Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஓட்டல், கடைகளில் உணவு பொருட்கள் போலி: 'காலாவதி' ஆய்வில் வெட்ட வெளிச்சம்

Print PDF

தினமலர்     12.05.2010

ஓட்டல், கடைகளில் உணவு பொருட்கள் போலி: 'காலாவதி' ஆய்வில் வெட்ட வெளிச்சம்

சிவகங்கை: மாவட்டம் முழுவதும் நேற்று, ஓட்டல், கடைகளில் சுகாதார துறையினர் ஆய்வு நடத்தினர். பிரபல குளிர்பான நிறுவன பாட்டில்களில், அதே நிறத்தில் 'எசன்ஸ்' நிரப்பி விற்றது தெரியவந்தது. கடைகளில் காலாவதி உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகங்கை, காளையார்கோவில் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் நேற்று, ஓட்டல்; பெட்டி கடை; ஐஸ், சோடா தயாரிப்பு ஆலைகளில் சுகாதார துறையினர் ஆய்வு நடத்தினர். இதில் அதிகாரிகள் அதிர்ச்சி அடையும் அளவிற்கு, போலி, காலாவதி பொருட்கள் இருந்தன. சிவகங்கை ஆசாத் தெருவில் உள்ள சோடா ஆலையில், பிரபல குளிர்பான நிறுவன பாட்டில்களில், தேவையான நிறங்களில் 'எசன்ஸ்' நிரப்பி விற்றது தெரியவந்தது. இங்கு, 10 க்கும் மேற்பட்ட 'கிரேடு' களில் குளிர்பானம், அதற்கான 'எசன்ஸ்' பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் உள்ள சோடா ஆலைகளில், இந்த 'கூத்து' நடக்குமோ என, சந்தேகிக்கப்படுகிறது.

இளையான்குடி: வட்டார மருத்துவ அலுவலர் ராம்குமார், தாசில்தார் சண்முகசுந்தரம், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சரவணக்குமார், உணவு ஆய்வாளர் ராஜேந்திரன் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காலாவதி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மானாமதுரை: மருத்துவ அலுவலர் செந்தில் செல்வி, தாசில்தார் மணி, பேரூராட்சி செயல் அலுவலர் சஞ்சீவி, உணவு ஆய்வாளர் முத்துராமலிங்கம், துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை சோதனை நடத்தினர். 5,000 மதிப்புள்ள காலாவதி பொருட்களை கைப்பற்றினர்.

முற்றுகை: இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வர்த்தகர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்னர். எஸ்.., முத்துராமலிங்கம் தலைமையில் போலீசார் சமரசம் செய்தனர். எதிர்ப்பால், ஆய்வு பாதியில் நிறுத்தப்பட்டது. மதியம் 3.30 மணிக்கு, தாசில்தார் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், 'குடிசை தொழில் தயாரிப்புகளில் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை. இதன் உற்பத்தியாளர்களை விடுத்து, எங்களை மிரட்டுகின்றனர்,' என வர்த்தகர்கள் புகார் தெரிவித்தனர்.

காரைக்குடி: காரைக்குடி, கண்டனூர், கோட்டையூர், புதுவயலில் சோதனை நடந்தது. பெரும்பாலான ஓட்டல்களில் ஊசிப்போன பரோட்டா, 'பிரிட்ஜ்' ல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிக்கன், மட்டன் வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஐந்துவிளக்கு, சுப்பிரமணியபுரத்தில் கெட்டுப்போன சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கம்புணரி: சுகாதார அலுவலர் ஜெயக்கண்ணன், ஆய்வாளர் தியாகராஜன், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தனர். ஓட்டல்களில் ஏழு நாட்களில் சுகாதாரத்தை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டது. 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காலாவதி பொருட்கள் அழிக்கப்பட்டன.

திருப்புத்தூர்: மாவட்ட பூச்சியியல் நிபுணர் ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில் குமார், உணவு ஆய்வாளர் சுரேஷ், சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்ட்ராஜ் ஆய்வு நடத்தினர். 6,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேவகோட்டை: நகர் நல அலுவலர் டாக்டர் செந்தில்ராஜ், தாசில்தார் சரோஜா ஆய்வு நடத்தினர். 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொது இடத்தில் புகைபிடித்து இருவருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அச்சம்: கோடை வெப்பத்தை தணிக்க, பிரபல நிறுவனங்களின் குளிர்பானத்தை அதிகம் விரும்பி அருந்துவர். ஆனால், இதில் போலிகள் புழக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உணவு வகைகளில் போலிகளை தடுக்க சுகாதார துறையினர் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூ. 1.10 லட்சம் பொருள் அழிப்பு: நேற்று மாவட்டத்தில் உள்ள 350 க்கும் மேற்பட்ட கடைகளில் நடந்த ஆய்வில், 1.10 லட்ச ரூபாய் மதிப்புள்ள காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துணை இயக்குனர் (சுகாதாரம்) ரகுபதி கூறுகையில், ''தொடர்ந்து இப்பொருட்களை விற்கும் கடையினர் மீது, உணவு கலப்பட தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Last Updated on Wednesday, 12 May 2010 10:13
 

குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக புகார்

Print PDF

தினமணி 06.05.2010

குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக புகார்

வேலூர், மே 5: வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 44-வது வார்டில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புதன்கிழமை புகார் தெரிவித்தனர்.

வேலூர் மாநகராட்சி 44-வது வார்டுக்கு உட்பட்டது அப்பாதுரை செட்டித் தெருவில், கழிவு நீர் செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி இருக்கிறது.

இதுகுறித்து பல முறை மாநகராட்சி செயற்பொறியாளரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும், சில நேரங்களில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியினருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, கழிவு நீர் வாய்க்கால் செல்லும் பாதையை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் என்று புதன்கிழமை வேலூர் மாநகராட்சி மேயர் ப.கார்த்திகேயனைச் சந்தித்து இப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

 

கலப்படப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

Print PDF

தினமணி 06.05.2010

கலப்படப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

மதுரை, மே 5: கலப்படமான, தரக்குறைவான, காலாவதியான பொருள்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் சி. காமராஜ் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உணவுப் பொருள்கள், தானியங்கள், பிஸ்கட், தேயிலைத் தூள், சாக்லெட், சோப்பு, பவுடர் போன்ற அழகுசாதனப் பொருள்கள் அனைத்திலும் பொட்டலப் பொருள்கள் ஒழுங்குமுறை ஆணை 1975, விதி எண் 5}ன் கீழ் உற்பத்தி செய்யப்பட்ட தேதி, எடை, அதிகபட்ச விற்பனை விலை, உற்பத்தியாளர் முகவரி, காலாவதியாகும் தேதி முதலியனவற்றை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடாத பொட்டலப் பொருள்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறிச் செயல்படும் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காலாவதியான பொருள்களை கடைகளிலிருந்தும், கிடங்கிலிருந்தும் உடனடியாக அகற்றி அழிக்க வேண்டும். அவ்வாறு அழிப்பதற்குப் பதிலாக அவற்றை சட்டவிரோதமாக சிறு வணிகர்களிடம் விற்பனை செய்தால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 273}ன் கீழும், உணவு கலப்படச் சட்டம் 1954 பிரிவு 7}ன் கீழும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காலாவதியான, கலப்படப் பொருள்களை விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்கள், சிறு வணிகர்கள் மீது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படுவதுடன், நுகர்வோர் குறைதீர் ஆணையம் மூலமாக அபராதம் விதிக்கவும், தடைவிதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தரக்குறைவான, கலப்பட, காலாவதியான உணவுப் பொருள்கள் மற்றும் பொட்டலப் பொருள்களை யாரேனும் விற்பதாகத் தெரியவந்தால் அது பற்றி பொதுமக்கள் மாவட்ட நுகர்வோர் சேவைக் குழுவின் தலைவரான மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு தொலைபேசி எண்கள் (0452) 2532501, 2532503, 2532504, 2532505 மூலமாக புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

 


Page 270 of 519