Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குப்பையிலிருந்து உரம், செங்கல் தயாரிக்கும் திட்டம் : வேளச்சேரியில் இன்று மக்கள் கருத்து கேட்பு முகாம்

Print PDF

தினமலர் 23.03.2010

குப்பையிலிருந்து உரம், செங்கல் தயாரிக்கும் திட்டம் : வேளச்சேரியில் இன்று மக்கள் கருத்து கேட்பு முகாம்

சென்னை : பெருங்குடி குப்பை வளாகத்தில், அறிவியல் ரீதியாக குப்பையிலிருந்து உரம் மற்றும் கட்டுமான செங்கல் தயாரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கருத்தறியும் கூட்டம், வேளச்சேரியில் இன்று நடக்கிறது.

சென்னை மாநகராட்சியின் பத்து மண்டலங்களிலும் தினம்தோறும் 3,600 டன்னுக்கும் மேலாக குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. வடசென்னையில் சேகரிக்கப்படும் குப்பைகள், கொடுங்கையூர் குப்பை வளாகத்திலும், தென்சென்னையில் சேகரிக்கப்படும் குப்பைகள், பெருங்குடி குப்பை வளாகத்திலும் கொட்டப்படுகின்றன. பெருங்குடி குப்பை வளாகத்தில் தினமும் 1,600 டன் குப்பைகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், குப்பையிலிருந்து உரம் மற்றும் கட்டுமானத்திற்கு தேவையான செங்கற்கள் தயாரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது. பெருங்குடி குப்பை வளாகத்தில், குப்பையால் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கவும், பொதுமக்கள் கருத்தறியும் வகையிலும் வேளச்சேரியில் இன்று (மார்ச் 23) மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிவுரைப்படி, குப்பைகளை பிரித்தெடுத்து அறிவியல் ரீதியாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்கும் குப்பைகளில், ரசாயன பொருட்கள் சேர்த்து விவசாயத்திற்கும் பயன்படும் வகையில் உரம் தயாரிக்கப்படும். மறு சுழற்ச்சிக்கு ஏற்ற பிளாஸ்டிக் கழிவுகள் மீண்டும் பயன்படுத்தப்படும்.

மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக்குகள், சிமென்ட் தொழிற்சாலைகளில் எரிபொருளாக பயன்படுத்தப்படும். குப்பையில் உள்ள எரியும் தன்மையுள்ள பொருட்களைக் கொண்டு எரிகட்டிகள் தயாரிக்கப்படும். குப்பையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கற்கூளங்களைக் கொண்டு கட்டுமான செங்கல் தயாரிக்கப்படும்.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தும் இடத்தைச் சுற்றிலும் பசுமையான புல்வெளிகள் அமைத்தும், மரக்கன்றுகள் நட்டும் பசுமைப் பகுதியாக மாற்றப்படும். இதனால், சுற்றுச்சூழல் மேம்படுவதோடு, காற்று மண்டலத்தில் பிராண வாயு அதிகமாக வாய்ப்புள்ளது. பெருங்குடி குப்பை வளாகத்தில் குப்பைகள் தேங்காமல், சுகாதாரமான முறையில் உடனுக்குடன் அகற்றி, அறிவியல் ரீதியாக குப்பை பதனிடும் முறையை செயல்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் மேம்பாடடையச் செய்ய முடியும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 23 March 2010 07:43
 

முத்திரையில்லா ஆட்டு இறைச்சி பறிமுதல்

Print PDF

தினமணி 22.03.2010

முத்திரையில்லா ஆட்டு இறைச்சி பறிமுதல்

பண்ருட்டி,மார்ச் 21: பண்ருட்டி நகர பகுதியில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள் முத்திரையிடப்படாத ஆட்டு இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

பண்ருட்டி ரத்தினம் பிள்ளை மார்கெட்டில் நவீன ஆட்டு இறைச்சி அறுவைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. நகர பகுதியில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்பவர்கள் முத்திரை இடப்பட்ட இறைச்சிகளையே விற்பனை செய்ய வேண்டும். முத்திரையிடப்படாத இறைச்சிகளை விற்பனை செய்தால் இறைச்சியை பறிமுதல் செய்வதுடன், விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் கே.உமாமகேஸ்வரி சில நாள்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் சனிக்கிழமை ஆணையர் கே.உமாமகேஸ்வரி தலைமையில், சுகாதார அலுவலர் ராஜேந்திரன், ஆய்வாளர் ஆர்.சுதாகரன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் கொளஞ்சியப்பன், கே.பாண்டியன், ஓட்டுநர் ரவி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் முத்திரையிடப்படாமல் கடையில் விற்பனை செய்த இருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.

Last Updated on Monday, 22 March 2010 10:27
 

ஹோட்டல், மளிகை கடைகளில் சுகாதாரத்துறை அலுவலர் ஆய்வு

Print PDF

தினமலர் 22.03.2010

ஹோட்டல், மளிகை கடைகளில் சுகாதாரத்துறை அலுவலர் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சேகர் அறிவுரையின்படி, வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் டாக்டர் வல்லவராஜ் மற்றும் சுகாதாரத்துறையினர் எருமப்பட்டி யூனியன் பகுதியில் ஹோட்டல் மற்றும் மளிகை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.மளிகை கடைகளில் தரமான பொருட்கள் விற்கப்படுகின்றதா, காலாவதியான பொருட்கள் விற்கப்படுகின்றதா என சோதனை செய்தனர். குறிப்பாக பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் போன்றவற்றில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தனர். கடைகளில் தரமற்ற பொருட்கள் மற்றும் கலப்பட பொருட்கள் விற்கக்கூடாது. மீறி விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை செய்யப்பட்டது. ஆய்வின்போது வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனிசாமி, ஆய்வாளர்கள் முருகேசன், சந்திரன், சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 22 March 2010 10:17
 


Page 312 of 519