Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பைக் கழிவுகள், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம்! திருச்சி மாநகராட்சியின் புதிய முயற்சிகள்

Print PDF

தினமணி                30.07.2012

குப்பைக் கழிவுகள், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம்! திருச்சி மாநகராட்சியின் புதிய முயற்சிகள்

திருச்சி, ஜூலை 29: தினமும் மாநகரில் சேகரமாகும் மக்கும் குப்பைக் கழிவுகளில் இருந்து எரிவாயு, மின்சாரம் தயாரிக்கவும், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யவும் திருச்சி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாநகராட்சி இப்போது முதல்வரின் தொகுதியைக் கொண்ட (ஸ்ரீரங்கம்) மாநகராட்சி என்ற கூடுதல் பலமும்(!) பெற்றிருக்கிறது.

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த சந்தை, வருவாய் பெருக்கும் வணிகவளாகங்கள், நெரிசல் குறைக்கும் மேம்பாலங்கள், மேல்நிலை நடைப்பாலங்கள் உள்ளிட்ட ஏராளமான தேவைகள் நீண்டகால எதிர்பார்ப்புகளாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில், சுகாதாரப் பாதுகாப்பில் ஒவ்வொரு நாளும் மாநகரில் சேகரமாகும் கழிவுகளை அகற்றுவது, மாநகராட்சி நிர்வாகத்தின் மின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சூரிய சக்தியைப் பயன்படுத்துவது உள்ளிட்டவைகளும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் திருச்சி மாநகரில் 436 மெட்ரிக் டன் குப்பைக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. அரியமங்கலத்திலுள்ள குப்பைக் கிடங்கில் இவை மலைபோல குவிக்கப்படுவதும், ஒவ்வொரு முறையும் (புதிய ஆணையர்- புதிய ஆட்சி!) இதற்கான "கவர்ச்சிகர' திட்டங்கள் அறிவிக்கப்படுவதும் வாடிக்கை.

இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக குப்பைக் கிடங்கை மாற்றுவது என்ற யோசனைக்கு நடுவே, மக்கும் தன்மையுள்ள மீன், இறைச்சி, காய்கனி மற்றும் உணவுக் கழிவுகளில் இருந்து எரிவாயு அல்லது மின்சாரம் தயாரிக்கவும் தற்போது மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சோதனை முறையில் நாளொன்றுக்கு 5 மெட்ரிக் டன் மக்கும் குப்பைக் கழிவுகளைக் கொண்டு காந்தி மார்க்கெட் வளாகத்திலேயே "பயோ டைஜெஸ்டர்' திட்ட அமைப்பை நிறுவி எரிவாயு, மின்சாரம் தயாரிக்கப்படவுள்ளது.

இதை நிறுவி 3 ஆண்டுகள் பராமரித்து பிறகு மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் தகுதி, அனுபவமுள்ள நிறுவனங்களைக் கண்டறிவதற்காக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

சூரிய சக்தி மின் நிலையம்:

இதேபோல, மின் சக்தியை சேமிக்கும் வகையில் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி ஆண்டுக்கு ரூ. 11 லட்சம் மின் கட்டணத்தை சேமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

படிப்படியாக மாநகராட்சியின் மற்ற அலுவலகங்களிலும் இந்த ஏற்பாட்டைச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் சாலையிலுள்ள மாநகராட்சி மைய அலுவலகத்தில் கூட்ட மன்றம், மேயர், ஆணையர், துணை மேயர் அறைகள், பொன்மலைக் கோட்ட அலுவலகம், நகரப் பொறியாளர், செயற்பொறியாளர் அலுவலகங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இங்குள்ள மின் விளக்குகள், விசிறிகள், கணினிகள், குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் இதர உபகரணங்கள் மூலம் ஆண்டுக்கு 1,51,790 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான மின் கட்டணமாக ஆண்டுக்கு சராசரி ரூ. 10.15 லட்சம் மின் வாரியத்துக்கு செலுத்தப்படுகிறது.

தற்போது இந்தச் செலவை மிச்சப்படுத்தவும், சூரிய சக்தியைப் பயன்படுத்தவும், மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் "சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம்' ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இந்த நிலையத்தை அமைக்க மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தித் துறையின் 30 % மானியத் தொகை கிடைக்கும். மேலும், 60 % தொகையை தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின் மூலம் கடன் பெறவும், 10 % மாநகராட்சி பொது நிதியிலிருந்து செலவிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வழக்கமான கவர்ச்சிகரமான திட்டங்களாக இல்லாமல் இவ்விரண்டையும் நிறைவேற்றும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற திட்டங்களுக்கு தற்போது அரசின் கொள்கை முடிவுகளும் சாதகமாக இருப்பதை அவர்கள் குறிப்பிடுகின்றனர்.