Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பைகளிலிருந்து மண்புழு உரம் தயாரிக்க...100 டன் !பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் திட்டம்

Print PDF

தினமலர்        27.07.2013

குப்பைகளிலிருந்து மண்புழு உரம் தயாரிக்க...100 டன். பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் திட்டம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சிப்பகுதியில், சேகரமாகும் குப்பைகளிலிருந்து, 100 டன் மண்புழு உரம் தயாரிக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.பொள்ளாச்சி நகராட்சியில், தினசரி60 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும் குப்பைகள் நல்லூர் பகுதியில் உள்ள நகராட்சி குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. மக்களிடமிருந்து பெறப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. பின்னர், குப்பைக்கிடங்கில், குப்பைகள் இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.

இந்நிலையில், நகராட்சி பகுதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளில் சேகரமாகும் காய்கறிக்கழிவுகள், பழக்குடோன்களிலிருந்து கிடைக்கும் பழங்களின் கழிவுகள், உணவு விடுதிகளில் சேகரமாகும் உணவுக்கழிவுகள் ஆகியவற்றிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.இக்கழிவுகள் நகராட்சி 10வது சுகாதாரப்பிரிவு கட்டடத்திற்கு கொண்டு வரப்பட்டு, உலர வைக்கப்படுகின்றன.

பின்னர், மாட்டுச்சாணத்துடன் சேர்த்து அடுக்குகளாக பரப்பப்படுகிறது.முதல் அடுக்கு மண் மற்றும் தாவரக்கழிவுகளும், அதற்கு மேல் சாணம், தென்னை நார்க் கழிவுகள் அடுக்கப்படுகின்றன. காய்கறி, பழங்களின் கழிவுகள் துண்டுகளாக்கப்பட்டு, முறையான அளவு அடுக்குகளாக மாற்றப்படுகிறது. தினமும் மாட்டுச்சாணம் மற்றும் நீர் தெளித்து ஈரப்பதம் பராமரிக்கப்படுகிறது. 20 முதல் 30 நாட்கள் மக்க வைக்கப்பட்டு, மக்கிய குவியல்கள் மீண்டும் சரி செய்யப்பட்டு, அவற்றுக்குள் மண்புழுக்கள் விடப்படுகின்றன. மண்புழுக்கள் குப்பைக்கழிவுகளை உணவாக எடுத்துக்கொண்டு கழிவுகளை வெளியேற்றுகிறது.

தொடர்ந்து, 60 முதல் 120 நாட்கள் வரை பராமரிக்கப்பட்டு, மண்புழு உரமாக மாற்றப்படுகிறது. மூன்று நாட்கள் நீர் தெளிக்காமல் குவியல் வைக்கப்பட்டு, இவற்றிலிருந்து மண்புழுக்கள் எடுக்கப்படுகின்றன.பின்னர் உரம் சல்லடை மூலம் சலிக்கப்பட்டு தரமாக மண்புழு உரமாக மாற்றப்படுகிறது. இப்பணியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் மண்புழு உரங்கள் விவசாயிகளிடம் விற்பனைக்கு வழங்கப்படுகிறது.

"ஒரு கிலோ ரூ.25க்கு விற்க முடிவு'நகர் நல அலுவலர் (பொ) மாரியப்பன் கூறுகையில்,""பொள்ளாச்சி நகராட்சியில், மண்புழு உரம் 100 டன் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 25 மண் குவியில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு கிலோ மண்புழு உரம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கை முறையில் தயார் செய்யப்படும் மண்புழு உரத்தை பயன்படுத்த விவசாயிகள், பொதுமக்கள் முன்வர வேண்டும்,'' என்றார்.