Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொடுங்கையூர் குப்பைகளிலிருந்து மின்சாரம், உரம் தயாரிக்கும் பணி விரைவில் தொடக்கம்.

Print PDF

தினமணி 10.09.2009

கொடுங்கையூர் குப்பைகளிலிருந்து மின்சாரம், உரம் தயாரிக்கும் பணி விரைவில் தொடக்கம்: மேயர் மா. சுப்பிரமணியன்

சென்னை, செப். 8: ""கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்பட்டிருக்கும் பல லட்சம் டன் குப்பைகளிலிருந்து மின்சாரம், உரம் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்'' என மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கொடுங்கையூர் ராஜரத்தினம் நகரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், ஆதரவற்ற சிறுவர்களுக்கான இரவுக் காப்பகம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இதில் மேயர் மா. சுப்பிரமணியன் பேசியது:

இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இரவுக் காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது. ரூ. 10.45 லட்சம் செலவில் இந்த மாநகராட்சி தொடக்கப்பள்ளி மேம்படுத்தப்பட்டு, அதன் மேல்புறம் நான்கு அறைகள் கொண்ட இரவுக் காப்பகம் கட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக கொடுங்கையூர் குப்பை வளாகத்தில் குப்பை பொறுக்கும் சிறுவர்கள், நடைபாதைகளில் உறங்கும் ஆதரவற்ற சிறுவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக இந்த காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் ஆதரவற்ற சிறுவர்களை இந்த காப்பகத்தில் சேர்த்துவிடலாம்.

இங்கு சேர்க்கப்படும் சிறார்களுக்கு மருத்துவ உதவிகள், விழிப்புணர்வு அளிக்கப்பட்டு, மெல்ல அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த காப்பகத்தை பராமரிக்கும் பணிக்கான ஒப்பந்தம் "சமூக சேவைக்கான மெட்ராஸ் கிறிஸ்தவ கவுன்சில் (எம்.சி.சி.எஸ்.எஸ்.)' என்ற தனியார் தொண்டு நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் இந்த நிறுவனம் காப்பகத்தை பராமரிக்கும். இதற்காக ரூ. 2 லட்சம் அந்த நிறுவனத்தக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் தினமும் 3500 டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் தற்போது பல லட்சம் டன் குப்பைகள் அங்கு சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த குப்பைகளிலிருந்து மின்சாரம் மற்றும் உரம் தயாரிக்கும் பணிக்கான ரூ. 125 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் "டெரா ஃபார்மா பயோ டெக்னாலஜி' என்ற நிறுவனத்துக்கு விடப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் கிடைத்ததும், இந்தப் பணிகள் தொடங்கப்படும்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கொடுங்கையூரில் ரூ. 6.28 கோடி மதிப்பிலும், தங்கசாலை மணிக்கூண்டு அருகே ரூ. 23 கோடி மதிப்பிலும், கணேசபுரத்தில் ரூ. 61.70 கோடி மதிப்பிலும் மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன என்றார்.

Last Updated on Wednesday, 21 October 2009 06:19