Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"குப்பைகளை வகைப் பிரித்து சேகரிப்பதே பிரச்னைக்கானத் தீர்வாகும்'

Print PDF

தினமணி            24.08.2012

"குப்பைகளை வகைப் பிரித்து சேகரிப்பதே பிரச்னைக்கானத் தீர்வாகும்'

பெங்களூர், ஆக.23: குப்பைகளை வகைப் பிரித்து சேகரிப்பதே சுற்றுச்சூழல் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்று சுற்றுச்சூழல் ஆதரவுக் குழுவின் தலைவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான எஃப்.சல்டான்ஹா தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

பெங்களூர் மாநகராட்சியின் அலட்சியப் போக்கினால் நகரில் குப்பை அள்ளும் பிரச்னை தலைதூக்கியுள்ளது. நகரில் சேகரிக்கும் குப்பைகளை மாவள்ளிபுரா பகுதியில் பள்ளம்தோண்டி நிரப்பும் பணியை ராம்கி நிறுவனம் செய்து வந்தது. இதை மூடுவதற்கு கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுத்ததால், குப்பைக் கொட்டுவதில் பிரச்னை எழுந்துள்ளது.

இதில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தவறு எதுவுமில்லை. மாறாக, சட்டவிதிகளுக்கு புறம்பாக, சுகாதாரக்கேடுக்கு வழிவகுக்கும் வகையில் ராம்கி நிறுவனம் குப்பையைக் கொட்டிவந்துள்ளது.

நகரில் தினமும் சேகரிக்கும் 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகளைக் கொட்டுவதற்கு வழியில்லாததால், சாலையோரங்களில் குப்பைத் தேங்கியுள்ளது. இது பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை விளைவித்து வருகிறது. குப்பைகளை அள்ளாததால் பலரின் உடல்நலன் கெட்டுள்ளது. ஏரி, கிணறு, ஊற்று, காற்றும் மாசடைந்துள்ளது. ஒருவாரமாக குப்பைகளை அள்ளாததால் நிலைமை மோசமடைந்துள்ளதாக மேயர் மற்றும் ஆணையர் கூறுவதில் அர்த்தமில்லை.

குப்பைகளை அள்ளி, வேறு இடத்தில் கொட்டுவதற்கு வழியில்லாததால் நிலைமை மோசமடைந்துள்ளதாகக் கூறுவது சரியில்லை. குப்பைகளை அள்ளுவதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் பெங்களூர் மாநகராட்சி அலட்சியமாகச் செயல்பட்டதால், பிரச்னை பூதாகரமாகியுள்ளது.

குப்பைகளை வகைப்பிரித்து சேகரிக்க வேண்டும். சேகரிக்கும் குப்பையின் 15 சதத்தை மட்டும் மண்ணில் புகைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதை மாநகராட்சி பின்பற்றவில்லை. குப்பைகளை மண்ணில் புதைப்பது பிரச்னைக்குத் தீர்வாகாது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, குப்பைகளில் இருந்து உரம் மற்றும் மின்சாரம் தயாரிப்பில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின்படி, குப்பையை உலைக் கலனில் எரிக்க வேண்டுமென்றால், அதை வகைப் பிரிக்க வேண்டும். குப்பைகளை வகைப் பிரித்து உயிரிப்பொருள் குப்பையை உரம் தயாரிக்க பயன்படுத்தலாம். இதரக் குப்பையை மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுத்தலாம்.இந்த நோக்கில் மாநகராட்சி சிந்தித்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்றார்.