிலையத்தில் குடிநீர் வாரிய உதவி பொறியாளர் மேற்பார்வையில், குடிநீரை குளேரினேசன் செய்து விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது வயிற்றுப் போக்கு நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில் குடிநீர் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குடிநீராதாரங்களை மாசுபடாமல் பாதுகாப்பதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். உள்ளாட்சிப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆறு, கண்மாய் உள்ளிட்ட நீராதாரப் பகுதிகளில் கலப்பதை தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நீராதாரப் பகுதிகளில் கழிவுநீர் கலந்தும், குப்பைகளை கொட்டியும் மாசு ஏற்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திறந்தவெளி கழிப்பிடங்களால் நோய் தொற்று ஏற்படுóம் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் தனிநபர் கழிப்பறை திட்டத்தில் கழிப்பறை அமைக்க முன்வர வேண்டும். ஊராட்சிகளில் உள்ள பொதுக் கழிப்பிடங்களை முறையாக பராமரித்து பயன்படுத்த வேண்டும்.

கழிப்பறையை பயன்படுத்திய பின்பு சோப்பால் கை கழுவும் பழக்கத்தை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். குடிநீரை காய்ச்சி ஆற வைத்து பருக வேண்டும் என்றார் ஆட்சியர்.

 

புரோட்டா கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை

Print PDF

தினமலர்     15.05.2010

புரோட்டா கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை

தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்றிரவு மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் புரோட்டா கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். சுகாதாரமற்ற முறையில் மூடி வைக்காமல் இருந்த சால்னா, திறந்த வெளியில் இருந்த புரோட்டா மாவுகள், ரொட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் (பொ) ராஜகோபாலன் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறையினர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றிரவு புரோட்டா கடைகளில் சுகாதாரத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சுகாதார அதிகாரி திருமால்சாமி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் செல்வஜெயபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜபாண்டி, ராஜசேகர், பீட்டர், ராமகிருஷ்ணன், அரிகணேசன், சந்திரமோகன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் கொண்ட குழுவினர் பாளையங்கோட்டை ரோடு, தேவர்புரம் ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள புரோட்டா கடைகளில் சோதனை நடத்தினர். எந்தவித சுகாதாரமும் இல்லாமல், காலாவதியான எண்ணெய், மாவு போன்றவை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. சுகாதாரமற்ற முறையில் மூடி வைக்கப்படாமல் இருந்த சால்னா, புரோட்டா மாவு, காலாவதியான பாமாயில் பாக்கெட்கள், காலாவதியான தேதி எதுவும் இல்லாத மைதாமாவு போன்றவை கடைகளில் இருந்து பறிமுதல் செய்தனர்.

 

காலாவதி உணவுப் பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினமலர்     15.05.2010

காலாவதி உணவுப் பொருட்கள் பறிமுதல்

துறையூர்: தமிழ்நாடு நகராட்சி இயக்குனர், கலெக்டர் உத்தரவுப்படி துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) அறிவுரையின் படி துறையூர் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகளால் பஸ் நிலையம், அதைச் சுற்றியுள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் இருந்த உணவுப் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி, பயன்படுத்தும் காலம், லேபிள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட தின்பண்டங்களின் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். பின்னர் உணவுப் பண்டங்கள் பினாயில் கொண்டு அழித்து நகராட்சி உரக்கிடங்கில் புதைக்கப்பட்டன.

நகராட்சி துப்புரவு அலுவலர் குமார், சுகாதார ஆய்வாளர் குமார், மேற்பார்வையாளர்கள் பாலசுப்ரமணியன், சுப்ரமணியன், ராஜ்வேல் மற்றும் பணியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். காலாவதியான பொருட்களை விற்றாலும், வைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகவலை நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ரவிச்சந்திரன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 


Page 257 of 519