Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாமதமாகும் திடக்கழிவு மேலாண்மை திட்டம்: குப்பை மேடாகிறது காவிரி ஆறு!

Print PDF

தினமணி             11.11.2010

தாமதமாகும் திடக்கழிவு மேலாண்மை திட்டம்: குப்பை மேடாகிறது காவிரி ஆறு!

ஈரோடு : திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் காவிரி ஆறு குப்பை மேடாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வீரப்பன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் சேரும் குப்பையை நகராட்சி நிர்வாகம், வைராபாளையம் மயானம் அருகே காவிரிக் கரையில் கடந்த 20 ஆண்டுகளாக கொட்டி வருகிறது. குப்பைக் கிடங்கு நிரம்பி வழியும் நிலையில், அதன்மீது மேலும் குப்பை கொட்ட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, காவிரியாற்றின் இடது கரையை ஆக்கிரமித்து குப்பை கொட்டப்படுகிறது .

வீரப்பன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் தனியார் மருத்துவமனைகள் அதிகம் உள்ளதால், குப்பையில் அதிக அளவு மருத்துவக் கழிவு சேர்கிறது. மழைக் காலங்களில் குப்பையுடன் சேரும் மழை நீர், காவிரியில் கலந்து, பெரிதும் மாசடைகிறது. இதன் அருகே வீரப்பன்சத்திரம் நகராட்சிப் பகுதிக்கு குடிநீர் உறிஞ்சு கிணறும், நீரேற்று நிலையமும் அமைந்துள்ளன. தற்போது சாய ஆலைகளுக்கு இணையாக காவிரி ஆற்றில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.

நகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த, வைராபாளையத்தில், காவிரிக் கரையோரம், 7.89 ஏக்கர் நிலத்தை ரூ 26 லட்சம் செலவில் கடந்த 2008-ல் வாங்கியது. 2008-ம் ஆண்டு இறுதியில், சுமார் ரூ 1.25 கோடி திட்ட மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கான பணிகளை நகராட்சி நிர்வாகம் துவக்கியது.

இத்திட்டம் செயல்படுத்தவுள்ள இடத்தைச் சுற்றி சுற்றுச்சுவர், அணுகு சாலை ஆகியவை ரூ 59.25 லட்சம் செலவிலும், வைராபாளையம் குடிநீர் நீரேற்று நிலையத்திலிருந்து, குப்பை கொட்டும் இடத்துக்கு எளிதாகச் செல்ல, குறுக்கே செல்லும் ஓடையின் மீது ரூ 45 லட்சம் செலவில் பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகளாகியும், சுற்றுச்சுவர் பணி கூட முழுமை பெறவில்லை. பாலம் கட்டும் பணியும் பாதியில் நிற்கிறது. நகராட்சி நிர்வாகம் தினமும் காவிரியாற்றில் குப்பை கொட்டுவதால், ஆற்றின் பெரும் பகுதியை குப்பை ஆக்கிரமித்துள்ளது. ஆற்றில் தண்ணீர் செல்வதைத் தடுப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், நகராட்சி நிர்வாகமே தொடர்ந்து ஆற்றை ஆக்கிரமித்து, குப்பையைக் கொட்டி மாசுபடுத்தி வருகிறது என்ற புகார் உள்ளது. குப்பையை ஆற்றில் கொட்டுவதற்குப் பதில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்த வாங்கியுள்ள இடத்தில் கொட்ட நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?