Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பை கொட்டுவதற்கு புதிதாகபத்து இடங்கள் தேர்வு

Print PDF
தினமணி       31.05.2013

குப்பை கொட்டுவதற்கு புதிதாகபத்து இடங்கள் தேர்வு


தில்லியின் மூன்று மாநகராட்சிகள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்கு உத்தேசமான பத்து புதிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்கான இடங்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதால் தில்லியின் மூன்று மாநகராட்சிகளும் பெரிதும் கவலையில் ஆழ்ந்துள்ளன.

தற்போது குப்பைகள் கொட்டப்பட்டு வரும் நான்கு இடங்களில் மூன்று இடங்களில் குப்பை கொட்ட தில்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. அதையும் மீறி அங்கு மாநகராட்சிகள் குப்பையைக் கொட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

தடை விதிக்கப்படாமல் ஒரே ஒரு இடம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் குப்பைகளைக் கொட்ட புதிய இடங்களின் தேவை குறித்து மூன்று மாநகராட்சிகளும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தன.

தில்லி உயர் நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகுதான் இதற்கு ஒரு தீர்வு கிடைத்தது. அதன்படி மூன்று மாநகராட்சிகளின் ஆணையர்கள், மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரிகள் அண்மையில் கூடி, குப்பை கொட்டுவதற்கான புதிய இடங்கள் குறித்து விவாதித்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

""இக்கூட்டத்தில், குப்பைக் கொட்ட பத்துப் புதிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பதி சுரங்கப் பகுதியில் 450 ஏக்கர், ஓக்லாவில் 60 ஏக்கர், தஜ்பூர் ஜெய்த்பூர் பஹாரி பகுதியில் 30 ஏக்கர், கித்ரோனி பகுதியில் 150 ஏக்கர், மண்டி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் உத்தேசமான ஐந்து இடங்களை தேர்வு செய்து தெற்கு தில்லி மாநகராட்சிக்கு வழங்க இருக்கிறோம். இந்த இடங்களில் கிழக்கு தில்லி மாநகராட்சியுடன் சேர்ந்து தெற்கு தில்லி மாநகராட்சியும் குப்பை கொட்டலாம்.

இதே போல, சுல்தான்பூர் தபாஸ் பகுதியில் 100 ஏக்கர், பூத் கர்ட் பகுதியில் 150 ஏக்கர், ஹமீத்பூர் கிராமத்தில் 27.5 ஏக்கர், பக்தவார் பூர் சாலைக்கு அருகே பல்லா கிராமத்தில் உள்ள 42.5 ஏக்கர், ஹரியாணா எல்லை மற்றும் பல்லா கிராமத்துக்கு இடையே 62.5 ஏக்கர் நிலம் ஆகிய ஐந்து இடங்கள் வடக்கு மாநகராட்சி நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் பத்து இடங்களுக்கு வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. குப்பைக் கொட்டுவதற்கான புதிய இடங்கள் குறித்த அடுத்த ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும்'' என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.