Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பையில் இருந்து தினமும் 5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டம்

Print PDF
தினகரன்               07.06.2013

குப்பையில் இருந்து தினமும் 5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டம்


கோவை: சிங்கப்பூர் போலவே கோவையிலும் குப்பையில் இருந்து தினம் ஐந்து மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.சிங்கப்பூரில் உள்ளாட்சி நிர்வாகங்கள் செயல்பாடுகளை பார்வையிடுவதற்கு இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 11 மாநகராட்சி பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். கோவை மாநகராட்சி மேயர் வேலுச்சாமி, கமிஷனர் லதா ஆகியோர் அடங்கிய குழுவினர் இதில் இடம் பெற்றனர். ஐந்து நாட்கள் அங்கு பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பணிகளை இங்குள்ள கட்டமைப்புக்கு ஏற்ப பயன்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்தனர். ஐந்து நாள் பயணத்தை முடித்து கொண்டு கோவை திரும்பிய மேயர் வேலுச்சாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

 ஆங்கிலேயர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு நாடு  சிங்கப்பூர். குடிக்க தண்ணீர்கூட இல்லை. ஆனால், இன்று பொருளாதாரத்தில் உலகிலேயே 2வது இடத்தில் உள்ளது. வசிக்க தகுந்த நாடு என்ற பட்டியலிலும் 2வது இடத்தில் உள்ளது. மொத்த பரப்பளவில் 40 சதவீதம் பசுமையாகவே உள்ளது. 94 சதவீத மக்கள் அரசு வழங்கிய வீடுகளில் வசிக்கின்றனர். 99 வருட ஒப்பந்த அடிப்படையில் அரசே வீடு வழங்கியுள்ளது. 6 சதவீதம் பேர் மட்டுமே தாங்களாக கட்டிய வீடுகளில் வசிக்கின்றனர். இருபது  ஆண்டுகளில் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளனர்.

சிங்கப்பூர் போலவே கோவையிலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, சிங்கப்பூரில் தினமும் 2 ஆயிரம் டன் குப்பையில் இருந்து 20 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கிறார்கள். கோவையில் தினமும் 800 டன் குப்பை சேகரம் ஆகிறது. இதில், 400 டன் மறுசுழற்சிக்கு உதவாது. எனவே, மீதமுள்ள 400 டன் குப்பையை எரித்து அதிலிருந்து தினமும் குறைந்தபட்சம் 5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அதேபோல், அனைத்து மாநகராட்சி மற்றும் தனியார் கட்டடங்களில் சோலார் பிளான்ட் அமைத்து சூரியஒளி மின்சாரம் தயாரிக்கவும் திட்டம் உள்ளது.

மழை பெய்ய வேண்டுமென்றால் நகரை பசுமையாக்க வேண்டும். இதற்காக, தனியார் அமைப்புகளுடன் சேர்ந்து வார்டுகள் தோறும் பல லட்சம் மரக்கன்றுகளை நடுதல், சாலையின் இருபக்கமும், சென்டர் மீடியன் பகுதியில் பசுமையாக புற்களை நட்டு, பராமரிக்கவும் திட்டம் உள்ளது. மாநகரில் உள்ள 8 குளங்கள், நீர்வரத்து பாதை, சங்கனூர் ஓடை ஆகியவற்றை சீரமைத்து தண்ணீர் தேக்கப்படும். குளக்கரையை பலப்படுத்தி, அதில், மக்கள் வாக்கிங் செல்ல ஏதுவாக ஏற்பாடு செய்யப்படும். 24 மணி நேர குடிநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு, போக்குவரத்து மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொலைநோக்கு பார்வையுடன், சிங்கப்பூர் நாட்டில் அமல்படுத்துவதுபோலவே கோவையிலும் அமல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக, புதிய மாநகர மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க, தனி படிவம் அச்சடிக்கப்பட்டுள்ளது. அந்தந்த வார்டு அலுவலகம் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து குறிப்பிட்டால், மேம்பாட்டு திட்டத்தில் சேர்க்கப்படும்.இவ்வாறு மேயர் கூறினார். பேட்டியின்போது, கமிஷனர் லதா, துணை கமிஷனர் சிவராசு ஆகியோர் உடனிருந்தனர்.