Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

அனைத்து பேரூராட்சிகளிலும் உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சி கூடங்கள்

Print PDF

தினகரன்            08.11.2013

அனைத்து பேரூராட்சிகளிலும் உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சி கூடங்கள்

ஓமலூர், : உடல் பருமனைக் குறைக்கவும், திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையிலும், அனைத்து பேரூராட்சிகளிலும் நவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

வெளிநாடுகளை போல், நொறுக்குத்தீனி கலாசாரம் நம்மிடையே வேகமாக பரவி வருகிறது. இதனால் நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் பிரச்னை ஏற்படுகிறது. இது போன்ற உடலியல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நாள்தோறும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது நடைபயிற்சி அவசியம் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். உடற்பயிற்சியின் அவசியத்தை பொதுமக்கள் உணரத் தொடங்கியுள்ளதால் தனியார் உடற்பயிற்சி கூடங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

தனியார் பயிற்சி மையங்களுக்கு கட்டணம் செலுத்தி செல்ல முடியாத பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், விளையாட்டு வீரர்களை கிராமங்களிலிருந்து உருவாக்கும் வகையிலும் தமிழக அரசு நவீன உடற்பயிற்சிக் கூடங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதனையொட்டி, முதலமைச்சரின் விளையாட்டுத்துறை திட்டங்கள் என்ற தலைப்பில் அனைத்து பேரூராட்சி பகுதிகளிலும் நவீன உடற்பயிற்சி கூடத்தை அமைக்க பேரூராட்சிகள் இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி ஒவ்வொரு பேரூராட்சியிலும் உடற்பயிற்சிக்கூடம் மற்றும் அதற்கான கருவிகள் வாங்குவதற்காக தலா ரூ.10 லட்சம் என்ற அளவில் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், கன்னங்குறிச்சி, கொளத்தூர், கொங்கணாபுரம், மேச்சேரி, பி.என்.பட்டி, பி.என்.பாளையம், சங்ககிரி, தாரமங்கலம், வாழப்பாடி, வீரக்கல்புதூர், ஜலகண்டாபுரம், இடங்கணசாலை, இளம்பிள்ளை, கெங்கவல்லி, கருப்பூர், மல்லூர், ஏத்தாப்பூர் ஆகிய 18 பேரூராட்சிகளில் தலா ரூ.10 லட்சம் மதிப்பில் நவீன உடற்பயிற்சிக்கூடம் அமைக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

இதே போன்று நாமக்கல் மாவட்டத்தில் மல்லசமுத்திரம், மோகனூர், நாமகிரிப்பேட்டை, படவீடு, பரமத்தி, வேலூர், அத்தனூர், எருமப்பட்டி, பிள்ளனூர், சீராப்பள்ளி என 10 பேரூராட்சிகளில் நவீன உடற்பயிற்சி க்கூடம் அமையவுள்ளது.

 

தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை...தீவிரம்! டெங்கு பாதித்த பகுதியில் சிறப்பு முகாம்

Print PDF

தினமலர்           07.11.2013

தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை...தீவிரம்! டெங்கு பாதித்த பகுதியில் சிறப்பு முகாம்

நாமக்கல்: டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதியில், இரண்டு மருத்துவக்குழுவினர் முகாமிட்டு, தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் - பரமத்தி சாலை, சிப்காட் பின்புறம் உள்ள கொங்கு நகர் மற்றும் கணபதி நகரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரியப்பட்டி பஞ்சாயத்தில் இருந்து இப்பகுதி, தற்போது, நகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

இப்பகுதியில், சாலை வசதி, சாக்கடை வசதி ஏற்படுத்தித்தரவில்லை. சக்கடை கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. மேலும், துர்நாற்றம் வீசுவதால், அங்கு குடியிருக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

கடந்த மாதம், ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். மேலும், சக்திவேல் - மலர் தம்பதியினரின், 12 வயது மகளும் டெங்குவால் பாதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் இறந்தார்.

டெங்கு பாதிப்பு குறித்து பரிசோதனை செய்ய, எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சொந்தமான நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சென்ற போது, அப்பகுதி மக்கள், ஆம்புலன்ஸை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெமினி தலைமையில், மருத்துவர் குழுவினர், டெங்கு காய்ச்சல் பாதித்த பகுதியான, கொங்குநகர், கணபதி நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில், இரண்டு குழுவினர் தனித்தனியாக முகாமிட்டு, அனைத்து குழந்தைகளையும் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

மேலும், ஒவ்வொரு வீடாக சென்று காய்ச்சால் பாதிக்கப்பட்டவர்கள், எவ்வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது.

மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெமினி கூறியதாவது:

டெங்கு பரவுவதை தடுக்க, வீட்டை சுத்தமாக பராமரிக்க வேண்டும். சாக்கடையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களில் மழை நீர் தேங்கி இருப்பதை வெளியேற்ற வேண்டும். மழைநீர் வீடுகளில் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடிநீரில் புளோரிநேசன் செய்ய வேண்டும் என, பஞ்சாயத்து, நகராட்சி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இடத்தில் நகராட்சிப் பணியாளர்கள் சென்று சாலையை சுத்தம் செய்தும், சாக்கடை நீரை உறிஞ்சி எடுத்தும் வெளியேற்றி உள்ளனர்.

பொதுமக்கள் லேசான காய்ச்சல் அடித்தாலே, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

 

மாநகராட்சி துப்புரவுபணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கல்

Print PDF

தினமணி             01.11.2013

மாநகராட்சி துப்புரவுபணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கல்

திருச்சி மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் துப்புரவுப் பணியாளர்கள் 1646 பேருக்கும் ரூ. 16 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட சீருடைகளை மேயர் அ. ஜெயா வியாழக்கிழமை வழங்கினார்.

  ஆண் தொழிலாளர்கள் 891 பேருக்கு காக்கி சட்டை, டிரெüசர் ஆகியவையும், பெண் தொழிலாளர்கள் 755 பேருக்கு பாலி காட்டன் புடவையும் வழங்கப்பட்டன.

  இந்த நிகழ்ச்சியில் ஆணையர் வே.ப. தண்டபாணி, துணை மேயர் மரியம் ஆசிக், நகரப் பொறியாளர் ஆர். சந்திரன், நகர்நல அலுவலர் டாக்டர் மாரியப்பன், கோட்டத் தலைவர்கள் ஜெ. சீனிவாசன், ஆர். ஞானசேகர், பொது சுகாதாரக் குழுத் தலைவர் டாக்டர் எஸ். தமிழரசி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 


Page 29 of 519