Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் ஜரூர் : முதல்வர் கையால் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு

Print PDF

தினமலர்    21.07.2010

சேலம் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் ஜரூர் : முதல்வர் கையால் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு

சேலம்: சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியை ஆகஸ்ட் 20க்குள் முடித்து, தமிழக முதல்வர் கையால் திறப்பு விழா காண்பதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.சேலம் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து உரமாக மாற்ற திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. 2009 ஃபிப்ரவரியில் தகுதியின் அடிப்படையில் குஜராத் என்விரோமென்ட் புரடெக்சன் இன்பராஸ்டிரக்சர் லிமிடெட், சூரத் என்று நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்க பகுதியான செட்டிசாவடிக்கு செல்லும் சாலையானது குண்டும், குழியுமாக சீரழிந்து காணப்பட்டது. தவிர, பல பகுதிகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்தது. கட்டுமான பொருட்கள் மற்றும் குப்பைகளை எடுத்து செல்வதற்காக இந்த சாலை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக மாநகராட்சி எல்லை முதல் திடக்கழிவு செயலாக்க பகுதி வரை இரண்டு கி.மீ., நீளத்துக்கு சாலை அபிவிருத்தி பணி மேற்கொள்ளப்பட்டது.இரண்டாவது கட்டமாக கோரிமேடு முதல் கோம்பைபட்டி வரையில் 1.35 கி.மீ., நீளத்துக்கு சாலை அகலப்படுத்தி அபிவிருத்தி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது கோம்பைபட்டி முதல் குண்டத்துமேடு வரை ஆயிரத்து 825 மீட்டர் சாலையை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது."ஆன்லைன்' காமிரா வசதி மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் செயலாக்கத்தை மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் இருந்தே பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆசிய அளவில் முற்றிலும் நவீன முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

சாலை வசதி மற்றும் உள்கட்டமைப்பில் சொற்ப அளவிலான பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி ஆகஸ்ட் 20 ம் தேதி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, புதிய கலெக்டர் அலுவலகம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்கிறார்.தவிர, துறை வாரியாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்க வேண்டும் என்று மாநகராட்சி மேயர், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் விரும்புகின்றனர். எனவே, நிலுவையில் உள்ள 10 சதவீத பணிகளை ஆகஸ்ட் 20க்குள் துரிதமாக முடித்து கொடுக்குமாறு கட்டுமான நிறுவனத்திடம் மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதன் எதிரொலியாக செட்டிசாவடி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது. தற்போது திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.

Last Updated on Wednesday, 21 July 2010 06:12