Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தேசிய ஊரக சுகாதார திட்டம்: தமிழகத்துக்கு முதல் பரிசு

Print PDF

தினமணி 13.04.2010

தேசிய ஊரக சுகாதார திட்டம்: தமிழகத்துக்கு முதல் பரிசு

நாமக்கல், ஏப். 12: தேசிய ஊரக சுகாதார திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு முதல்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய ஊரக சுகாதார திóட்டமானது 2005 ஏப்ரல் 12-ம் தேதி துவங்கப்பட்டது. திட்டம் துவங்கி 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இந்ததிட்டத்தை பயன்படுத்தி மாநிலங்களில் சுகாதாரத்துறை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது, பிற மருத்துவ வசதிகளையும் மேம்படுத்திய மாநிலங்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு புதுதில்லியில் திங்கள்கிழமை நடந்தது. தேசிய ஊரக சுகாதார திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தமிழக அரசுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இதற்கான பரிசை தமிழக சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜிடம், குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி வழங்கினார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆஷாத், இணையமைச்சர் செ. காந்திச் செல்வன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். வரும் ஆண்டுகளிலும் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து ஊரக சுகாதாரத் திட்டத்தை கிராமப்புறங்களில் சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் குலாம்நபி ஆஷாத் உறுதியளித்துள்ளார்.

Last Updated on Tuesday, 13 April 2010 09:56
 

குடிநீரை சோதிக்காமல் நேரடியாக வீடுகளுக்கு அனுப்பக் கூடாது

Print PDF

தினமணி 13.04.2010

குடிநீரை சோதிக்காமல் நேரடியாக வீடுகளுக்கு அனுப்பக் கூடாது

புதுச்சேரி, ஏப். 12: குடிநீரை சோதிக்காமல் நேரடியாக வீடுகளுக்கு அனுப்பக் கூடாது என்று எம்எல்ஏ ஆர்.சிவா கோரினார்.

புதுச்சேரியில் குடிநீரின் சுவையும், நிறமும் மாறியுள்ளது. அதனால் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து நேரடியாக வீடுகளுக்கு செல்லும் குழாய்களில் அனுப்பக்கூடாது. நீரை சோதனைக்கு அனுப்பி, சோதனை முடிவு வந்த பின்னரே பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.

நீரை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தேக்கினால் அதன் குணங்கள் தெரியும். நேரடியாக வீடுகளுக்கு செலுத்துவதால் பொதுமக்கள் பல்வேறு நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆர்.சிவா தெரிவித்தார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எ.நமச்சிவாயம் பேசியது: நிதிப் பற்றாக்குறையால் எல்லா இடங்களிலும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்ட முடியவில்லை. அதனால் குடிநீரை நேரடியாக செலுத்தினோம். அனைத்து ஆழ்துளை கிணறுகளிலும் நீரை சோதனைக்கு அனுப்பி, பரிசோதனை முடிவு வந்த பின்னர் இனி வீடுகளுக்கு செலுத்துகிறோம் என்றார்.

Last Updated on Tuesday, 13 April 2010 09:33
 

நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சம் கழிப்பிடங்கள்! முழு சுகாதாரத்தை ஏற்படுத்த நடவடிக்கை

Print PDF

தினமலர் 13.04.2010

நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சம் கழிப்பிடங்கள்! முழு சுகாதாரத்தை ஏற்படுத்த நடவடிக்கை

ஊட்டி : 'நீலகிரி மாவட்ட கிராமப் புறங்களில், மக்கள் ஒத்துழைப்புடன் ஒரு லட்சம் கழிப்பிடங்கள் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான கிராமங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலை இன்றும் தொடர்கிறது. குறிப்பாக, கழிப்பிட வசதிகள் போதியளவில் இல்லை; திறந்தவெளியே கழிப்பிடமாக அமைவதால் நோய் பரவுகிறது.மேலும், நிலத்தடி நீர் மற்றும் மழைநீரில் கழிவு கலந்து, நீராதாரங்களில் கலக்கிறது. இதை பருகும் மக்களுக்கு நோய் பரவுகிறது. எனவே, கழிப்பிடங்களை சிறப்பாக கட்டும் பணிகளை, மத்திய, மாநில அரசுகள், முழு சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வருகின்றன; மானியத்துடன் கடனுதவியும் அளிக்கப்படுகிறது. இதே போன்ற திட்டத்தை, நெதர்லாந்து நாட்டுடன் இணைந்து, இந்தியாவின் பல மாநிலங்களில் செயல்படுத்தும் நோக்கில், 'பினிஸ்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் துவக்கப்பட்ட இந்த செயல்பாட்டுக்காக, முதற் கட்டமாக நெதர்லாந்து நாட்டின் சார்பில் 27 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் செயல்படும் இந்த திட்டத்தின் கீழ், ஒரிசா, தமிழ்நாடு, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் உட்பட மாநிலங்கள் பயன் பெறுகின்றன; இதுவரை, ஒரிசா உட்பட சில மாநிலங்களில் 28 ஆயிரம் தரம் மிக்க கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில், திருவாரூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக செயல்படுத்த, இந்த அமைப்பு முடிவு செய்து, நீலகிரி மாவட்டத்தில் ஆர்.டி.., அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் கடந்த 3 மாதங்களாக 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டன. பல கிராமங்களில் 200 வீடுகளுக்கு 30 கழிப்பிடங்கள் மட்டுமே இருந்தது தெரியவந்தது;

இதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் 'மைக்ரோ' கடனுதவி திட்டத்தின் கீழ், முழு சுகாதார திட்டத்தை செயல்படுத்தி வரும் 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கழிப்பிடங்களை மாவட்டத்தில் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்தும் 'பினிஸ்' அமைப்பின் நிர்வாகி பாவ் கூறியதாவது: பொதுமக்கள் மற்றும் தனியார் அமைப்புகளின் ஒத்துழைப்புடன், தமிழகத்தில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆர்.டி.., அறக்கட்டளை சார்பில் 'மைக்ரோ' கடனுதவி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. 'நல்ல கழிப்பிடம் நோயில்லா உடலை தரும்' என்பது தான் இதன் நோக்கம். நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை 15 ஆயிரம் ரூபாய் வரை கடனுதவி அளிக்க, 'நபார்டு' வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பல கிராமங்களில் நடந்த ஆய்வுப் பணிகளின் போது, திட்டத்தில் கழிப்பிடங்கள் கட்டித் தந்தால், வாரத்துக்கு 125 ரூபாய் கடனை செலுத்தி விடுவதாக, கிராம மக்கள் உறுதியளித்துள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவினர், திட்டத்தை செயல்படுத்த ஆர்வமாக உள்ளனர். இந்தியா முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்த 1,000 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சம் 10 லட்சம் கழிப்பிடங்கள் கட்டப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, பாவ் கூறினார்.

நெதர்லாந்து நாட்டின் ஒருங்கிணைப்பாளர் வேலன்டைன், நிர்வாகி பிரிட்டா, டாடா இன்சூரஸ் அதிகாரி விஜய், செயல் அலுவலர் முகுல் சிங்கால், ஆர்.டி.., அறக்கட்டளை அறங்காவலர் பெருமாள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Last Updated on Tuesday, 13 April 2010 07:14
 


Page 296 of 519