Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஹோட்டல் கழிவுகளை அகற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம்

Print PDF
தினமணி         30.05.2013

ஹோட்டல் கழிவுகளை அகற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம்


ஹோட்டல் கழிவுகளை அகற்ற பெங்களூர் மாநகராட்சி, பெங்களூர் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், நோபல் எக்ஸ்சேஞ்ச் என்விரான்மென்டல் சொல்யூஷன்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.

பெங்களூரில் குப்பை பிரச்னை தீர்க்க முடியாததாக இருந்து வருகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பெங்களூர் மாநகராட்சி, பெங்களூர் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் நோபல் எக்சேஞ்ச் என்விரான்மென்டல் சொல்யூஷன்ஸ் நிறுவனம் சார்பில், பெங்களூரில் உள்ள ஹோட்டல்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை எடுத்துச் செல்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.

பின்னர், பெங்களூர் மாநகராட்சி ஆணையர் சித்தையா செய்தியாளர்களிடம் கூறியது:

பெங்களூரை குப்பை இல்லாத மாநகரமாக மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகரில் அதிக குப்பைகளை உருவாக்கும் காரணிகளில் ஒன்றான ஹோட்டல்களில் உருவாகும் கழிவுகளை அகற்ற நோபல் எக்சேஞ்ச் என்விரான்மென்டல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மாநகராட்சி நிர்வாகம் கனஹள்ளி பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள ஹோட்டல்களில் உருவாகும் கழிவுகளை நோபல் நிறுவனம் எடுத்துச் சென்று பிரித்தெடுத்து, ஈரக் கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயுவையும், உலர்ந்த கழிவுகளில் இருந்து பல்வேறு மூலப்பொருள்களையும் தயாரிப்பார்கள்.

இதன் மூலம் குப்பைகளை நிலத்தில் புதைப்பது, அதனால் நிலத்தடி நீர் பாதிப்பது, பொதுமக்கள் எதிர்ப்பு ஆகிய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. ஹோட்டல்களில் இருந்து எடுத்துச் செல்லப்படும் ஒரு கிலோ கழிவுக்கு 90 பைசாவை ஹோட்டல் நிர்வாகம் வழங்கும். ஒவ்வொரு நாளும் ஹோட்டல்களில் இருந்து 750 மெட்ரிக் டன் வரை குப்பைகள் உருவாகின்றன.

ஒரு டன் குப்பையை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் ரூ.3 ஆயிரத்தை செலவிட்டு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெங்களூரில் உள்ள குப்பைகளை அகற்றுவதில் மாநகராட்சி நிர்வாகத்தின் பளு சற்று குறைந்துள்ளது. ஆண்டுக்கு ரூ.27 கோடியும் மிச்சமாகிறது.

மேலும், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.

பெங்களூர் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சந்திரசேகர ஹெப்பார், நோபல் எக்சேஞ்ச் என்விரான்மென்டல் சொல்யூஷன்ஸ் நிறுவனத் தலைவர் நியூரல் பெசார்கர், மண்டல மேலாளர் கிரிஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.