Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குத்தம்பாக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டம்

Print PDF

தினமணி 13.10.2010

குத்தம்பாக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டம்

சென்னை, அக். 12: குத்தம்பாக்கம் பகுதியில் மேற்கொள்ளப்பட இருக்கும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் சுற்றுச்சூழல் நலனை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டு உள்ளதாக அம்பத்தூர் நகராட்சி ஆணையர் ஆசிஷ்குமார் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கம் சென்னை ஐ..டி.யில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது குத்தம்பாக்கம் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தால் செம்பராக்கம் ஏரி பாதிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் அம்பத்தூர் நகராட்சி ஆணையர் ஆசிஷ்குமார் இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குத்தம்பாக்கம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் அம்பத்தூர், வளசரவாக்கம், திருவேற்காடு, பூந்தமல்லி, மதுரவாயல் ஆகிய நகராட்சிகள் இணைந்துள்ளன. இதில், அம்பத்தூர் நகராட்சிக்கு 40 ஏக்கர் நிலமும், பூந்தமல்லி, வளசரவாக்கம், மதுரவாயல் ஆகிய நகராட்சிகளுக்கு 6 ஏக்கரும், திருவேற்காடு நகராட்சிக்கு 7 ஏக்கர் நிலங்களும் இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இப்பகுதிகளில் உள்ள குப்பைகளை மக்கும் தன்மை மற்றும் மக்காத தன்மை என தரம் பிரித்து அவற்றை குத்தம்பாக்கம் பகுதியில் நவீன முறையில் சுத்திகரிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தை அங்கீகரிப்பது தொடர்பான பணிகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குத்தம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் செம்பரம்பாக்கம் ஏரி பாதிக்கப்படும் என்ற கருத்து, எந்த ஆதாரமும் இல்லாதது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்: செம்பரம்பாக்கம் ஏரிக்கு எந்த வித பாதிப்பும் இல்லாத வகையிலேயே இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே திடக்கழிவு மேலாண்மை தொழிற்சாலை அமைக்கப்பட இருப்பதால் இந்த பகுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்படும். மாசுகளை கட்டுப்படுத்தும் விதத்தில் மரங்கள் இதனை சுற்றி வளர்க்கப்படுகின்றன.

குப்பைகளை சுத்திகரிக்கப்பட்டு அவை எரிபொருள், கற்கள் உள்ளிட்டவைகளாக மாற்றப்படுவதால் குப்பைகள் இங்கு தேங்க வாய்ப்பில்லை.

மேலும் இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 1.4 மீட்டர் ஆழத்துக்கு 4 முதல் 5 தடுப்புகள் இந்த நிலத்தில் அமைக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல் நலனைக் கருத்தில் கொண்டே இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி சிறிதளவும் பாதிக்கப்படாது.

இந்த திட்டத்தின் சாதக, பாதகங்களை கருத்தில் கொண்டே மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு அனுமதி அளிக்கும். பொதுமக்களுக்கும், ஏரியின் நீருக்கும் பாதிப்புகள் உண்டாகும் வகையில் இந்த திட்டம் உள்ளதாக கூறி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு அனுமதி அளிக்காத பட்சத்தில், இந்த திட்டத்தை கைவிட தயாராக இருக்கிறோம் என்றார் ஆசிஷ்குமார்.

அம்பத்தூர் நகர் மன்ற தலைவர் கே.என். சேகர், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.