Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை சரவணம்பட்டியில் காய்கறி கழிவுகளில் இருந்து எரிவாயு கூடம் அமைக்கும் பணி தீவிரம் மேயர் செ.ம.வேலுசாமி நேரில் ஆய்வு

Print PDF

தினத்தந்தி              16.08.2013

கோவை சரவணம்பட்டியில் காய்கறி கழிவுகளில் இருந்து எரிவாயு கூடம் அமைக்கும் பணி தீவிரம் மேயர் செ.ம.வேலுசாமி நேரில் ஆய்வு

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/velusamy.jpg
கோவை சரவணம்பட்டியில் ரூ.9½ லட்சம் செலவில் காய்கறி கழிவுகளில் இருந்து எரிவாயு கூடம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை மேயர் செ.ம.வேலுசாமி நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் முதன்முறையாக

கோவை மாநகராட்சி பகுதியில் மண்டல பகுதிக்கு 2 வீதம் 10 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் முதன்முறையாக கோவை சரவணம்பட்டி அம்மன் நகரில் உள்ள அம்மா உணவக வளாகத்தில் சரவணம்பட்டி மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த ஓட்டல்களில் இருந்து வெளியேற்றப்படும் காய்கறி கழிவுகளை கொண்டு (பயோ கியாஸ்) மீத்தேன் வாயு முறையில் எரிவாயு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க கோவை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கான டெண்டர்கள் கடந்த மாதம் விடப்பட்டு தற்போது அதன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி, ஆணையாளர் லதா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் மேயர் செ.ம.வேலுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

ரூ.9½ லட்சம் செலவில்

சரவணம்பட்டி அம்மன் நகரில் உள்ள அம்மா உணவகத்திற்கு மாதம் ஆயிரம் கிலோ எரிவாயு பயன்படுத்தபட்டு வருகிறது. இதனால் சரவணம்பட்டி மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் உள்ள காய்கறி கழிவுகளை கொண்டு மறு சுழற்சியின் மூலம் (பயோகியாஸ்) மீத்தேன் வாயு முறையில் எரிவாயு தயாரித்து பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்ததது. இதை தொடர்ந்து ரூ.9½ லட்சம் செலவில் காய்கறி கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் பணி டெண்டர் விடப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த தொழிற்சாலையின் மூலம் தினந்தோறும் 3 டன் காய்கறி கழிவுகளில் இருந்து 30 முதல் 50 கிலோ எரிவாயு தயாரிக்க முடியும். இந்த எரிவாயு தொழிற்சாலை தொடங்கப்பட்டு 3 மாதங்களில் அம்மா உணவகத்திற்கு தேவையான முழுமையான எரிபொருள் தேவையையும் பெறமுடியும்.

சமுதாய அடுப்பு அமைக்கும் பணி

முட்டை ஓடு மற்றும் வெங்காய சருகுகள் தவிர மற்ற காய்கறி கழிவுகள் முழுமையாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள காய்கறி கழிவுகள் முழுமையாக நீக்கப்படும் என்றும் மேலும் இந்த பயோகியாஸ் முறையில் 6–வது வார்டுக்கு உட்பட்ட காமராஜபுரத்தில் உள்ள 20 குடும்பங்கள் பயன்படுத்தும் வகையில் சமுதாய அடுப்பு அமைக்கும் பணியும், சொக்கபுதூர் பகுதியில் உள்ள மயானத்திற்கு பயோகியாஸ் முறையில் எரிபொருள் தயாரிக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது கிழக்கு மண்டல தலைவர் ஜெயராம், 31–வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாரிசெல்வன், மாநகராட்சி பொறியாளர் சுகுமார், கிழக்கு மண்டல நிர்வாக பொறியாளர் லட்சுமணன், சரவணம்பட்டி உதவி பொறியாளர் சத்தியமூர்த்தி மற்றும் 31–வது வார்டு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.