Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 55 கோடியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்

Print PDF
தினமணி       31.05.2013

ரூ. 55 கோடியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்


  திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ. 55 கோடி மதிப்பீட்டில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டப் பணிகள் 6 மாதத்திற்குள் தொடங்கப்படும் என மேயர் விஜிலா சத்தியானந்த் வியாழக்கிழமை தெரிவித்தார்.

  இம் மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் பூ. ஜெகநாதன், ஆணையர் (பொறுப்பு) த. மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள்,  மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் பேசிய 14-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் இரா. குமார், தனது வார்டு பகுதியில் குப்பைகளை சரியாக அகற்றப்படாததால், தெருக்களில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன என குற்றம்சாட்டினார். இதற்கு பதலளித்து மேயர் பேசியதாவது:

   ராமையன்பட்டி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கு குப்பைகள் கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த பிரச்னை புதன்கிழமையுடன் தீர்க்கப்பட்டு, தற்போது குப்பைகள் ராமையன்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.  குப்பை கிடங்கில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை நிரந்தரமாக தடுக்கும் வகையில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ரூ. 55 கோடி மதிப்பீட்டில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் இந்த திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி பணிகள் 6 மாதத்திற்குள் தொடங்கப்படும்.

   அதுவரை குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்படாதவாறு அதிகாரிகள் கவனம் செலுத்தி பொதுமக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் மேயர்.

பாளையங்கால்வாய்: காங்கிரஸ் உறுப்பினர் விஜயன் பேசுகையில், குப்பைகள் மற்றும் கட்டட இடிபாடுகள் கொட்டப் படுவதால் பாளையங்கால்வாய் கூவமாக மாறி வருகிறது. இதனை தடுக்கக் நடவடிக்கை எடுக்கப்படும் என பல முறை உறுதியளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் அவர்.

  இதற்குப் பதிலளித்த மேயர், பாளையங்கால்வாயைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கால்வாயின் இருபுறங்களிலும் தடுப்புச் சுவர்கள் அமைத்து, கம்பி வேலிகள் அமைக்கப்படும் என்றார்.

  தி.மு.க. உறுப்பினர் கமாலூதீன் பேசுகையில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களை அவதூறாகச் சித்தரித்து போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த மேயர், இது தொடர்பாக போலீஸார் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார்.

  இதேபோல் உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மேயர், ஆணையர் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து சாதாரண கூட்டத்தில் 30 தீர்மானங்களும், அவசர கூட்டத்தில் 30 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

14 நன்றி தீர்மானங்கள்: முன்னதாக, கூட்டம் தொடங்கியதும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பல்வேறு தீர்மானங்களை மேயர் விஜிலா சத்தியானந்த் கொண்டு வந்தார். திருநெல்வேலி மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா மலிவு விலை உணவகங்கள் அமைக்க அனுமதி, இம் மாநகராட்சி புதிய குடிநீர் திட்டத்தை விடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தது, கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடத்த உத்தரவிட்டது, ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தது உள்ளிட்ட 14 நன்றி தெரிவிக்கும் தீர்மானங்களை மேயர் கொண்டு வந்தார். இவைகள் அனைத்தும் உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.