Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராமையன்பட்டி குப்பை கிடங்கில் மண்புழு உரம் தயாரிக்க மாநகராட்சி முடிவு ரூ.7லட்சத்தில் ஷெட் தயாராகிறது

Print PDF

தினகரன் 09.09.2010

ராமையன்பட்டி குப்பை கிடங்கில் மண்புழு உரம் தயாரிக்க மாநகராட்சி முடிவு ரூ.7லட்சத்தில் ஷெட் தயாராகிறது

நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் மண்புழு உரம் தயாரிப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.

நெல்லை, செப். 9: ராமையன்பட்டி குப்பைகிடங்கில் மண் புழு உரம் தயாரிக்க நெல்லை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக சுய உதவிக்குழு பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சமீபகாலமாக நெல்லை மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவது நெல்லை மாநகராட்சிக்கு பெரும் பிரச்னையாக மாறி வருகிறது. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் ராமையன்பட்டி குப்பை கிடங்கில் தீ பிடித்து அப்பகுதியே புகை மண்டலமானது. இதைய டுத்து மாநகராட்சி குப்பை கள் சீவலப்பேரி சாலையில் போடப்பட்டு வந்தன. அங்கு வனத்துறை ஆட்சேபனை தெரிவித்ததால், சிக்கல் ஏற்பட்டது.

நெல்லை, தச்சை மண் டல குப்பைகள் தற்போது பேட்டையில் கொட்டப்பட்டு வருகின்றன. அங்கும் கடந்த இரு தினங்களாக குப்பைகள் தீப்பற்றி எரிகின்றன. இதனால் நெல்லை மாநகராட்சிக்கு குப்பை பிரச்னை பெரும் தலைவலியாக மாற துவங்கியுள்ளது. குப்பையை உரமாக்கும் திட்டத்தை அவசியம் துவக்க வேண்டிய நிலையில் மாநகராட்சி உள்ளது. மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் தலைமையிலான அதிகாரிகள் செய்த ஆய்வில் குப்பையில் இருந்து மண்புழு உரம் தயாரிக்க ராமையன்பட்டி குப்பை கிடங்கில் போதிய வசதிகள் இருப்பது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் பொன்விழா ஆண்டு நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன்படி ஒரு குழுவுக்கு 5 பேர் வீதம் 10 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 50 ஆண்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மண்புழு உரம் தயாரித்தல், நர்சரி பண்ணை அமைத்தல் குறித்து கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி விரைவில் அளிக்கப்படும்.

இத்திட்டத்திற்கான முன்னேற்பாடு கூட்டம் நேற்று ராமையன்பட்டி குப்பை கிடங்கில் நடந்தது. மாநகராட்சி சமுதாய முன்னேற்ற அலுவலர்கள் சுந்தரி, கலாவதி ஆகியோர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர். மட்காத குப்பை களை நேரடியாக தாழையூத்து இந்தியா சிமெண்ட்ஸ்க்கு அனுப்பி வைக்கவும், மட்கும் குப்பைகளை ராமையன்பட்டி குப்பை கிடங்கில் சுய உதவிக்குழுக்கள் மூலம் மண் புழு உரமாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக குப்பை கிடங் கின் முகப்பு பகுதியில் ரூ. 7லட்சம் செலவில் ஷெட் அமைக்கும் பணிகளும் விரைவில் துவங்கும். இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. நர்சரி பண்ணையில் மரக்கன்று களை பராமரித்து, அவற்றை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் தெருக்களில் நடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 09 September 2010 10:18