Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் 2 ஆண்டாக கிடப்பில் போட்டுள்ள திரவக்கழிவு மேலாண்மை திட்டம் மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

Print PDF

தினகரன் 27.07.2010

சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் 2 ஆண்டாக கிடப்பில் போட்டுள்ள திரவக்கழிவு மேலாண்மை திட்டம் மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

தாம்பரம், ஜூலை 27: சிட்லபாக்கம் பேரூராட்சியில் திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தை அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரிகளில் நீர் மாசுபடுவதைத் தடுக்க திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்து, உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்த அறிவுறுத்தியது. அதற்காக மாநில நிதி பகிர்வு திட்டத்தின் கீழ் நிதியும் ஒதுக்கியது. இந்த திட்டத்தை செயல்படுத்த காஞ்சிபுரம் மாவட்டம் சிட்லப்பாக்கம் பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டது. இங்கு 18 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இப்போது இப்பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது.

8&வது வார்டு பாலாஜி அவென்யூ பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் திரவக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டது. தினமும் 2 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரித்து செம்பாக்கம் பெரிய ஏரியில் விடும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதனால் கழிவுநீர் ஏரிக்கு செல்வது தடுக்கப்பட்டது. நிலத்தடிநீர் மாசுபடுவதும் தடுக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இந்த சிறப்பு வாய்ந்த திட்டம் பராமரிப்பின்றி கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் மீண்டும் ஏரிக்கு செல்கிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால் திட்டத்தின் பலன் கிடைக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.