Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி மந்தம்

Print PDF

தினமலர் 07.09.2010

திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி மந்தம்

சேலம்: சேலத்தில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்ட கட்டுமான பணிகள் மந்தமாகியுள்ளது. அதனால் திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.மொத்தம் 95 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்த சேலம் மாநகராட்சி, 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ளது. கிழக்கில் உடையாபட்டி வரையும், மேற்கில் கொண்டலாம்பட்டி, வடக்கே குரங்குசாவடியும், தெற்கில் சீலநாயக்கன்பட்டி மற்றும் கந்தம்பட்டி, கோரிமேடு மற்றும் அஸ்த்தம்பட்டி ஆகியவை மாநகராட்சி எல்லைகளாக உள்ளன. மாநகர பகுதியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

சேலத்தில் பொது மக்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 600 மெட்ரிக் டன் கழிவுகளும், திருமணிமுத்தாறு மற்றும் அதன் சாக்கடை கால்வாய்களில் தூர்வாரும் போது கிடைக்கும் கழிவுகளையும் சேர்த்து சுமார் 650 மெட்ரிக் டன் முதல் 700 மெட்ரிக் டன் வரை கழிவுகள் பெறப்படுகிறது. இந்த கழிவுகளை மாநராட்சி நிர்வாகம் மாநகரின் எல்லையில் காலியாக இருந்த அரசு புறம்போக்கு இடங்களான மணியனூர், எருமாப்பாளையம், சூரமங்கலம், விராணம் மற்றம் பள்ளபட்டி ஏரி ஆகிய பகுதிகளில் கொட்டியது. மக்கள் தொகை பெருக்கம், மாநகர வளர்ச்சி காரணமாக, இப்பகுதிகள் தற்போது மக்கள் வசிக்கும் முக்கிய இடங்களாக மாறியுள்ளன.சேலத்தில் பெறப்படும் கழிவுகளில் 60 சதவீததுக்கும் மேல் எருமாப்பாளையம் குப்பைமேட்டில் கொட்டப்படுகிறது. இதனால் இங்குள்ள களரம்பட்டி, கிச்சிபாளையம், கருங்கல்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடிநீர், காற்று மற்றும் ஏரி மாசுபட்டு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. இப்பிரச்னையை போக்க சேலம் மாநகராட்சி கடந்த 2008ம் ஆண்டு ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைக்கு சுமார் 8 கோடியில் திட்டம் தயாரித்து, 2009ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம், சேலம் செட்டிச்சாவடியில் 100 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி கட்டுமான பணிகள் துவங்கியது. இப்பகுதி பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பணிகள் நடந்தது.கட்டுமான பணிகளின் ஒருபகுதியாக, குப்பைகளை கொண்டுவரும் வாகனங்களுக்காக தார் ரோடுகள் போட்டுள்ளனர். கடந்த மாதம் தமிழக முதல்வர் வரும் வரை, இப்பணிகள் வேக வேகமாக செய்யப்பட்டு 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. தற்போது இப்பணி மந்தமாகியுள்ளதால், திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. குப்பை மேடுகள் அமைந்துள்ள பகுதியில் வசித்து வரும் மக்கள், திட்டப்பணி விரைவாக முடிக்காவிட்டால், கட்சி பாகுபாடின்றி போராட்டங்கள் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளனர்.