Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பையில்லா சூழ்நிலையை உருவாக்கி கோவை மாநகரை பசுமையாக்க திட்டம் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க மேயர் செ.ம.வேலுசாமி வேண்டுகோள்

Print PDF
தினத்தந்தி              07.06.2013

குப்பையில்லா சூழ்நிலையை உருவாக்கி கோவை மாநகரை பசுமையாக்க திட்டம் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க மேயர் செ.ம.வேலுசாமி வேண்டுகோள்


கோவை மாநகராட்சியில் குப்பையில்லா சூழ்நிலையை உருவாக்கி பசுமையாக்க திட்டமிட்டு உள்ளதால் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாநகர மேயர் செ.ம.வேலுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

சிங்கப்பூரில் பயிற்சி


நகர்ப்புற ஆளுகையை மேம்படுத்துவது குறித்த சிறப்பு பயிற்சி சிங்கப்பூரில் நடந்தது. இதில் கோவை மாநகராட்சி சார்பில் நான் (மேயர்), ஆணையாளர் உள்பட 3 பேர் சிங்கப்பூர் அரசின் தேசிய வளர்ச்சி அமைச்சக அழைப்பை ஏற்று பயிற்சியில் பங்கேற்றோம்.

இதில் தெற்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த வல்லூனர்கள் பங்கேற்று நகர்ப்புற திட்டமிடுதல், நகர கட்டமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீராதார துறை போன்ற துறைகளை சேர்ந்த வல்லுனர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஒவ்வொரு குழுவும், அவரவரின் நகரத்துக்கு தேவையான திட்டங்களை வகுத்தனர்.

பசுமையாக மாற்ற திட்டம்


சிங்கப்பூர் நாட்டின் வளர்ச்சிக்கு, தொலைநோக்கு பார்வையும், சீரிய கொள்கைகளின் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தியதே முக்கிய காரணம் ஆகும். அந்த நாட்டில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் டன் திடக்கழிவில் இருந்து 20 மெகாவாட் மின்சாரம் தயாரித்து வருகிறார்கள். அத்துடன் நிலப் பரப்பில் 40 சதவீதம் பசுமையாக உள்ளதால் அவ்வப்போது அங்கு மழை பெய்து வருகிறது.

அது போன்று நமது மாநகராட்சி பகுதியிலும் பசுமை திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். முதற் கட்டமாக அவினாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, செஞ்சிலுவை சங்கம், கலெக்டர் அலுவலக வளாகம் ஆகியவற்றின் முன்பு காலியாக இருக்கும் இடங்களில் செடிகள் மற்றும் புற்களை வளர்த்து பசுமையாக மாற்ற உள்ளோம்.

குப்பையில் இருந்து மின்சாரம்


ரோட்டின் ஓரத்தில் மணல் பகுதியாக காணப்படுவதால் தூசி பறக்கிறது. அதை தடுக்க, மணல் பகுதியில் புற்களை அமைக்க உள்ளோம். அதுபோன்று கோவையில் உள்ள 8 குளங்களையும் மேம்படுத்தி அங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா, நடைபாதை, புற்கள், அழகுசெடிகள் ஆகியவை வைக்க உள்ளோம்.

கோவை மாநகராட்சியில் தினமும் 800 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அதில் 400 டன் குப்பை போக மீதி உள்ள 400 டன் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் குப்பையில்லா கோவையை உருவாக்கும் வகையில், மாநகராட்சி அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பொது இடங்களில் குப்பைகளை வீசக்கூடாது என்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

வ.உ.சி. பூங்கா

அத்துடன் வ.உ.சி. பூங்காவை நவீனப்படுத்துவதுடன், அங்கு அனைத்து வசதிகளும் வைக்கப்பட உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் 100 கி.மீட்டர் தூரத்துக்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட வேண்டும். இன்னும் ஒரு வருடத்தில் பணிகள் முடிந்து விடும். அதன்பின்னர் சாக்கடை நீர் தேங்கி, கொசுக்கள் உருவாகுவது முற்றிலும் தடுக்கப்படும்.

மேலும் மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் சர்வே விண்ணப்பம் கொடுக்கப்பட உள்ளது. அதில் தங்கள் பகுதியில் உள்ள நிறை, குறைகளை பொதுமக்கள் எழுதி கொடுக்கலாம். கோவை மாநகரை சிங்கப்பூருக்கு இணையாக மாற்ற, அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். அதற்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி தெரிவித்தார். அப்போது ஆணையாளர் லதா, துணை ஆணையாளர் சிவராசு ஆகியோர் உடன் இருந்தனர்.