Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

திருமூர்த்தி அணை படகு சவாரியில் 'லைப்ஜாக்கெட்' அணிந்து செல்லணும் : தளி பேரூராட்சி உத்தரவு

Print PDF

தினமலர் 20.04.2010

திருமூர்த்தி அணை படகு சவாரியில் 'லைப்ஜாக்கெட்' அணிந்து செல்லணும் : தளி பேரூராட்சி உத்தரவு

உடுமலை: 'திருமூர்த்தி அணையில் படகு சவாரி மேற்கொள்ளும் பயணிகள் லைப்ஜாக்கெட் அணிந்த பிறகே படகு இயக்க வேண்டும்,' என படகு இயக்குபவர்களிடம் தளி பேரூராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. திருமூர்த்தி மலைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அணையின் அழகை கண்டு ரசிக்கும் வகையில், தளி பேரூராட்சி சார்பில் ஒரு படகு சவாரி துவக்கப்பட்டு; சுய உதவி குழுக்கள் மூலமாக இயக்கப்படுகிறது. படகில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பிற்காக 'லைப்ஜாக்கெட்' வழங்கப்பட்டது. ஆனால் சுற்றுலாப்பயணிகள் ஆர்வ மிகுதியில், 'ஏர்ஜாக்கெட்' அணியாமலேயே பயணம் மேற்கொள்கின்றனர். இதனால், விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஏர்ஜாக்கெட் அணியாமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்க கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது. தளி பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பயணிகள் பாதுகாப்பிற்காக 'லைப்ஜாக்கெட்' வழங்கப்பட்டது. ஆனால், பயணிகள் ஏர்ஜாக்கெட் அணியாமல் பயணம் மேற்கொள்வதாக தகவல் வந்தது. லைப்ஜாக்கெட் அணியாமல் பயணிகள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது; பயணம் செய்வதற்கு முன்பாகவே பாதுகாப்பு கவசத்தை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என படகு இயக்குபவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட அளவை விட அதிகளவு நபர்களை ஏற்றி படகு இயக்க கூடாது ;'போட்' களில் ஏறும் பயணிகள், நிற்க கூடாது; அமர்ந்தே இருக்க வேண்டும், தண்ணீருக்குள் கை விட கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உயிர்களுக்கு உத்திரவாதத்துடன் உரிய அரசு விதிகளை பின்பற்றி பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தளி பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர

Last Updated on Tuesday, 20 April 2010 07:08
 

வீதி நாடகத்தில் வெளிப்பட்ட விதி மாற்றும் சுகாதார 'பாடங்கள்'

Print PDF

தினமலர் 20.04.2010

வீதி நாடகத்தில் வெளிப்பட்ட விதி மாற்றும் சுகாதார 'பாடங்கள்'

கோத்தகிரி: கோத்தகிரியில் அருவங்காடு கிராமிய அபிவிருத்தி இயக்கம் சார்பில், சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு கழிவறை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விதைகள் கலைக்குழு உறுப்பினர்கள் களம் இறங்கி உள்ளனர். அதன் இயக்குனர் முத்துசாமி தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி மக்களுக்கு பொது சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலர் ஆசிரியர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், ''உலக அளவில் ஒரு லட்சத்திற்கு 35 ஆயிரம் குழந்தைகள் ஒரு ஆண்டு அடைவதற்கு முன்பே மரணத்தை தழுவுகின்றனர். அவற்றில் ஐந்தில் மூன்று பேர் இந்திய குழந்தைகள் என்பது வேதனை அளிக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா, பேதி போன்ற நோய்களுக்கு முக்கிய காரணம், மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு இல்லாததுதான். மலம் கழித்தப்பின் கைகளை சோப்பு போட்டு கழுவும் பழக்கம் மட்டும் இருந்தால் இறந்துபோகும் குழந்தைகளின் பாதி பேரை காப்பாற்ற முடியும்.

மலம் கழித்தப்பின் சாதாரணமாக கை கழுவும் போது, கையில் உள்ள ஒரு எண்ணெய் பசையில் மலத்துகள் ஒட்டிக் கொண்டிருக்கும். ஒரு கிராம் மலத்துகளில் சுமார் பத்து லட்சம் வைரஸ்களும், ஒரு லட்சம் பாக்டீரியாக்களும் இருக்கும். பல நோய்கள் பரவ இவைதான் காரணம். கைகளை சோப்பு போட்டு கழுவும் போது கிருமிகளுக்கும் நோய்களுக்கும் இடையில் உள்ள சங்கிலி அறுப்பட்டு நோய் பரவாது. ஆகையால், மலம் கழித்தப்பின் கைகளை சோப்பு போட்டு இருபது வினாடிகள் கழுவுவது முக்கியம். நமது மக்களிடையே ஏற்படும் நோய்களுக்கு முக்கிய காரணம், திறந்த வெளியில் மலம் கழிப்பதுதான். எனவே, வீட்டுக்கொரு கழிவறை என்ற லட்சியத்தை ஒவ்வொருவரும் மேற்கொள்ளவேண்டும்,'' என்றார்.

கிராமிய அபிவிருத்தி இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜன் பேசுகையில்,''சுகாதார கழிப்பறை திட்டத்தின் மூலம் மனித மலத்தை உரமாக்கி அதன் மூலம் ஆண்டுக்கு 2.50 லட்சம் ரூபாய் வரை பணம் சம்பாதிக்கலாம். மலத்தின் மீது சாம்பல், மணல் மற்றும் மரத்தூள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை போட்டு மலத்தை மூடிவிட்டால் அது சிறந்த த்ரமாக மாறும்,'' என்றார். கோத்தகிரி மார்க்கெட் திடலில் நடந்த நிகழ்ச்சிக்கு தே.மு.தி.., தலைமை கழக பேச்சாளர் சத்தியசீலன் தலைமை வகித்தார். கலைக்குழு மேலாளர் செந்தில்குமார், உறுப்பினர்கள் வின்சென்ட், பெருமாள், முருகேசன், சுப்பிரமணி மற்றும் சித்ரா ஆகியோர் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செல்வகுமார் நன்றி கூறினார்.

 

Last Updated on Tuesday, 20 April 2010 06:36
 

600 சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி

Print PDF

தினமணி 19.04.2010

600 சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி

திருவண்ணாமலை, ஏப். 18: பன்றிக் காய்ச்சலை தடுக்கும் பொருட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் சுகாதாரத் துறையைச் சேர்ந்த 600 ஊழியர்களுக்கு முதல் கட்டமாக பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செய்யாறு சுகாதார மாவட்டங்கள் உள்ளன. கடந்த 2009-ம் ஆண்டு உலகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் பரவியதால்

ஏராளமானோர் இறந்தனர். இந்தியாவிலும் அதன் பாதிப்பு பரவியதால் பலர் பாதிக்கப்பட்டனர். பொது சுகாதாரத் துறையைச் சேர்ந்த டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நோயாளிகளிடமும், மக்களிடம் அதிகம் பழகுவதால் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்தும் நோயாளிகளுக்கு இக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார செவிலியர்களுக்கு தடுப்பூசி போட அரசு உத்தரவிட்டது.

அதன்படி திருவண்ணாமலையில் 300 பேருக்கும், செய்யாற்றில் 300 பேருக்கும் முதல் கட்டமாக பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் போடப்பட உள்ளது.

Last Updated on Monday, 19 April 2010 10:51
 


Page 291 of 519