Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோபி நகராட்சி திட்டம் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஷ்40 லட்சம் ஒதுக்கீடு

Print PDF
தினகரன்        27.04.2013

கோபி நகராட்சி திட்டம் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஷ்40 லட்சம் ஒதுக்கீடு


கோபி: கோபி நகராட்சியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த  திட்டம் விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக பயன்படுத்தப்படாத நிலையில் ஒவ்வொரு மாதமும் 6 லட்சம் டன் குப்பைகள், கழிவுகள், மறுசுழற்சி செய்யப்படாமல் வீணாகி வருவதுடன் சுற்றுப்புற சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. தற்போது கிராமப்புற ஊராட்சிகளில் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என்று இருவகையாக தரம் பிரிக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது. பின்னர் உரக்குழிகளில் அந்த குப்பைகள் கொட்டப்பட்டு உரமாக தயாரிக்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளில் சேகரமாகும் மக்கும் குப்பைகள், கழிவுகள், அழுகிய காய்கறி பழங்கள், உணவு பொருட்கள் இறைச்சி கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் சாலை ஓரங்களிலும், சாக்கடைகளிலும், நீர் நிலைகளிலும் கொட்டப்படுவதால் நகர் பகுதி முழுவதும் பெரும் சுகாரதா கேடு ஏற்பட்டு பல்வேறு நோய் தொற்றுகளும் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தமிழகத்தில் பல நகராட்சிகள் சேர்க்கப்பட்டு தினமும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை மற்றும் காய்கறி கழிவுகளில் இருந்து பயோ காஸ் எனப்படும் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தமிழகத்தில் கோபி உட்பட 27 நகராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

கோபி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் நாளொன்றுக்கு மக்கும் குப்பைகள் மட்டும் 3.6 டன் அளவிற்கு சேகரிக்கப்படுகிறது. மக்கும் குப்பை மற்றும் கழிவுகளை கொண்டு நகராட்சி குப்பை கிடங்கில் பயோ காஸ் பிளான்ட் அமைக்கப்பட உள்ளது. 2500 சதுர அடி பரப்பளவில் துவக்கப்பட உள்ள இந்த திட்டத்திற்கு நகராட்சி பகுதியில் தினமும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள், தினசரி மார்க்கெட்டில் வீணாகும் அழுகிய காய்கறி மற்றும் பழங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் உணவகங்களில் வீணாகும் உணவு பொருட்கள், இறைச்சி கழிவுகள் போன்றவையே பயோ காஸ் தயாரிக்க பயன்படும் முக்கிய மூலப்பொருட்கள் ஆகும்.

இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பயோ காஸ் தெருவிளக்கிற்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த கோபி நகராட்சிக்கு தமிழக அரசு 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதில் நகராட்சியின் பங்களிப்பாக 5 லட்சம் ரூபாயும் மீதமுள்ள தொகையை அரசு மானியமாகவும் வழங்க உள்ளது. இந்த திட்டம் முழுமையாக செயல் படுத்தப்படும் போது கோபி நகராட்சியில் குப்பைகள் கொட்ட போதிய இடம் இல்லாததால் பல வார்டுகளில் பல நாட்கள் குப்பைகள் அள்ளப்படாமல் இருந்து வந்த நிலை மாறி உடனுக்குடன் குப்பைகள் அப்புறப்படுத்தப்படும். இதனால் குப்பைகளால் ஏற்பட்டு வந்த சுகாதார கேடு ஓரளவு கட்டுப்படுத்தப்படும் எனவும் சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவதை பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகங்களில் கிடப்பில் போடப்பட்டிருப்பது போன்று அரசின் மானியத்திற்காக மட்டும் பெயரளவில் இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் கோபி நகராட்சி முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.