Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூர் மாநகராட்சியில் துப்புரவு ஊழியர்கள் குப்பையை அகற்றாவிட்டால் புகார் செய்யலாம் அதிகாரி தகவல்

Print PDF
தினத்தந்தி        13.04.2013

வேலூர் மாநகராட்சியில் துப்புரவு ஊழியர்கள் குப்பையை அகற்றாவிட்டால் புகார் செய்யலாம் அதிகாரி தகவல்


வேலூர் மாநகராட்சியில் குப்பைகளை துப்புரவு ஊழியர்கள் அகற்றாவிட்டால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று அதிகாரி தெரிவித்தார்.

வேலூர் மாநகராட்சி

வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இதில் 15 வார்டுக்கு ஒரு மண்டலம் என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.

வேலூர் மாநகராட்சியில் துப்புரவு பணியில் 560 நிரந்தர ஊழியர்களும், 460 மகளிர் சுய உதவிக்குழுவினரும் உள்ளனர். மேலும் மாநகராட்சிகளில் குப்பைகளை அகற்ற 160 மூன்று சக்கர வண்டியும், 167 தள்ளு வண்டிகளும், 10 வேன் மற்றும் ஆட்டோக்களும், 7 டிப்பர் லாரிகளும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை அகற்ற 7 லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இவர்கள் வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் குப்பைகளை அகற்றி வருகின்றனர்.

குப்பைகள்

அகற்றப்படும் குப்பைகள் வேலூர் அருகே உள்ள சித்தேரி பகுதியில் கொட்டப்படுகின்றன. மேலும் குப்பையை எருவாக்கும் திட்டம் 1–வது மண்டலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேலூர் மாநகராட்சியில் தள்ளுவண்டி, 3 சக்கர வண்டிகளை குப்பைகளை அகற்ற செல்லும் ஊழியர்கள் தங்களின் வண்டியில் பித்தளையினால் ஆன மணியை பயன்படுத்தி வந்தனர். அந்த மணி சத்தம் கேட்டவுடன் பொதுமக்கள் தங்களின் வீட்டில் உள்ள குப்பைகளை வந்து கொட்டினார்கள்.

ஆனால் தற்போது பெரும்பாலான வண்டிகளில் மணி இல்லை. அதனை அகற்றி விட்டார்கள். இதனால் ஊழியர்கள் ஒவ்வொரு வீடாக சென்று குப்பை வண்டி வந்து உள்ளது என்று கூறுகின்றனர். பல இட இடங்களில் வீடுகளுக்குச் சென்று குப்பை வண்டி வந்திருப்பதை தெரிவிப்பதில்லை.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்புபகுதிகளில் குப்பை அகற்றுவதற்காக வழங்கப்பட்ட சில வண்டிகள் கேட்பாரின்றி நாட்கணக்கில் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

பல ஊழியர்கள் பிளாஸ்டிக் தொட்டிகளில் போடப்படும் குப்பைகளை அகற்றாமல் அதில் கிடக்கும் அட்டைப்பெட்டிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், நாளிதழ்கள், பள்ளிக் காகித தாள்கள், பழைய சேலைகள், பேண்ட் ஆகியவற்றை பொறுக்கி எடுப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரியம்வதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

எருவாக்கும் திட்டம்

வேலூர் மாநகராட்சியில் குப்பைகளை உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. இதனால் ஏதாவது புகார் உடனடியாக மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம். மேலும் தள்ளுவண்டி, 3 சக்கர வண்டிகளில் மணி என்பது அவர்களாக வைத்து கொண்டதுதான். மணி வைக்க வேண்டும் என்றால் அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

குப்பையை எருவாக்கும் திட்டம் முன்பிருந்த நகராட்சி, ஊராட்சிகளில் இருந்தது. தற்போது அவை செயல்படாமல் உள்ளன. எனவே, அதனை மாற்றி அந்த பகுதியிலேயே குப்பையை எருவாக்கும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.