Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெருங்குடி வளாகத்தில் குப்பையில் இருந்து செங்கல் தயாரிக்க ரூ69 கோடியில் திட்டம்

Print PDF

தினகரன் 27.07.2010

பெருங்குடி வளாகத்தில் குப்பையில் இருந்து செங்கல் தயாரிக்க ரூ69 கோடியில் திட்டம்

சென்னை, ஜூலை 27: பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ரூ69.5 கோடி செலவில் குப்பையில் இருந்து உரம், செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு மேயர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.

மாநகராட்சி சார்பில் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. ஆணையர் ராஜேஷ் லக்கானி விழாவுக்கு தலைமை தாங்கினார். மேயர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி பேசியதாவது:

பெருங்குடியில் 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குப்பை கொட்டும் வளாகத்தில் தினமும் தென்சென்னை பகுதியில் சேரிக்கப்படும் 1,500 டன் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. சுமார் 35 வருடங்களுக்கு முன் பெருங்குடியில் குப்பை கொட்ட ஆரம்பிக்கும்போது இந்த பகுதியில் குடியிருப்புகள் இல்லை. இப்போது பெருங்குடி பகுதி, குடியிருப்பு நிறைந்த பகுதியாக வளர்ச்சியடைந்துள்ளது.

பெருங்குடியில் மட்டும் இன்றைக்கு 95 லட்சம் டன் குப்பை தேங்கிக் கிடக்கிறது. இதனால் பெருங்குடி, வேளச்சேரி, தரமணி பகுதிகளில் சுகாதார பாதிப்புகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து இங்குள்ள குப்பையை அறிவியல் ரீதியில் கையாள மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதன்படி 30 ஏக்கர் நிலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, ரூ69.5

கோடியில் குப்பையை மறுசுழற்சி செய்வதற்கான தொழிற்சாலைகள் கட்டப்படும். இந்த பணி 12 மாதத்தில் முடிவடையும். பின்னர் குப்பையில் இருந்து உரமும், பிரித்தெடுக்கப்பட்ட கற்கூளங்களில் இருந்து செங்கற்களும், எரியக்கூடிய பொருட்களில் இருந்து எரிகட்டிகளும் தயாரிக்கப்படும்.

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் தொழிற்சாலை செயல்பட துவங்கிய பிறகு குப்பையே இல்லாத நிலை உருவாகும். அத்துடன் பெருங்குடி, அதன் சுற்றுப்பகுதியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

விஞ்ஞான முறையில் பிரித்தெடுக்கும் பணி நடைபெறுவதால் துர்நாற்றம், ஈக்கள் இருக்காது. மீதமுள்ள 95 ஏக்கரில் பசுமை பூங்கா அமைக்கப்படும். வடசென்னை பகுதி கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகத்தில் ஒரு சில மாதங்களில் இந்த பணி துவங்கும். இவ்வாறு மேயர் பேசினார்.

தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, துணை மேயர் சத்யபாமா, மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குப்பை மூலம் ரூ75 லட்சம் மாநகராட்சிக்கு வருமானம்

மேயர் கூறுகையில், "பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் 30 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த ஹைட்ரோஏர் டெக்டானிக்ஸ்என்ற நிறுவனத்துக்கு மாநகராட்சி கொடுத்துள்ளது. இந்த நிறுவனம் ஒரு ஆண்டில் தொழிற்சாலைகளை கட்டி முடித்து, குப்பையை மறுசுழற்சி செய்யும் பணியை துவக்கும். தினமும் 1,400 டன் குப்பையை இந்நிறுவனத்துக்கு மாநகராட்சி வழங்கும். ஒரு டன் குப்பைக்கு 15 ரூபாயை இந்நிறுவனம் வழங்கும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ75 லட்சம் வருமானம் மாநகராட்சிக்கு கிடைக்கும். 20 ஆண்டுகள் மட்டுமே இந்நிறுவனம் இந்த பணியை செய்யும். பின்னர் ஒப்பந்தகாலம் முடிவடைந்து, மாநகராட்சியிடமே தொழிற்சாலையை ஒப்படைத்து விடும்" என்றார்.