Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சுகாதாரம் இல்லாவிட்டால் நடவடிக்கை: பொள்ளாச்சி ஓட்டல்களுக்கு எச்சரிக்கை

Print PDF

தினமலர் 26.04.2010

சுகாதாரம் இல்லாவிட்டால் நடவடிக்கை: பொள்ளாச்சி ஓட்டல்களுக்கு எச்சரிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் சுகாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாத ஓட்டல், பேக்கரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்துள்ளது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 10 பெரிய ஓட்டல்கள், 50 இரவு நேர ஓட்டல்கள், 25 சிறிய ஓட்டல்கள் உள்ளன. பேக்கரி, டீக்கடைகள் 200க்கு மேல் உள்ளது.பெரும்பாலான ஓட்டல்களில் சுகாதார விதிமுறை மீறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓட்டல், பேக்கரிகளுக்கும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு நகராட்சி சுகாதார பிரிவில் இருந்து 'நோட்டீஸ்' வினி யோகம் செய்யப்பட்டுள்ளது.ஓட்டல், பேக்கரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:உணவுப் பண்டங்கள் சரியானபடி மூடி வைக்காமல், ஈக்கள் மொய்க்கும்படியும், தூசு படியும் படியாகவும் வைத்திருக்க கூடாது. உணவு பொருட்கள் தயாரிக்கும் பாத்திரங்களும், அவற்றை வைத்திருக்கும் பாத்திரமும் சுத்தமாக இருக்க வேண்டும்.

சமையலறையில் உணவு தயாரிக்கும் இடம் சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் போதிய இடவசதியுடன் இருக்க வேண்டும்.சமையல் அறையில் இருந்து புகை வெளிப்படாமல் இருக்க வேண்டும். உணவு தயாரிக்கும் இடத்திற்கு அருகில் கைகழுவும் இடமும், பாத்திரங்கள் கழுவும் இடமும் இருந்தால் உணவு பொருட்கள் மூலம் 'புட் பாயிஷன்' உண்டாகும் வாய்ப்புள்ளது. அதனால், சமையல் அறைக்கும், கழுவும் இடத்திற்கும் குறிப்பிட்ட இடைவெளி இருக்க வேண்டும்.மாவு அரைக்கும் கிரைண்டர் இருக்கும் இடம் சுத்தமாகவும், மேற்கூரையில் அழுக்கு படியாமலும் இருக்க வேண்டும்.கிரைண்டர் அருகில் கழிப்பிடம் இருக்கக்கூடாது, கிரைண்டரை சுத்தமாக கழுவி மூடி வைத்திருக்க வேண்டும். குளிர்பானம் மற்றும் ஜூஸ் தயாரிக்க பயன்படும் உபகரணங்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும். ஜூஸ் தயாரிக்க கெட்டுப்போன பழங்களை பயன்படுத்தக்கூடாது. இதனால் அதை பருகும் மக்களுக்கு 'புட் பாய்ஷன்' ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படும்.ஓட்டல் குப்பை, எச்சில் இலை போன்றவை போடுவதற்கு மூடியிடப்பட்ட தொட்டி வைத்திருக்கவேண்டும். அவை வைத்திருக்கும் இடத்திற்கும், சமையலறைக்கும், உணவு பொருட்கள் வைத்திருக்கும் இடத்திற்கும் இடைவெளி இருக்க வேண்டும்.ஓட்டல், பேக்கரிகளில் மீதமான உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து அடுத்த நாள் பயன்படுத்தக்கூடாது.

எளிதில் கெட்டு போகும் சட்னி ஐட்டங்களை ஆறு மணி நேரத்திற்கு மேல் வைத்திருக்க கூடாது. ஓட்டல், பேக்கரிகளுக்கு வருபவர்களுக்கு கொதிக்க வைத்து குளிர வைக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும். ஓட்டல்,பேக்கரி பணியாளர்கள் அனைவருக்கும் மருத்துவ சான்று பெறப்பட்டிருக்க வேண்டும். நகராட்சியில் பெறப்பட்ட உரிமை ஆணை, அனுமதிக்கப்பட்ட நிலவரைபடங்கள் போன்றவை பார்வைக்கு தெரியும் படி வைத்திருக்க வேண்டும். ஓட்டல்களில் பொருட்கள் சேமிப்பு அறை அருகில் பழைய பொருட்கள் அடுக்கி வைக்கக்கூடாது.சேமிப்பு அறையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். ஓட்டல்களின் உள்பகுதி மற்றும் அருகிலுள்ள கழிவு நீர் சாக்கடைகள் திறந்த நிலையில் தேங்கி நிற்க கூடாது. சாக்கடையில் இருந்து வரும் ஈக்கள், கொசுக்கள் தயாரித்து வைத்துள்ள உணவு பொருட்கள் மீது அமரும்போது, அதை வாங்கி சாப்பிடும் மக்களுக்கு காலரா போன்ற தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. அதனால் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டல் மற்றும் பேக்கரிகளில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் சுகாதார சட்ட பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றுநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Last Updated on Tuesday, 27 April 2010 06:08
 

தரமற்ற பால் விநியோகிப்பதாக புகார்: நகராட்சி அதிகாரிகள் சோதனை

Print PDF

தினமணி 26.04.2010

தரமற்ற பால் விநியோகிப்பதாக புகார்: நகராட்சி அதிகாரிகள் சோதனை

தாராபுரம், ஏப். 25: தாராபுரம் நகரில் தரமற்ற பால் விநியோகம் செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து, நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

தாராபுரம் நகரின் பல்வேறு பகுதிகளிலும், சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் மூலம் பால் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் பால் பண்ணைகள் மூலமும் பால் விற்பனை நடைபெறுகிறது.

மக்களுக்கு விற்பனை செய்யப்படும் பால் தரமில்லாமல் இருப்பதாக, நகராட்சி நிர்வாகத்துக்குப் புகார்கள் வந்தன. இதையடுத்து நகராட்சி ஆணையர் எஸ்.துரை உத்தரவுப்படி, சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் பால் விநியோகம் செய்வோரிடம் சனிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.

பொள்ளாச்சி சாலை, டி.எஸ்.கார்னர், பூளவாடி சாலை, அலங்கியம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பால் விநியோகம் செய்து கொண்டிருந்தவர்களை நிறுத்தி, சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். நூற்றுக்கு மேற்பட்ட பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சாக்கடையை சுத்தம் செய்த சுய உதவிக் குழுவினர்

Print PDF

தினமணி 26.04.2010

சாக்கடையை சுத்தம் செய்த சுய உதவிக் குழுவினர்

பழனி, ஏப். 25: பழனி அடிவாரம் பகுதியில் ஆண்கள் சுய உதவிக் குழு சார்பில் சாக்கடைகள் தூர்வாறி சுத்தம் செய்யப்பட்டன.

பழனி அடிவாரம் அருள்ஜோதி வீதியில் ஞாயிற்றுக்கிழமை சாக்கடைகள் தூர்வாறி சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. எஸ்ஜேஎஸ்ஆர்ஒய் குறிஞ்சி ஆண்டவர் சுய உதவிக் குழுவினர் சுமார் 25 பேர் இப்பணியை மேற்கொண்டனர்.

இப்பணிகளை நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். ஆய்வின்போது 27-வது வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன், துப்புரவு ஆய்வாளர் நெடுமாறன், துப்புரவு மேற்பார்வையாளர் காசி ஆகியோர் உடனிருந்தனர்.

இதுபோன்ற சமூக சேவைகளில் இக்குழு தொடர்ந்து ஈடுபட உள்ளதாக குழுவின் தலைவர் முகமது தாரிக் ராஜா தெரிவித்தார்.

 


Page 286 of 519