Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய தொழில்நுட்பங்கள்'

Print PDF
தினமணி 31.08.2009

"திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய தொழில்நுட்பங்கள்'

கோவை, ஆக.30: திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய தொழில்நுட்பங்கள் அதிகளவில் வரவேண்டும் என்று சர்வதேச கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்த சர்வதேச கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. துணைவேந்தர் ஆர்.ராதாகிருஷ்ணன் கருத்தரங்கைத் துவக்கி வைத்து ஆய்வுக் கட்டுரைகளை அடங்கிய சிடி-ஐ வெளியிட்டார்.

மும்பையில் உள்ள இந்திய திடக்கழிவு மேலாண்மை சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இக் கருத்தரங்கில் 102 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

மூன்று நாள்கள் நடந்த கருத்தரங்கின் நிறைவில் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

பூமி வெப்பமயமாவதற்கான பசுமைக் குடில் வாயுக்களை திடக்கழிவுகள் வெளியேற்றுகின்றன. மேலும் மண், நீர்நிலைகளை மாசுபடுத்தி பல்வேறு நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகின்றன. திடக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் உடனடி தேவையாக உள்ளது.

குப்பைகள் சேகரிப்பு, அவற்றைத் தரம்பிரிப்பது, சூழல் பாதிப்பு இல்லாமல் அப்புறப்படுத்துவது ஆகியவற்றில் விஞ்ஞான ரீதியான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். திடக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாததால் ஏற்படக் கூடிய சூழல் பாதிப்புகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், அரசியல் தலைவர்களுக்கு இதில் முக்கியப் பங்கு உண்டு.

திடக்கழிவுகளை அப்புறப்படுத்த புதுமையான தொழில்நுட்பங்கள் அதிகளவில் வரவேண்டும். ஆனால், இத்துறையில் ஆராய்ச்சிகள் தற்போது போதுமானதாக இல்லை. மேலும் திடக்கழிவு மேலாண்மைக்கான பொது தகவல் மையம் அமைக்கப்பட வேண்டும். மருத்துவக் கழிவுகள், எலெக்ட்ரானிக் கழிவுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த சிறப்புக் கவனம் எடுத்துக் கொள்வது அவசியம் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.