Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கழிவுநீர் கால்வாயை மனிதர்கள் சுத்தம் செய்யும் முறை ஒழிக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

Print PDF

தினமணி 17.04.2010

கழிவுநீர் கால்வாயை மனிதர்கள் சுத்தம் செய்யும் முறை ஒழிக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

பெங்களூர், ஏப்.16: கழிவுநீர்க் கால்வாயில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் முறை ஒழிக்கப்பட்டு இதில் முற்றிலும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று சட்டம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

அமைச்சர் சுரேஷ்குமார் வெள்ளிக்கிழமை மாநிலத்தில் உள்ள 7 மாநகராட்சி ஆணையர்களுடன் விடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார். அப்போது அந்தந்த மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கேட்டறிந்தார். மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும்படி அப்போது அமைச்சர் உத்தரவிட்டார்.

பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சுரேஷ்குமார் கூறியதாவது: பாதாள சாக்கடைகள் இருக்கும் நகரங்கள், டவுன் பஞ்சாயத்துக்களில் அவற்றை சுத்தம் செய்ய குழிகளுக்குள் துப்புரவுத் தொழிலாளர்கள் இறங்கி சுத்தம் செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.

இதுதொடர்பாக எல்லா 7 மாநகராட்சி ஆணையர்களுடன் விவாதம் நடத்தியுள்ளேன். இனி கழிவுநீர்க் கால்வாயில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் முறை ஒழிக்கப்பட வேண்டும். இதற்குப் பதிலாக அந்தப் பணியில் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

ஜெட்டிங் மற்றம் ஜக்கிங் இயந்திரங்கள் மூலம் கழிவுநீர்க் குழிகளை சுத்தம் செய்ய வேண்டும். இந்த இயந்திரங்களை வாங்க டெண்டர் விண்ணப்பம் கோரும்படி பாதாள சாக்கடைகள் உள்ள மாநகராட்சிகள், நகரசபைகள், மற்றும் டவுன் பஞ்சாயத்துக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெட்டிங் மற்றும் ஜக்கிங் இயந்திரங்கள் ரூ.25 லட்சம் முதல் ரூ.1.25 கோடி விலைகளில் கிடைக்கும். விரைவில் டெண்டர் பணிகளை முடித்து கழிவுநீர்க் குழிகளை இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யும் பணி துவங்கப்படும். ஒவ்வொரு மாநகராட்சிகளுக்கும் எவ்வளவு இயந்திரங்கள் தேவை என்பதை கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்ப இயந்திரங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். அவற்றை செயல்படுத்தும் முறையை சம்பந்தப்பட்ட தொழிலாளிகளுக்கு கற்றுத் தரவேண்டும்.

பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து அவர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்ற நோக்கில் தற்போது பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகங்கள் ஆர்வத்தோடு செயல்பட்டு வருகின்றன. உதாரணமாக ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சியில் முதியோர் குறைகளை கேட்டறிய முதியோர்களையே நியமித்துள்ளனர்.

கெüரவ அடிப்படையில் சில முதியோர் இந்தப்பணியை மேற்கொண்டு வருகிறார்கள். குறைகளைத் தெரிவிக்கும் முதியோரிடம் அவற்றை கேட்டு அறிந்து உரிய அதிகாரி மூலம் அவர்களது குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டுள்ளனர். முதியோருக்கும் திருப்தி ஏற்பட்டுள்ளது.

பூங்காக்களை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பை தாவணகெரே நகராட்சி பொதுமக்களிடம் விட்டுள்ளது. பூங்காக்கள் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவற்றை நிர்வகித்து வருகிறார்கள் என்றார்.

Last Updated on Saturday, 17 April 2010 09:30
 

நவீன இலவச கழிப்பறை திறப்பு

Print PDF

தினமணி 17.04.2010

நவீன இலவச கழிப்பறை திறப்பு

மதுரை, ஏப். 16: மதுரை திருமலை நாயக்கர் மகால் அருகே டி.வி.எஸ். நிறுவனம் மூலம் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய இலவசக் கழிப்பறையை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.

மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க. அழகிரி முயற்சியால் மாநகரில் 10 இடங்களில் தனியார் பராமரிக்கும் இலவசக் கழிப்பறைகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டன.

இந்த நிலையில், மேலும் ஒரு கழிப்பறை திருமலை நாயக்கர் மகால் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டது. இதை மேயர் கோ.தேன்மொழி திறந்து வைத்துப் பேசுகையில், இந்தப் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கழிப்பறை சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மக்கள் நல்ல முறையில் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், டி.வி.எஸ். நிறுவனத் தலைவர் சீனிவாசன், துணைப் பொது மேலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Saturday, 17 April 2010 09:15
 

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்கே அதிக நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 16.04.2010

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்கே அதிக நிதி ஒதுக்கீடு

அரக்கோணம், ஏப். 15: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் கூறினார்.

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூடுதல் கட்டட திறப்பு விழாவில், அவர் பேசியது:

மருத்துவமனைகள் எவ்வளவு அழகாக கட்டித் தரப்பட்டாலும் அதை சிறப்பாக பராமரித்தால்தான் பயன் கிடைக்கும். வாலாஜாபேட்டை அரசினர் மருத்துவமனையை அனைவரும் வியக்கும் அளவுக்கு சிறப்பாகக் காணப்படுகிறது.

இதேபோல் அரக்கோணம் அரசு மருத்துவமனையின் பராமரிப்பை யாராவது எடுத்துக் கொண்டால் இதுவும் சிறப்பாக இருக்கும்.

உள்ளாட்சித் துறைக்கு அளித்த நிதியை சரியாக செலவு செய்த முதல் மாநிலம் தமிழ்நாடு என மத்திய அரசு பாராட்டியுள்ளது. அந்த நிதியை சரியாக பயன்படுத்திய முதல் மாவட்டம் வேலூர் மாவட்டம்தான்.

தமிழக அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றும் நிலையில், தற்போது அமெரிக்க அரசு கூட பின்பற்ற தொடங்கியுள்ளது என்றார் ஜெகத்ரட்சகன்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் அ.வரதராஜன் வரவேற்றார்.

தமிழ்நாடு சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.கென்னடி, எம்எல்ஏக்கள் ஜெகன்மூர்த்தி, அருள்அன்பரசு, ஆர்.காந்தி, முன்னாள் எம்.பி. முகமதுசகி, நகர்மன்றத் தலைவர் விஜயராணி கன்னையன், அரக்கோணம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் எம்.எஸ்.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Friday, 16 April 2010 09:31
 


Page 293 of 519