Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சுகாதாரமற்ற உணவு தடை செய்ய வலியுறுத்தல்

Print PDF

தினமலர் 05.05.2010

சுகாதாரமற்ற உணவு தடை செய்ய வலியுறுத்தல்

மதுரை: '' சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தடை செய்ய வேண்டும்,'' என, கவுன்சிலர் சுப்புராம் மாநகராட்சி கமிஷனருக்கு கோரிக்கை வைத்துள்ளார். மனுவில் மேலும் அவர் கூறியுள்ளதாவது:சுகாதார அலுவலர்கள் உணவு விடுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கடைகளை தடை செய்ய வேண்டும்.வீடுகளுக்கு கொடுக்கும் தண்ணீர் கேன், பாக்கெட், பாட்டில்களுக்கு ஐ.எஸ்.ஐ முத்திரை இருக்கின்றனவா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Last Updated on Wednesday, 05 May 2010 06:34
 

'உவ்வே' உணவு விற்ற ஓட்டல்களுக்கு சீல்: மாட்டிறைச்சி பறிமுதல்

Print PDF

தினமலர் 05.05.2010

'உவ்வே' உணவு விற்ற ஓட்டல்களுக்கு சீல்: மாட்டிறைச்சி பறிமுதல்

மதுரை: மதுரையில் ஒரு ஓட்டலில் விஷமாக மாறிய உணவை சாப்பிட்ட கல்லூரி மாணவர் இறந்த சம்பவத்தின் எதிரொலியாக நேற்று அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த மூன்று ஓட்டல்களுக்கு சீல் வைத்தனர். மாட்டிறைச்சியை பறிமுதல் செய்தனர். புதுச்சேரி தவளைக் குப்பத்தை சேர்ந்தவர் இசை அமுதன் (21). வேலூர் எஸ்.ஐ.ஐ.டி.,பொறியியல் கல்லூரியில் தீத்தடுப்பு பாதுகாப்பு பிரிவில் படித்து வந்தார். இவர் நண்பர்களுடன் பயிற்சி பெற மதுரை வந்தார். நேற்று முன் தினம் ரயில்வே ஸ்டேஷன் எதிரேயுள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்ட பின், உடல் நலக்குறைவால் இசை அமுதன் இறந்தார். இதையடுத்து, சுகாதாரமற்ற முறையில் மதுரையில் இயங்கும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. நேற்று காலை 8.30 முதல் 10.30 மணி வரை மாநகராட்சி நகர் நல அலுவலர் சுப்பிரமணியம், ஆர்.டி.ஓ.,சுகுமாறன், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகையா தலைமையில் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் மற்றும் டவுன்ஹால் ரோட்டிலுள்ள கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.சிவபார்வதி ஓட்டல் மற்றும் ஜம் ஜம், நியூ மாஸ் பிரியாணி கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததாக அவற்றிற்கு சீல் வைத்தனர். பெட்டிக்கடை நடத்த அனுமதி பெற்றுவிட்டு, அந்த இடத்தில் முறைகேடாக மாட்டிறைச்சியை கலந்து, நியூ மாஸ் பிரியாணி கடை நடத்தி வந்தனர். அங்கு கால் பிளேட் பிரியாணி 20 ரூபாய்க்கு விற்பனையானதால் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு 10 கிலோ மாட்டிறைச்சி, 10 கிலோ பிரியாணி, 50 முட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் 10 கடைகளில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். போலீஸ் உதவிக்கமிஷனர் கணேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகர் நல அலுவலர் சுப்பிரமணியன் கூறுகையில்,''இந்த ஓட்டல்களில் சுகாதாரம் படு மோசம். சில குறுகலான இடங்களில் இயங்கி வந்தன. பண்டங்களில் ஈ மொய்க்கின்றன. மாவு, சமையல் எண்ணெய், குடிநீர் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்துள்ளோம். ஆய்வுக்கு பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு கொதிக்க வைத்த அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். ஊழியர்கள் சுத்தமாக இருக்க வேண்டும். உணவை பாதுகாக்கும் பாத்திரங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். மற்ற 10 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியுள்ளோம். இதுபோல் அடிக்கடி சோதனை நடத்தப்படும்,'' என்றார்.

சட்டம் என்ன சொல்கிறது :
உணவில் கலப்படம் செய்வதை தடுக்கும் சட்டம், 'உணவு கலப்பட தடுப்பு சட்டம் 1954' என அழைக்கப்படுகிறது. இதன்படி, உணவில் கலப்படம் செய்தால் குறைந்தது 6 மாத சிறை முதல் 10 ஆண்டு சிறை தண்டனை வரை வழங்க வழி இருக்கிறது. 2000 ரூபாய் அபராதம் மட்டுமே விதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இதுவரை மதுரையில் இச்சட்டத்தின் கீழ் யாருக்கும் பெரிய தண்டனை வாங்கித் தரப்பட்டதாக தெரியவில்லை.

Last Updated on Wednesday, 05 May 2010 06:29
 

கலப்பட எண்ணெய் விற்பனை: கடைகளில் சுகாதாரத்துறை ஆய்வு

Print PDF

தினமலர் 05.05.2010

கலப்பட எண்ணெய் விற்பனை: கடைகளில் சுகாதாரத்துறை ஆய்வு

நாமக்கல்: மளிகை கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு எண்ணெயில் கலப்படம் செய்வதாக வந்த புகாரை அடுத்து, சுகாதார ஆய்வாளர்கள் நாமக்கல் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மளிகை கடைகளில் கடலை எண்ணெய்யில் கலப்படம் செய்து விற்பனை செய்வதாக, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சேகர் மற்றும் நகராட்சி கமிஷனர் ஆறுமுகம் ஆகியோருக்கு தகவல் வந்தது. அவர்கள் உத்தரவின்பேரில், சுகாதார அலுவலர் முகமது மூசா, உணவு ஆய்வாளர் சிவசண்முகம், தொழில் நுட்ப நேர்முக உதவியாளர் கல்யாணசுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள் பாலசுவாமிநாதன், ராஜகணபதி ஆகியோர் நகராட்சி பகுதியில் உள்ள மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு எண்ணெய்களை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பினர். மேலும், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாத, பேட்ஜ் எண் குறிப்பிடப்படாத உணவு பொருட்கள், சோப்பு, வாசிங் பவுடர் உள்பட 11 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.ஆய்வுகள் தொடர்ந்து நடக்கும். காலாவதி தேதி அச்சிடப்படாத பொருட்களை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் எச்சரித்தனர்.

Last Updated on Wednesday, 05 May 2010 06:26
 


Page 277 of 519