Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்: ஒரு வாரத்தில் தொழில்நுட்ப ஆய்வறிக்கை

Print PDF
தினமணி        17.05.2013

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்: ஒரு வாரத்தில் தொழில்நுட்ப ஆய்வறிக்கை


குப்பையில் இருந்து மின்சாரம் மற்றும் உரம் தயாரிக்கும் திட்டத்துக்கான தொழில்நுட்ப ஆய்வறிக்கையை ஒரு வாரத்தில் நிபுணர் குழு அளிக்கும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னைக்கு அருகில் கூத்தம்பாக்கம் மற்றும் மீஞ்சூரில் குப்பையில் இருந்து மின்சாரம் மற்றும் உரம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்து இருந்தது. இந்த தொழிற்சாலைகள் அமைக்க மொத்தம் 10 நிறுவனங்கள் பல்வேறு மின்சாரம் தயாரிப்பு முறைகளுடன் மாநகராட்சியை அணுகின. மேலும் நீரி, பாபா அணு ஆராய்ச்சி மையம் போன்றவற்றின் நிபுணர்களும் சென்னைக்கு வந்து இது தொடர்பாக ஆய்வு செய்தனர். இந்த நிறுவனங்களின் திட்டங்களையும் அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் நிபுணர் குழுவின் ஆய்வறிக்கை ஒரு வாரத்தில் அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: இந்தத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த நிபுணர் குழு அளிக்கும் ஆய்வறிக்கை அடிப்படையில் ஒப்பந்தம் கோரப்பட்டு, திட்டங்களுக்கான நிதி மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.

கடந்த வாரமே ஆய்வறிக்கை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது கிடைக்க வில்லை. இன்னும் ஒரு வாரத்தில் இந்த ஆய்வறிக்கை கிடைத்து விடும். அதன் பின்னர், ஒப்பந்தம் கோருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, திட்ட மதிப்பீடு மதிப்பிடப்படும். ஜூன் இறுதிக்குள் டெண்டர் கோரப்பட்டு விடும். ஜூலை மாத தொடக்கத்தில் தொழிற்சாலைகள் கட்டும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.