Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தமிழகத்தில் ரூ9,295 கோடியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள்

Print PDF

தினகரன்                  28.10.2010

தமிழகத்தில் ரூ9,295 கோடியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள்

வேலூர், அக்.28: வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் சார்பில் பசுமைக்கோயில் விருது, இந்தியாவின் சிறந்த சுற்றுச்சூழல் வளாகம் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. துணை முதல்வர் மு..ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

பசுமைக்கோயில் விருதை நாராயணி பீடம் இயக்குனர் சுரேஷ்பாபுவும், இந்தியாவின் சிறந்த சுற்றுச்சூழல் வளாகம் விருதை அறங்காவலர் சவுந்தரராஜன் பெற்றுக் கொண்டனர். சிறந்த சுற்றுச்சூழல் சாதனையாளர் விருதை ஸ்ரீபுரம் எக்ஸ்னோரா தலைவர் மீனாட்சிசுந்தரத்துக்கு சக்தி அம்மா வழங்கினார்.

விழாவில் மு..ஸ்டாலின் பேசியதாவது:

நாராயணி பீடத்தில் சுற்றுச்சூழல் பாதுகாக்க எக்ஸ்னோரா பல்வேறு பணிகளை செய்து வருகிறது. புவி வெப்பமயமாதல் பிரச்னை உலகளாவிய அளவில் உள்ளது. எல்லா இடங்களிலும் உள்ளூர் அளவில் பசுமையை பாதுகாக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில் தமிழகத்தில் ரூ.9 ஆயிரத்து 295 கோடி மதிப்பில் பல்வேறு திடக்கழிவு மேலாண்மை பணிகளை செய்து வருகிறது.

ஆன்மிகவாதிகள் சமூகத்திற்கு தேவையான நல்ல பணிகளை ஆற்றும்போது அதற்கு உருதுணையாக இருப்போம். சென்னைக்கு குடிநீர் வரும் கிருஷ்ணா நதிநீர் கால்வாயை சீர்படுத்த அரசு வைத்த கோரிக்கையை ஏற்று, அந்த கால்வாயை சாய்பாபா சீரமைத்து தந்தார்.

மாதா அமிர்தானந்தமயி சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோருக்கு வீடுகளை கட்டித் தந்துள்ளார். கோவை ஈஷா ஆன்மிக அமைப்பு அரசுடன் இணைந்து மரக்கன்றுகள் நட்டு வருகிறது. நாராயணி பீடத்தின் சமுதாய பணிகள் தமிழ்நாடு முழுவதும் வளர்ச்சி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சக்தி அம்மா அருளுரை வழங்கினார். அமைச்சர்கள் துரைமுருகன், பெரியகருப்பன், மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், எக்ஸ்னோரா நிறுவனர் நிர்மல், எம்.பி. அப்துல் ரகுமான், எம்எல்ஏக்கள் ஆர்.காந்தி, சி.ஞானசேகரன், கலெக்டர் செ.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக எக்ஸ்னோரா தலைவர் சுலோச்சனா ராமசேஷன் வரவேற்று பேசினார். முடிவில் ஸ்ரீபுரம் திடக்கழிவு மேலாண்மை திட்ட கவுரவ ஆலோசகர் ராஜசேகர் நன்றி கூறினார்.