Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புனேயை போல் கோவையில் குப்பையில் இருந்து மின்உற்பத்தி திட்டம் மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF
தினத்தந்தி        18.04.2013

புனேயை போல் கோவையில் குப்பையில் இருந்து மின்உற்பத்தி திட்டம் மாநகராட்சி கமிஷனர் தகவல்


புனே நகரை போல், கோவையில் குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருப்பதாக மாநகராட்சி கமிஷனர் லதா தெரிவித்தார்.

புனேயில் ஆய்வு


கோவை மாநகராட்சி கமிஷனர் லதா, புனே மாநகராட்சியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கு ம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பார்வையிட்டார்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் லதா கூறியதாவது:–

புனேயில் 700 மெட்ரிக் டன் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் பயோமெட்ரிக் முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அங்கு சிறப்பான பலனை அளிக்கிறது.

மின்உற்பத்தி திட்டம்

கோவையில் தினமும் 750 டன்னுக்கும் மேலாக குப்பை மற்றும் கழிவுகள் சேருகிறது. இதில் 450 டன் குப்பைகள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு சேகரிக்கப்படுகின்றன. பெரும்பாலான குப்பைகளை தளம் அமைத்து நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

புனேயில் 15–க்கும் மேலான இடங்களில் 700 டன் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம், தனியார் நிறுவனம் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

புனேயை போல் கோவையிலும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்படும். அரசின் ஒப்புதலை பெற்று இந்த திட்டத்தை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம்


ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் ஒண்டிப்புதூர் மற்றும் நஞ்சுண்டாபுரம் பகுதியில் செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடைக்காக பள்ளமான சாலைகளை சீரமைக்க ரூ.51 கோடி செலவில் புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் லதா தெரிவித்தார்.