Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

வளாக நேர்காணல்: வி.பி.எம்.எம். மாணவிகளுக்கு நியமன ஆணை சுகாதார மேம்பாட்டுப் பணியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள்

Print PDF

தினமணி 08.03.2010

வளாக நேர்காணல்: வி.பி.எம்.எம். மாணவிகளுக்கு நியமன ஆணை சுகாதார மேம்பாட்டுப் பணியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள்

சிவகாசி
, மார்ச் 7: சிவகாசி நகராட்சியில் சுகாதார மேம்பாட்டுப் பணியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஈடுபட உள்ளதாக நகராட்சி ஆணையாளர் விஜயராகவன் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நகராட்சியில் தற்போது நகராட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கச் செல்லும் போது, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து பொதுமக்கள் வழங்குவதில்லை.

முன் மாதிரியாக 15,26,30,32,33 ஆகிய வார்டுகளில், நகராட்சித் துப்புரவுப் பணியாளர்களின் உதவியுடன், அப்பகுதி மகளிர் சுயஉதவிக் குழுவினர் வீடு வீடாகச் சென்று குப்பைகளைப் பெற்று, அதனை ஒரே இடத்தில் கொட்டி, பிளாஸ்டிக் பொருள்கள், இரும்பு மற்றும் கண்ணாடி உள்ளிட்டவைகளைத் தனியே பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

அப்படி பிரிக்கும் போது கிடைக்கும் பொருள்களை விற்றுக் குழுவினர் அந்தப் பணத்தை வைத்துக் கொள்ளலாம். இந்த மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் நகர்மன்றத் துணைத் தலைவர் ஜி. அசோகன் பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Last Updated on Monday, 08 March 2010 10:47
 

உணவகங்களில் தரத்தை கடைப்பிடிக்க வேண்டும்

Print PDF

தினமணி 06.03.2010

உணவகங்களில் தரத்தை கடைப்பிடிக்க வேண்டும்

மதுரை, மார்ச் 5: உணவகங்கள் நடத்துவோர் தரத்தையும், சுகாதாரத்தையும் பேணுவதுடன் சமுதாயப் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என (பொது சுகாதாரம்) இயக்குநர் எஸ். இளங்கோ வலியுறுத்தினார்

மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், உணவகங்களில் உணவுப் பொருள்களைக் கையாளும் முறைகள் குறித்து, உணவக உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான பயிற்சிமுகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமைத் தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:

சுகாதாரமான முறையில் உணவு வழங்குவது குறித்து, உணவக உரிமையாளர் மற்றும் பணியாளர்களுக்கு இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. தரமான உணவு உட்கொள்வோர் நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் உணவகங்கள் நடத்திவருவோர், குறிப்பாக கையேந்திபவன் நடத்துபவர்கள்கூட தரமான, சுகாதாரமான உணவை வழங்கி வருகின்றனர்.

உணவு வழங்கும் முறையில் சில மாற்றங்களை மேற்கொண்டால் விற்பனையை அதிகரிக்க முடியும். மக்களிடையே சமைத்துச் சாப்பிடும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. விவசாயிகள் மட்டும்தான், வீட்டில் சமைத்து சாப்பிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேலைக்காக பலர் நகரத்துக்கு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும், வீட்டில் உள்ள இருபாலரும் வேலைக்குச் செல்கின்றனர்.

90 சதவிகிதம் பேர் உணவுக்காக உணவகங்களையே நம்பியிருக்கின்றனர். இவர்களைப் போன்றவர்களுக்கு தரமான உணவைக் கொடுத்து சுகாதாரத்தை பேணவேண்டிய கடமை உணவகம் நடத்துவோருக்கு உள்ளது என்றார் அவர். மாநகராட்சி ஆணையாளர் எஸ். செபாஸ்டின் பேசுகையில், மதுரையில் முதன்முறையாக நடக்கும் இந்த பயிற்சி முகாமை மதுரையில் உணவக உரிமையாளர்கள், உணவகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

முன்னதாக மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் வி. சுப்பரமணியம் வரவேற்றார். குடும்ப நல பயிற்சிமைய மருத்துவர் வே.சண்முகசுந்தரம், சுகாதாரப் பணி துணை இயக்குநர் அ.பழனிச்சாமி உள்ளிட்டோர் பேசினர். நகர்நல உதவி மருத்துவ அலுவலர் யசோதைமணி நன்றி கூறினார்.

 

வேலூர் மாநகராட்சியில் ரூ.24 லட்சத்தில் நவீன குப்பை அள்ளும் இயந்திரம், தொட்டிகள்

Print PDF

தினமணி 05.03.2010

வேலூர் மாநகராட்சியில் ரூ.24 லட்சத்தில் நவீன குப்பை அள்ளும் இயந்திரம், தொட்டிகள்

வேலூர், மார்ச் 4: வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அள்ள ரூ.13 லட்சத்தில் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்ட லாரியும், ரூ.11.25 லட்சத்தில் 25 பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகளும் வாங்கப்பட்டுள்ளன.

வேலூர் மாநகராட்சிப் பகுதியில் புதிய பஸ் நிலையம் முதல் சுங்கவாயில் வரையுள்ள சாலையில் அதிக குப்பைகள் சேருகின்றன. இதனால் நகரின் சுகாதாரம் சீர்கெட்டுக் காணப்படுகிறது. இது வேலூருக்கு சுற்றுலாவாக வரும் எண்ணற்ற பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது எனப் புகார்கள் எழுந்தன.

இதனால் வேலூர் நகரில் குப்பை அள்ளும் பணியைத் தனியார் வசம் மாநகராட்சி ஒப்படைத்தது.

ஆனால் இத்திட்டம் தோல்வியில் முடிந்தது. இதனால், தற்போது நகராட்சி வசம் உள்ள பணியாளர்களை வைத்தே குப்பைகள் அள்ளும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

குப்பைகளை ஓரிடத்தில் கொட்டியதும், அங்கிருந்து எளிமையான முறையில் அவற்றைச் சேகரித்துச் செல்ல வசதியாக ரூ.13 லட்சம் மதிப்பில் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்ட லாரியை மாநகராட்சி வாங்கியுள்ளது.

இந்தத் தானியங்கி இயந்திரத்தில் பொருத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட 25 குப்பைத் தொட்டிகள் ரூ.11.25 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளன. இவை, சுங்கவாயில் முதல் புதிய பஸ் நிலையம் வரை உள்ள சாலையில் 25 இடங்களில் வைக்கப்படும்.

இவை அனைத்தும் வேலூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.

இவற்றின் செயல்பாடுகளை மேயர் ப.கார்த்திகேயன், ஆணையர் செல்வராஜ், மாநகராட்சி நல அலுவலர் பிரியம்வதா, பொறியாளர் தேவகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

ஒரிரு தினங்களில் இவை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

Last Updated on Friday, 05 March 2010 12:03
 


Page 325 of 519