Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புனேயில் செயல்படுத்துவதை போன்று நெல்லையில் திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த் பேட்டி

Print PDF
தினத்தந்தி          24.03.2013

புனேயில் செயல்படுத்துவதை போன்று நெல்லையில் திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த் பேட்டி


புனே மாநகராட்சி செயல்படுத்துவதை போன்று நெல்லை மாநகராட்சியிலும் திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று மேயர் விஜிலா சத்யானந்த் தெரிவித்துள்ளார்.

மும்பையில் கருத்தரங்கு

நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள நடைபாதை வியாபாரிகளின் நலன்களை காப்பதற்காக மத்திய அரசு புதிய கொள்கை வகுக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கு மும்பை தேவ்னாரில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சமூக அறிவியல் கல்வி வளாகத்தில் கடந்த 22 மற்றும் 23–ந் தேதிகளில் நடந்தது.அதில் தமிழ்நாடு, மராட்டியம், மேற்கு வங்காளம் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சார்பில் நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த், துணை மேயர் ஜெகநாதன், சுகாதாரத்துறை தலைமை அதிகாரி டாக்டர். முனீஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நெல்லை மேயர் பேட்டி

கருத்தரங்கில் பங்கேற்ற நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

உரிமையுடன் வியாபாரம் செய்யலாம்

நெல்லையை பொருத்தமட்டில் நெல்லையப்பர் சுவாமி கோவிலை சுற்றியுள்ள 4 மாட வீதிகளிலும் நடைபாதை வியாபாரிகள் அதிகம் உள்ளனர். இவர்கள் வியாபாரம் செய்வதற்கு ரவுடிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது. சுமுக போக்குவரத்திற்காக நடைபாதை வியாபாரிகளுக்கு அனைத்து வசதிகளையும் நாங்கள் செய்து கொடுக்க உள்ளோம்.இதன்மூலம் அவர்கள் எந்தவித பிரச்சினையுமின்றி வியாபாரம் செய்யலாம். மாநகராட்சிக்கு மட்டும் வரியாக குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும். நடைபாதை வியாபாரிகள் உரிமையுடன் வியாபாரம் செய்வதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டுவதே எங்களுடைய இலக்கு.

மின்சாரம் தயாரிக்கும் திட்டம்

புனே மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்ப திட்டத்தை நாங்கள் பார்வையிட்டோம். நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட எல்லையில் நாள் ஒன்றுக்கு 150 மெட்ரிக் டன் குப்பை கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் ராமையம்பட்டி குப்பை கிடங்கில் சேகரிக்கப்படுகிறது.எனவே திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நாங்கள் நெல்லையிலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான திட்டத்தை தமிழக முதல்– அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார். ஒருநாளுக்கு 5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு உத்தேசமாக திட்டமிடப்பட்டுள்ளது.நெல்லை மாநகராட்சி தற்போது மின்சார கட்டணமாக மாதத்திற்கு ரூ.60 லட்சம் தொகை செலவிடுகிறது. திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் மின்சார செலவு சரி பாதியாக குறையும். மின்சார தேவையை நிறைவேற்றுவதில் இத்திட்டம் உதவிக்கரமான இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநகராட்சி துணை மேயர் ஜெகநாதன் உடன் இருந்தார்.

மையத்தை பார்வையிட்டனர்

முன்னதாக நெல்லை மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி அடங்கிய குழுவினர், புனே மாநகராட்சியின் கீழ் செயல்படும் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இதேபோன்று மும்பை மாநகராட்சி சாலையோர வியாபாரிகளை கட்டுப்படுத்தி, எப்படி சுமுக போக்குவரத்திற்கு வழி செய்கிறது என்பதையும் ஆய்வு செய்தனர். நெல்லை மாநகராட்சி குழுவினர் மராட்டிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (திங்கட்கிழமை) நெல்லைக்கு புறப்பட்டு செல்கின்றனர்.