Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இயந்திரத்துக்கு காப்புரிமை

Print PDF

தினமணி 09.09.2010

குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இயந்திரத்துக்கு காப்புரிமை

புதுச்சேரி அரசூர் பகுதியில் உள்ள அரசின் பாசிக் தோட்டக்கலைப் பண்ணையில் உள்ள குப்பையை எருவாக்கும் இயந்திரம்.

புதுச்சேரி, செப். 8: புதுச்சேரி அரசின் பாசிக் நிறுவனம் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் பணியைச் செய்து வருகிறது. இதற்காகக் குறைந்த செலவில் வடிவமைக்கப்பட்ட இயந்திரத்துக்குக் காப்புரிமை கிடைத்துள்ளது.

நகரப் பகுதி கழிவுகளை மேலாண்மை செய்வது என்பது சிரமமான விஷயம்.

நகரப் பகுதியில் உருவாகும் குப்பைகளைப் பிரித்தெடுத்து அதை உரமாகவும் மற்றும் பிற பயன்பாட்டுக்கும் மாற்ற வேண்டிய நிலை இருக்கிறது.

புதுச்சேரியில் தினந்தோறும் 350 டன் குப்பைகள் உருவாகின்றன. இதைக் கருத்தில் கொண்டு பாசிக் நிறுவனம் நகரக் கழிவுகளிலிருந்து ஊட்டமேற்றிய கம்போஸ்ட் உரம் தயாரித்துக் கொடுத்து வருகிறது.

இந்த உரத்துக்கு புதுச்சேரி அரசு 75 சதவீதம் மானியமும் அளித்து வருகிறது. இதற்காக இயந்திரங்களை வாங்குவதாக இருந்தாலும் 1 கோடி அளவில் செலவிட வேண்டும் என்ற நிலையில் உள்ளூரிலேயே தயார் செய்தால் குறைந்த செலவாக முடியும் என்று பாசிக் நிறுவனத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் எடுத்த முயற்சிக்கு இப்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பாசிக் முன்னாள் மேலாண் இயக்குநர் பி. வேணுகோபால், நுண்ணுயிரியாளர் டாக்டர் ஆர். தயாளன் ஆகியோர் இதற்காக வடிவமைத்துள்ளனர்.

இப்போது இவர்கள் வடிவமைத்த இயந்திரத்துக்குப் பாராட்டும் காப்புரிமையும் கிடைத்துள்ளது. இந்த இயந்திரத்துக்கு "இரட்டை ரோட்டரி இயந்திரம்' என்று பெயர்.

இது குறித்து இந்த இயந்திரத்தை வடிவமைத்தவர்களில் ஒருவரான தயாளன் தினமணி நிருபரிடம் கூறுகையில், "அரசு பணமாக இருந்தாலும் 1 கோடி செலவிட்டு இயந்திரம் வாங்க முடியாது. குறைந்த செலவில் இயந்திரத்தை நாமே வடிவமைத்தால் என்ன என்ற யோசனை காரணமாக 25 லட்சத்துக்குள் எங்களால் இதை வடிவமைக்க முடிந்தது. இப்போது காப்புரிமையும் கிடைத்துள்ளது என்றார்.

மேலும் இவர்கள் வடிவமைத்த இயந்திரத்தின் மாதிரியை பயன்படுத்த நகரக் கழிவுகளிலிருந்து கம்போஸ்ட் உரம் தயாரிக்கும் மற்ற மையங்களுக்கு மத்திய அரசின் நகரப்புற மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

குப்பை கிடைப்பதில் சிரமம்

இந்த இயந்திரம் ஒரு நாளைக்கு 75 முதல் 100 டன் குப்பையைச் சலித்து உரமாக மாற்றம் திறன் கொண்டது. அரசூர் பகுதியில் இந்த இயந்திரம் நிறுவப்பட்டு உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இப்போது அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்குக் குப்பையை எடுத்து வரக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் இந்த நிறுவனத்துக்குக் குப்பை கிடைப்பது சிரமமாக இருக்கிறது.

இருப்பினும் இப்போது அங்குள்ள குப்பை ஓராண்டுக்கு பணி செய்யும் அளவுக்கு இருக்கிறது. இந்த நிறுவனம் ஓராண்டுக்கு 2500 முதல் 3000 டன் அளவுக்கு ஊட்டமேற்றிய கம்போஸ்ட் உரம் தயாரித்து வருகிறது.

நாற்றம் எடுக்காமல் இருக்க மக்கிய குப்பைதான் நல்லது. குறைந்தது 45 நாள்கள் குப்பை மக்கியிருக்க வேண்டும். அப்போதுதான் அதை கம்போஸ்ட் உரமாக மாற்ற முடியும். குப்பையை அப்படியே கொட்டி வைத்தால் நாற்றம் எடுக்கும்.வாரத்துக்கு ஒருமுறை அதைப் புரட்டிப் போட்டால் நாற்றம் எடுக்காது என்றார் தயாளன்.