Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குளித்தலை திடக்கழிவு மேலாண்மை : திட்டம் குறித்து கர்நாடகா குழு பார்வை

Print PDF

தினமலர்    21.07.2010

குளித்தலை திடக்கழிவு மேலாண்மை : திட்டம் குறித்து கர்நாடகா குழு பார்வை

குளித்தலை: குளித்தலை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, கர்நாடகாவை சேர்ந்த அலுவலர் குழு நேரில் பார்வையிட்டது.மாநிலத்தில் முன்னோடி திட்டமாக திடக்கழிவு மேலாண்மை திட்டம், குளித்தலை நகராட்சியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. 10 ஏக்கர் பரப்பளவில் சத்தியமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன், மக்கா குப்பை பிரித்து எடுத்து பிளாஸ்டிக் பொருளும் விற்பனை செய்யப்படுகிறது.குளித்தலை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பல பல்கலைக்கழக மாணவர்கள், வெளிநாட்டினர் பார்வையிட்டு, தொழில்நுட்பம் குறித்து அறிந்து செல்கின்றனர்.

கர்நாடகா மாநிலத்தில் இத்திட்டம் செயல்படுத்திட, திட்டத்தின் தொழில்நுட்பம் குறித்து நேரில் தெரிந்துகொள்ள, கர்நாடகாவை சேர்ந்த நகராட்சி கமிஷனர், நகராட்சி தலைவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட 33 பேர் குழு குளித்தலை வந்தது. குழு ஒருங்கிணைப்பாளர் சப்னா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தனர்.குளித்தலை நகராட்சி தலைவர் அமுதவேல், கமிஷனர் தனலட்சுமி ஆகியோர் விளக்கமளித்தனர்.

கர்நாடகா மாநில குழு ஒருங்கிணைப்பாளர் சப்னா கூறியதாவது:கர்நாடகாவில் நகராட்சியில் செயல்படுத்திட, திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து நேரில் பார்வையிட வந்துள்ளோம். இத்திட்டம் மூலம் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் குழுவினர் நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள சில நகராட்சிகளிலும் பார்வையிட்டது. குளித்தலை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக உள்ளது. இத்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தினால் நல்ல பயனளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.குளித்தலை நகராட்சி சுகாதார பணியாளர்கள், தன்னார்வ பணியாளர்கள் உடனிருந்தனர்.

Last Updated on Wednesday, 21 July 2010 06:13