Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திடக்கழிவு திட்டத்துக்கு ரூ. 28 லட்சம் நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 09.10.2010

திடக்கழிவு திட்டத்துக்கு ரூ. 28 லட்சம் நிதி ஒதுக்கீடு

தர்மபுரி: தர்மபுரி நகராட்சியில் திடக்கழிவு திட்டத்தை செயல்படுத்த 28 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி நகரில் தினம் 30 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. சேகரித்து அள்ளப்படும் குப்பைகள் நகராட்சி வாகனங்கள் மூலம் பென்னாகரம் ரோட்டில் கொட்டி குவிக்கப்படுகின்றன.குப்பைமேடு அருகே தர்மபுரி சத்யா நகர், இசை வேளாளர் நகர், சவுளூப்பட்டி, .ரெட்டிஅள்ளி அரசு போக்குவரத்து கழக குடியிருப்புகள் உள்ளன. 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டுவதால், அப்பகுதியில் சுகாதாரமற்ற நிலையும், துர்நாற்றமும் அடித்து வருகிறது.

சாலையோரத்தில் உள்ள இந்த குப்பை மேட்டில் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் எறிந்து செல்லும் சிகரெட் தனலில் தீப்பிடித்து, அடிக்கடி அப்பகுதி புகை மண்டலமாக கிளம்பி பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது.நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை வேறு இடத்தில் கொட்ட தொடர்ந்து அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் உள்ள குப்பை மேட்டை அகற்றவும், தடங்கம் பஞ்சாயத்து பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக நகராட்சிக்கு 28 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தடங்கம் பகுதியில் குப்பைகள் தரம் பிரிக்கும் பகுதியில் சுற்றுசுவர் கட்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.இரு பெரிய தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிந்த பின் பென்னாகரம் சாலையில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் அகற்றவும் நகராட்சியின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Last Updated on Monday, 11 October 2010 05:48