Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கண்ணம்பாளையம் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம்

Print PDF

தினத்தந்தி      14.11.2013

கண்ணம்பாளையம் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம்

சூலூர் ஒன்றியத்துக்குட்பட்ட கண்ணம்பாளையம் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா விழிப்புணர்வு பிரசாரம் தலைவர் தளபதி முருகேசன் தலைமையில் நடந்தது. விழிப்புணர்வு பிரசாரத்தில் துண்டு பிரசுரங்களை நேரடியாக வீடு வீடாக சென்று கொடுத்தனர். மேலும் தொட்டிகள், ஆட்டுக்கல்லில் உள்ள அசுத்த நீரினை அகற்றி சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தி மருந்துகளும் தெளிக்கப்பட்டது. அனைத்து வீடுகளிலும் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டு அறிவுரைகளும் வழங்கப்பட்டது. இதில் துணைத்தலைவர் சிவக்குமார், செயல் அலுவலர் முத்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

சிறப்பு முகாம்கள் மூலம் நிலவேம்பு பொடி

Print PDF

தினமணி       14.11.2013

சிறப்பு முகாம்கள் மூலம் நிலவேம்பு பொடி

பொதுமக்களுக்கு நிலவேம்பு பொடி வழங்கும் முகாமை தொடங்கி வைத்து நிலவேம்பு குடிநீர் வழங்கும் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் (சுகாதாரம்) பழனி.
பொதுமக்களுக்கு நிலவேம்பு பொடி வழங்கும் முகாமை தொடங்கி வைத்து நிலவேம்பு குடிநீர் வழங்கும் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் (சுகாதாரம்) பழனி.

சென்னையில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் நிலவேம்பு குடிநீர் பொடி வழங்கும் முறை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த முறையை சைதாப்பேட்டை தாதண்டர் நகர் அரசு அலுவலர் குடியிருப்பில் நிலைக்குழு தலைவர் (சுகாதாரம்) பழனி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த நிலவேம்பு பொடி அனைத்து மாநகராட்சி மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சென்னையின் பல பகுதிகளில் நிலவேம்பு பொடி வழங்கும் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

மேலும் இதில், நிலவேம்பு குடிநீர் தயாரிப்பு முறை குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

10 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையின்றி நிலவேம்பு குடிநீர் வழங்கக் கூடாது என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது ஆகும்.

 

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக சென்று ‘நிலவேம்பு குடிநீர் பொடி’ வினியோகம்

Print PDF

மாலை மலர்        13.11.2013

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக சென்று ‘நிலவேம்பு குடிநீர் பொடி’ வினியோகம்

சென்னை, நவ. 13- சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு ‘நில வேம்பு குடிநீர் பொடி’ வழங்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு வீடு தேடிச் சென்று ‘நில வேம்பு குடிநீர் பொடி’ வழங்குவதை, சென்னை மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் பழனி தொடங்கி வைத்தார். அப்போது மாநகர நல கூடுதல் அதிகாரி டாக்டர் மணி உடன் இருந்தார்.

சைதாப்பேட்டை தாதண்டம் நகர் அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் வீடு வீடாக ‘நில வேம்பு குடிநீர்பொடி’ வழங்கப்பட்டது. அந்த பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமும் நடந்தது. இதில் மண்டல நல அதிகாரி, டாக்டர்கள் குழுவினர், சுகாதார ஆய்வு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

டெங்கு, சிக்குன் குனியா போன்ற வைரஸ் காய்ச்சல் மற்றும் அதனால் ஏற்படும் உடல் வலி, மூட்டு வலி ஆகியவற்றுக்கு நிலவேம்பு குடிநீர் சிறந்த மருந்து. சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் நிலவேம்பு குடிநீர் பொடியில் நிலவேம்பு உள்ளிட்ட 9 மருந்து மூலிகைகள் அடங்கி உள்ளன.

காய்ச்சல் தொடங்கிய முதல் மூன்று நாட்களுக்கு தினமும் 4 வேளை 50 மில்லி லிட்டர் நிலவேம்பு குடிநீரை பருக வேண்டும். காய்ச்சல் குறைந்த பிறகு 50 மி.லி வீதம் 4 நாட்களுக்கு பருக வேண்டும். எந்த காய்ச்சலாக இருந்தாலும் நிலவேம்பு குடிநீரை பருகும் போது ஆங்கில மருந்துகளையும் பயன்படுத்தலாம்.

நிலவேம்பு குடிநீருடன் பப்பாளி இலைச்சாறும் தினமும் 10 முதல் 15 மில்லி லிட்டர் நான்கு வேளை பருகலாம். இதனால் ரத்தத்தில் தட்டணு எண்ணிக்கை குறைவதை தடுக்கலாம்.

10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படியே இவற்றை கொடுக்க வேண்டும். மருத்துவர் ஆலோசனை பெறாமல் கொடுக்கக்கூடாது.

நிலவேம்பு குடிநீர் பொடியை 5 கிராம் (ஒரு டீஸ்பூன்) அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் 200 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி காய்ச்ச வேண்டும். இந்த கலவை கொதித்து 50 மி.லி ஆக வற்றிய பிறகு வடிகட்டி மிதமான சூட்டில் நிலவேம்பு குடிநீரை பருக வேண்டும்.

பப்பாளி இலை சாறு தயாரிக்கும் முன்பு பப்பாளி இலையை பறித்து அதில் உள்ள நரம்புகளை நீக்க வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீரில் இலையை கழுவி நீர்விடாமல் அரைக்க வேண்டும். அதை சுத்தமான துணியில் வைத்து பிழிந்து 10 அல்லது 15 மி.லி. சாறு எடுத்து பருக வேண்டும்.

இந்த செய்முறை விளக்கத்தை பொதுமக்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் விளக்கி கூறி வருகிறார்கள்.

 


Page 28 of 519