Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பை கொட்ட ஐந்து நகராட்சி பகுதி மக்கள் ஆதரவு

Print PDF
தினமலர்     22.09.2010

குப்பை கொட்ட ஐந்து நகராட்சி பகுதி மக்கள் ஆதரவு

பூந்தமல்லி: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தில், குத்தம்பாக்கம் கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, அக்கிராம மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், ஐந்து நகராட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் உட்பட்டோர் ஆதரவு தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் குத்தம்பாக்கம் கிராமத்தில் அம்பத்தூர், பூந்தமல்லி, மதுரவாயல், திருவேற்காடு மற்றும் வளசரவாக்கம் ஆகிய ஐந்து நகராட்சிகளில் தேங்கும் கழிவுகளை கொட்டி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. இதை அக்கிராம மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், நேற்று பூந்தமல்லியில் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடந்தது. குத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இளங்கோவன் பேசுகையில், " இத்திட்டத்தை செயல்படுத்த உள்ள பகுதி சற்று மேடானது. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் தான் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்கிறது. இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தினால் ஏரி நீர் உட்பட நிலத்தடி நீர் பாதிக்கப்படும். பொதுவாக இதுகுறித்து ஓராண்டில் நான்கு பருவ காலங்களிலும் அங்கு ஆய்வு நடத்த வேண்டும். ஆனால், அதிகாரிகள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்துள்ளனர். இத்திட்டத்தை கைவிடவேண்டும்' என்றார். செம்பரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட் பேசுகையில், "செம்பரம்பாக்கம் ஏரிக்கும், நிலத்தடி நீருக்கும் ஆபத்து வரக்கூடாது. ஏற்கனவே எங்கள் பகுதிக்கு குத்தம்பாக்கத்தில் ஐந்து ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தான் நீர் பெற்று வருகிறோம்' என்றார்.

கூட்டத்தில், குத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது கருத்துக்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அம்பத்தூர், மதுரவாயல், திருவேற்காடு, பூந்தமல்லி மற்றும் வளசரவாக்கம் நகராட்சி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் பலரும் ஆதரவு தெரிவித்தனர். வில்லிவாக்கம் ரங்கநாதன் எம்.எல்..,வும் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். கூட்டத்தில் கலெக்டர் ராஜேஷ் பேசுகையில், "பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிசீலித்து முடிவெடுக்கும்' என்றார். கூட்டத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் ராஜன், உதவி பொறியாளர் லிவிங்ஸ்டன் உட்பட திரளான அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 22 September 2010 07:45