Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பிளாட்பார ஓட்டல்களில் சோதனை

Print PDF

தினமலர் 06.05.2010

பிளாட்பார ஓட்டல்களில் சோதனை

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் பிளாட்பார ஓட்டல்களில் நேற்று மாலை மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு, உணவுப் பொருட் களை தயார் செய்த 15 கடைகளில் சோதனை நடந்தது. 8 கடைகளில் இருந்து உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சோதனைக்கு அனுப்பப் பட்டன. மாநகராட்சி தலைமை சுகாதார அதிகாரி சுப்பிரமணியன் தலைமையில் 12 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

 

உணவில் இப்படியும் கலப்படம்: விலைவாசி உயர்வால் வந்த வினை

Print PDF

தினமலர் 06.05.2010

உணவில் இப்படியும் கலப்படம்: விலைவாசி உயர்வால் வந்த வினை

மதுரை: உணவில் எப்படியெல்லாம் கலப்படம் செய்யலாம் என மதுரையில் சிலர் 'ரூம் போட்டு யோசிப்பார்கள்' போல் இருக்கிறது. விலைவாசி உயர்வால், செலவைக் குறைப்பதற்காக விதம் வித மாய் கலப்பட உத்திகளை மதுரையில் கண்டுபிடித்துள்ளனர். முன்பெல்லாம் அரிசியில் கல்லை கலப்பது, பாலில் தண்ணீரை கலப்பது, ஆட்டிறைச்சியில் மாட்டிறைச்சியை கலப்பது தான் அதிகபட்ச கலப்படமாக இருந்தது. இப்போது நினைத்து பார்க்க முடியாத வகையில் கலப்படங்கள் நடக்கின்றன.

அவற்றின் பட்டியல் இதோ:

* பாலில் ஜவ்வரிசியை துணியில் கட்டி போட்டு விடுவர். இப்போது கெட்டியான பால் ரெடி.

* டீத்தூளில் முந்திரி தோல், புளியங்கொட்டை தோல், மஞ்சணத்தி இலைகளை கலக்கின்றனர். திடமான டீ தயார்.

* பழைய சோற்றை துணியில் கட்டி, வடித்துவிட்டு, மிக்சியில் போட்டு அடித்து, அதை வெண்ணெயுடன் கலக்கின்றனர். பார்க்க வித்தியாசம் தெரியாது. உருக்கினால் நெய் வராத வெண்ணெய் இது. பட்டர் பன் தயாரிக்க இது பயன்படுகிறது.

*நெய்யில் வனஸ்பதியை கலந்து, 'சுத்தமான பசு நெய்' என்று கூறி, விற்றுவிடுவர்.

* புதிதாக தயாரித்த புரோட்டாவுடன் பழைய புரோட்டாவை கலந்து விடுவர். 'கொத்து புரோட்டா' கேட்டால், பழைய புரோட்டாவில் குருமா, முட்டையை ஊற்றி, வெங்காயம், தக்காளியை வதக்கி, 'மணக்க, மணக்க' தந்துவிடுவர். நாக்கை சப்புக்கொட்டியபடி, நாம் சாப்பிட வேண்டியது தான்.

* மீன் மார்க்கெட்டுகளில் ஓரமாக சேரும் கழிவு மீன்களை, குறைந்த விலைக்கு வாங்கி வந்து, மாலையில் கடை போட்டு, 'செக்கச் செவேல்' என மசாலா தடவி, 'சுடச்சுட பொறித்த மீன்' என்று கூறி, வாசம் மூக்கைத் துளைக்க, ஊரைக் கூட்டி விற்று விடுவர். பெரும்பாலும் 'டாஸ்மாக்' கடைகளுக்கு அருகில் இவர்கள் கடை விரிக்கின்றனர்.

* ரோட்டோரத்தில் மலிவு விலையில், அண்டாக்களில் ஆவி பறக்க, 'கம, கம' மணத்தையும் பரப்பியபடி, பார்ப்பவர்களின் பசியை தூண்டும் பிரியாணியில், நெய் அல்லது ரீபைண்ட் ஆயிலுக்குப் பதில் மாட்டு கொழுப்பு எண் ணெய்யை கலக்கின்றனர். இதைத் தொடர்ந்து சாப்பிட் டால், இதய நோயை நாமே வலிய இழுத்து வருவதற்குச் சமம்.

* கோடை காலத்தில், கலர் கலராய், ஜூஸ் என்ற பெயரில் குளிர்ச்சியாக விற்கப்படும் திரவங்களில் சர்க்கரைக்குப் பதில், 'சாக்கரின்' கலக்கின்றனர். இதனால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உறுதி. பெரும்பாலும் வைகை கரையோரங்களில் இக்கடைகளை காணலாம்.

* கறிக்கோழியின் கழிவு, நோயால் இறந்த கோழி... இவற்றை'ஓசி'யில் வாங்கி வந்து, கவர்ச்சியான கலரில் மசால் தடவி, 'சிக்கன் 65' என்ற பெயரில், 100 கிராம் 12 ரூபாய்க்கு விற்கின்றனர். இதில் நோயை பரப்பும் அனைத்து கிருமிகளும் 'ஆஜர்' ஆகியிருக்கும்.

* இட்லி மாவில் பழைய சோற்றை ஆட்டி கலந்து, விற்கின்றனர். மல்லிகைப்பூ இட்லிக்கு சூப்பர் மாவு ரோட்டோரம் ரெடி.

* சில ஓட்டல்களில் அரிசி உலை வைக்கும்போதே சுண்ணாம்பை துணியில் கட்டி, அரிசியுடன் சேர்த்து கொதிக்க வைப்பர். இதில் வெந்த சோறு, 'விரைப்பாக' இருக்கும். அதிகம் சாப்பிட முடியாது. ஓட்டல்காரர்களுக்கு அரிசி செலவு குறையும்.இப்படி நம்மூரில் புதுப்புது உருவில் புதுப்புது கலப்படம் நடக்கிறது.பொதுமக்களே உஷார்:

நமக்கு தெரிந்தவை இவை. தெரியாமல் இன்னமும் நிறைய கலப்படங்கள் நடக்கின்றன. இனியும் புதிய உத்திகள் கண்டுபிடிக்கப்படலாம். எனவே, 'அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று குறை கூறிக்கொண்டு இருக்காமல், பொதுமக்களும் கவனமாக இருக்க வேண்டும். எங்கும் சாப்பிடும் முன், அந்த கடையின் சுகாதாரம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.

கலப்படத்தை கண்டறிய: மதுரை கீழமாசி வீதியில் உள்ள தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தில், 1978 முதல் உணவுப் பொருட்கள் தர பரிசோதனை மையம் செயல்படுகிறது. இங்கு அனைத்து வகை உணவுப் பொருட்களையும் ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்கின்றனர். மத்திய சிறை மற்றும் ரயில்வே கேட்டரிங்கிற்கு கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களை இங்கு ஆய்வு செய்கின்றனர். யார் வேண்டுமானாலும் உணவுப் பொருட்களை ஆய்வுக்கு கொடுக்கலாம். ஆய்வு முடிவுகள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வழங்கப்படும். குறைந்த அளவாக 50 முதல் 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என இதன் சங்க கவுரவச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்தார். விபரங்களுக்கு 0452-232 2188ல் தொடர்பு கொள்ளலாம்.

கலப்பட உணவால் நாள் எல்லாம் நோய் தான

மதுரையில் தினமும் பல்வேறு ஓட்டல்களில் சாப்பிடும் சிலரிடம் கேட்ட போது... நித்யானந்தம் (31) (தனியார் மொபைல் நிறுவன விற்பனை அலுவலர்): தென் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறேன். காலையில் மட்டும் வீட்டில் டிபன். மதியம், இரவு ஓட்டல்களில் தான் சாப்பாடு. எங்களைப்போன்ற நடுத்தர வருமானம் உள்ளவர் பெரிய ஓட்டல்களில் சாப்பிட இயலாது. சாலையோர சிற்றுண்டிகளை நம்பியே உள்ளோம்.

வெவ்வேறு ஓட்டல்களில் சாப்பிட்டு வருவதால் மாதத்திற்கு நான்கைந்து நாட்கள் வயிற்றோட்டம், காய்ச்சல், ஓவ்வாமை ஏற்படுகிறது. உடல் உபாதை நீங்குவதற்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. வேலைக்கு சென்றால் தான் சம்பளம். எனவே, மருத்துவத்திற்கு ஆகும் செலவை விட லீவு எடுப்பதால் சம்பளம் பெருமளவு குறைகிறது.

முபாரக் (30) (தனியார் எலக்ட்ரானிக் சர்வீஸ் இன்ஜினியர்), ஆண்டிபட்டி: மதுரை தனியார் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். தினமும் ஆண்டிபட்டியில் இருந்து மதுரைக்கு வருகிறேன். நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் சம்பளம். காலையில் மட்டும் வீட்டில் சாப்பிடுவேன். மதியம், இரவு ஓட்டல் தான். மதியம் மட்டும் ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டு வருகிறேன். ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள சிறிய ஓட்டல்களில் பெரும்பாலும் இரவில் சாப்பிடுவது வழக்கம். இப்பகுதியில் சாப்பிட்ட மாணவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. மதுரையில் சாப்பாட்டில் கலப்படம் அதிகரித்துள்ளது. கலப்பட உணவுகளை சாப்பிடுவதால் வயிற்று உபாதை ஏற்பட்டு பல நாட்கள் வேலைக்கு வர முடியாத நிலை உள்ளது.

 

மாவட்ட ஓட்டல்களில் சுகாதாரம் குறித்த ரெய்டு இல்லை : லாபம் மட்டுமே குறியால் கலப்படம் அதிகரிப்பு

Print PDF

தினமலர் 06.05.2010

மாவட்ட ஓட்டல்களில் சுகாதாரம் குறித்த ரெய்டு இல்லை : லாபம் மட்டுமே குறியால் கலப்படம் அதிகரிப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓட்டல்களில் இதுவரை பெரியளவில் உணவு மற்றும் சுகாதாரம் குறித்த அதிரடி ரெய்டு நடத்தாமல் உள்ளதால், கலப்படம் மற்றும் தரமற்ற பொருட்களால் தயாரிக்கும் உணவு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. மதுரையில் நடந்த உயிர்பலி சம்பவம் போல் இங்கும் நடப்பதற்குள் சுகாதாரம் குறித்த அதிரடி ரெய்டு நடத்த வேண்டும்.மதுரையில் ரயில்வே ஸ்டேஷன் எதிரே புதுச்சேரியை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் இசைஅமுதன் சுகாதாரமற்ற உணவை சாப்பிட்டதால் ,உடல்நல குறைவு ஏற்பட்டு இறந்தார். இதை தொடர்ந்து மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஓட்டல்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

ஓட்டல்கள் தரவரிசையில் பல ரகங்கள் உள்ளன. , பி , ஸ்டார், சாதாரண ஓட்டல் என தரம் பிரிக்கப்பட்டுள்ளன. தரத்திற்கு ஏற்றாற்போல் ஓட்டல்களில் நுகர்வோர்களுக்கு பல்வேறு வசதிகளை ஓட்டல் நிர்வாகத்தினர் ஏற்படுத்தி தரவேண்டும். மேலும், ஒவ்வொரு ஓட்டல்களிலும் சமையலறை முதல் சப்ளையர் வரை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். சப்ளையர்கள் குறிப்பாக தொற்று நோயோ மற்ற நோய்களோ இருக்க கூடாது. இதற்கு மருத்துவ துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பாத்திரங்கள் சுடுதண்ணீரில் கழுவ வேண்டும். கழிப்பறை, பாத்ரூம் இருக்க வேண்டும்.

சமையலறையில் இருந்து புகை வெளியே வரக்கூடாது. கழிவுநீர் தடையின்றி வெளியேற வேண்டும். சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். ரோடுகளில் சமையல் பணி நடக்க கூடாது. இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. பிரியாணி என்ற பெயரில் ஆடுக்கு பதில் மாட்டிறைச்சி போன்றவைகளை கலப்படம் செய்ய கூடாது. சுகாதாரமான முறையில் ஓட்டல்கள் செயல்பட்டு சுகாதாரான உணவுகளை வழங்குகிறார்களா என அவ்வப்போது நகராட்சி மற்றும் சுகாதார துறை ஆய்வாளர்கள் ரெய்டு நடத்த வேண்டும்.

விதிமுறைகள் மீறுபவர்களின் ஓட்டல்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. ஆனால், ராமநாதபுரம் மாவட் டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற ரெய்டு பெரியளவில் நடக்கவில்லை. சுற்றுலா ஸ்தலங்கள் அதிகம் உள்ள மாவட்டத்தில் ஓட்டல்களுக்கு பஞ்சமில்லை. கூட்டம் அதிகமாக வருவதால் ஓட்டல்களில் கலப்படம் முதல் பல்வேறு அத்துமீறல் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதை சுகாதார துறையினர், நகராட்சி நிர்வாகம் என யாருமே கண்டு கொள்வதில்லை.

அவ்வப்போது ஓட்டல்களில் கவனிப்பு உள்ளதால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களின் தரம் மிகவும் தள்ளாடி வருகிறது. ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை போன்ற நகரங்களில் முதற்கட்டமாக அதிரடி ரெய்டு நடத்தினால் பல்வேறு ஓட்டல்களில் அத்துமீறல் வெளிச்சத்திற்கு வரும்.

ராமநாதபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சந்திரன் கூறியதாவது: ஓட்டல்களில் ரெய்டு நடத்த சுகாதார துறையினருடன் இணைந்து செல்ல வேண்டும். தற்போது இதுகுறித்த சுற்றறிக்கை வந்துள்ளதாக தெரிகிறது. கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற முறையில் ஓட்டல்கள் செயல்படுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார

Last Updated on Thursday, 06 May 2010 07:11
 


Page 272 of 519